Saturday 28 February 2015

இயற்கையின் நியதி -4 (The Law of cause and effect.)

                                       

                                      இயற்கையின் நியதி - 4
                                                 (The Law of  cause and effect)  

புத்தர் ஒரு அரசனின் மகன்.ஒரு நாள் அவர் பார்த்த காட்சிகள் அவரை மிகவும் பாதித்தது.மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நோய், தள்ளாமை, துன்பம் என்று சிந்திக்கலானார் அதற்கு  விடை தேடிகாட்டிற்கு சென்று கடுந்தவம் செய்தார். ஆசையே துன்பங்களுக் கெல்லாம் காரணம் என்ற இயற்கையின் நியதியை உணர்ந்தார்.

ஆசைப் படுங்கள், ஆனால் உங்கள் ஆசை பிறரை பாதிக்கக் கூடாது.உங்கள் ஆசையில் நியாயம் (தர்மம்) இருக்க வேண்டும். உங்களது நியாயமில்லாத ஆசை, பிறரை பாதிக்கும் போது ஏதாவது ஒரு வழியில் துன்பம் வந்து சேருகிறது என்று அறிவுரை வழங்கினார். தனக்கு வந்த அரச பதவியை மறுத்தார். தனக்கு என்று ஒரே ஒரு செட் உடை மட்டுமே வைத்துக்கொண்டார்.  தினமும் ஒரு வீடு என்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

தன்னைப்போல் யாரும் கடும் தவம் புரிந்து வருத்திக்கொண்டு வாழ வேண்டாம். அதே சமயம் சுகபோகங்கள் தான் வாழ்க்கை என்று மனம் போன போக்கில் வாழவும் வேண்டாம், நியாயமான ஒரு மத்திய வழியில் வாழுங்கள், நல்லவனாய் இருங்கள், நன்மையாய்  இருங்கள்  என்று உபதேசித்தார்.

முதலில் தகுதி உடையவர்களாகுங்கள்  பிறகு ஆசைப் படுங்கள். முதலில் உங்கள் எல்கையை தெரிந்திருங்கள், பிறரது உரிமையை மதியுங்கள் அதன் பிறகு ஆசைப்படுங்கள்.

நமது மனம் போன போக்கில் சரி - தவறு,  பின்விளைவு எதையும் சிந்திக் காமல் நடப்பது   மகிழ்ச்சியாய் இருக்கிறது, ஆனால் நாளை அது செய்யும் பின்விளைவுகள் துன்பமாய் வந்து சேருகிறது இதை The Law of  cause and effect  எனலாம்.

சுயநலம் பின்விளைவை கருதாமல் போனால்-
         சுயநலம் பின் பலனை சிதைத்துவிட்டுப் போகும்
பரஸ்பரம் மரியாதையை தொடராமல் போனால்-
         பரஸ்பரம் தொடர்பு இல்லாமல் போகும்
உதவும்பொருளை பேணாமல் போனால்-
         பேணாத பொருள் உதவாமல் போகும்
மனசாட்சி தெய்வபயமற்று ஆணவமாய் போனால்-
         தெய்வநீதி மனசாட்சியற்று அமைதியாய் போகும்  

காரணமில்லாமல் எந்த காரியமும் இல்லை, காரணத்தை ஆராயும் போது தீர்வு காண்பது சுலபம்.காரணங்கள் தெரியாதபோது விதியே காரணமாகிறது.

                            ----------------------------------------------------------


     

இயற்கையின் நியதி -3 (The Law of Reciprocation)

                                              


                                         இயற்கையின் நியதி - 3
                                                       (The Law of Reciprocation)                         

 மனிதன் தான் நடத்தும் செயல் அதற்கேற்ப அடுத்தவர் தரும்  எதிர்ச்செயல் என்பது போல்   நம் கண்ணுக்குத்தெரியாமல் இந்த இயற்கையிலும்  மிக அமைதியாக பதிலுக்குப்பதில் என்பது நடந்து கொண்டிருக்கிறது. பதிலுக்கு பதில் என்பதை  இயற்கையும் செய்கிறது.

சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் திறந்த வெளியில், மர நிழலில் தங்கி, காய், கனி, கிழங்கு போன்றவை களை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தான் அவனால் இயற்கைக்கு எந்த தொந்தரவும் இல்லாதிருந்தது. அப்போது பெய்த மழை, தனக்குத்தானே ஆறுகளையும் நதி களையும் உருவாக்கி கொண்டது. அந்த அளவிற்கு மழை விடாமல் பெய்திருக்கிறது. இயற்கையான உணவுகளை மட்டும் மனிதன் உண்டு வந்தான். இயற்கை அவனுக்கு குளிரையும் வெப்பத்தையும் தாங்கும் சக்தியை கொடுத்தது. மருத்துவம் என்பது இல்லாதிருந்தது. நாகரீக உணவுகள் மனிதனுக்கு இளமையில் முதுமை நோய்களை பரிசாக கொடுக்கிறது. மனிதனுக்குரிய மருத்துவ மனைகள் பெருகிக்கொண்டு போகின்றன

மனிதன் இயற்கையை பாதிக்காமல் நடந்தது வரை இயற்கையும் அவனை பாதிக்கவில்லை.

நாம் நமது சொகுசுக்காக மரங்களை அழித்தோம் வானிலை ஒழுங்கற்ற தாக ஆகிவிட்டது.பெரிய, பெரிய ஆலைகளினாலும், கணக்கற்ற வாகனங் களினாலும்  பூமியின் ஆகாயப்பகுதியின்  வெப்பத்தை அதிகப்படுத்தினோம். அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து. துருவப் பகுதியிலுள்ள பனிப் பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன, இது மேலும் தொடர்ந்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலத்துக்குள் வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்  செயலுக்கேற்ப இயற்கையும் பதில் செயல் செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு நியதிக்கு உட்பட்டே நடக்கிறது அந்த நியதியை   The Law of Reciprocation  எனலாம்.

இதேபோல் மனிதருக்குள்ளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி, மதித்து நடக்கும் வரை அந்த உறவு அமைதியாக போய்க்கொண்டிருக்கும். அதில் யாராவது ஒருவர் முரண்பாடாக நடந்து பரஸ்பரத்தை பராமரிக்க வில்லை யானால் அந்த உறவில் குழப்பம் ஏற்படும். இயற்கையின்    The Law of Reciprocation அங்கு தனது வேலையை செய்யும்.

நடைமுறையைமதித்து, உண்மையாய், நன்மையாய், நியாயமாய் ஒருவருக் கொருவர்  பரஸ்பரம் நடக்கும் போது அந்த உறவை  The Law of Reciprocation  காப்பாற்றும்.

இதில்  யாராவது ஒருவர் அலட்சியமாய் நடந்து உண்மைக்கு பதில் சாமர்த்திய மாய் நடந்தால் அந்த உறவுக்குள் The Law of Reciprocation கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

பதிலுக்குப்பதில் செய்யும் உந்துதல் எல்லோருக்கும் உண்டு. நாம் ஒரு பொருளையோ, உதவியையோ, அலட்சியத்தையோ, மரியாதையையோ ஒருவருக்கு கொடுத்தால் அவரும் அதை திருப்பி செய்யவேண்டும் என்று நினைப்பார்.

சிலசமயம் பலனடைந்த பிறகு உதவியையும், உதவி செய்தவரையும் மறந்து விடுவார்.  எந்த  விஷயத்தில் பதிலுக்குப்பதில் செய்யவேண்டும் யாரிடமெல்லாம் பதிலுக்குப்பதில் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறுபவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
  
செய்யக்கூடாத நபரிடம் செய்யக்கூடாத விஷயத்தில் பதிலுக்குப்பதில் செய்வதால் சரி செய்யமுடியாத காயத்தை(  The Law of Reciprocation) ஏற்படுத்தும்.

தவறுவது மனித இயல்பு. செய்த தவறை நியாய வழியில் முடிவுக்கு கொண்டு
வரவேண்டியது அவரவர் பொறுப்பாகும்.

                                  --------------------------------







                

இயற்கையின் நியதி -2 (The Law of Compensation)



                                          இயற்கையின் நியதி -2
                                                          (The Law of Compensation)   

இயற்கையின் செயல் களை உற்று கவனித்தால் அதில்  ஒரு ஒழுங்கு இருப்பதை காணலாம்.

ஒரு மகிழ்ச்சிக்குப் பிறகு தோல்வியும், ஒரு பெரிய சிரமத்துக்கு பிறகு ஒரு நன்மையும் பல தடவை நமக்கு நடந்திருப்பதை பார்த்திருக்கலாம்.

 மாட்டு வண்டி இருந்த காலத்தில், மெதுவாக சென்றோம். காற்று சுத்தமாக இருந்தது.சுவசக்கோளாறு அவதி இல்லை. மோட்டார் வண்டி வந்த பிறகு வேகமாக செல்கிறோம்  காற்று மாசடைந்து ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதை போல் நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

இதெல்லாம் எதோ தற்செயலாய் நடக்கவில்லை.காரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்னும் சுழற்சியில் நடக்கும் ஒருஇயற்கையின் நியதி ஆகும்.இதை The Law of Compensation   எனலாம் .

ஒன்றை கொடுத்த இறைவன் மற்றொன்றை கொடுப்பதில்லை.திறமையை கொடுத்தவன், அழகை கொடுப்பதில்லை, அழகை கொடுத்தவன் குணத்தை கொடுப்பதில்லை, அழகையும் திறமையையும் கொடுத்தவன் ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. ஆரோக்கியத்தையும் திறமையையும் கொடுத்தவன் பணத்தை கொடுப்பதில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. ஈடு செய்யும் நியதிக்கு இதேபோல்  பலரிடம் பல உதாரணங்களை காண்கிறோம்..

அவரவருக்கு, அந்தந்த வீட்டுக்கு, அந்தந்த ஊருக்கு, அந்தந்த நாட்டுக்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு கொடுப்பினைகள்  நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. ஒன்று போகும் போது அதற்கு அதற்கு ஈடாக வேறொன்று வருகிறது. அல்லது ஒன்று வரும்போது ஏதோ ஒன்று போய் விடுகிறது வருவதற்கும் போவதற்கும் காரணங்கள் இருக்கிறது . .சிறிய நாடாக இருக்கும் ஆனால்  செழிப்பாக இருக்கும், விரிந்து பரந்த நாடாக இருக்கும் ஆனால்  பாலை வனமாக இருக்கும்.

அதிவேக வளர்ச்சி உடனடி வீழ்ச்சி (steep rise sudden fall) இறைவன் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பான் என்று  பழமொழிகள்  உண்டு. இது.
The Law of Compensation   செயலாகும்                        

இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு நாம் வளர வேண்டும், நமக்கு எல்லா வசதியும் வேண்டும்  நாம் என்ன தான்  செய்வது.

எல்லாவற்றிக்கும்  ஒரு விலை உண்டு. அதை இன்றோ, நாளையோ கொடுத்தே ஆகவேண்டும் இயற்கை ஈடு செய்யாமல் விடாது .ஆனால் அந்த விலை என்ன என்று நமக்கு தெரிவதில்லை. பலரும் பல விதமாக கொடுத்துக் கொண்டு தானிருக் கிறோம்.

இந்த  ஈடு செய்யும் நியதியை நாம் பல சமயம் பேசுகிறோம், இயற்கை சிலரை தண்டிப்பதையும் இயற்கை சிலரை தூக்கி விடுவதையும்  காண்கிறோம்.ஆனால் நமக்கு லாப மென்றால்  பல சமயம் நியதியை மறந்து விடுகிறோம். தீயவர்கள் சொகுசாய் இருப்பதற்கும் நல்லவர்கள் துன்பப்படு வதற்கும் காரணம் நமக்கு தெரிவதில்லை.

ஆனால் இயற்கையின் ஈடு செய்யும் நியதியானது   (The Law of Compensation)   ஒவ்வருவருக்காகவும் சதா வேலை செய்து கொண்டிருக்கிறது. யாருக்கு எந்த சமயம் என்ன நடக்கும் யாரறிவார். இதுதான் உண்மை .

நமக்கு வரவேண்டியவை எதுவானாலும் நியாயமான வழியில் வரவேண்டும். நமக்கு இருக்கும் நல்லவைகளை காப்பாற்றிக் கொள்ள       நமது சுயநலத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் The Law of Compensation   நமக்கு சொல்லும் பாடம்.

எளிமை, உழைப்பு, கடமை, நியாயம், அவசரத்துக்கு உதவி என நடந்து, தெரிந்தும் தெரியாமலும் நடந்த தவறுகளை மன்னிக்க வேண்டும், மீண்டும்   தவறு செய்யாதபடிஎன்னை  தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டி ,    
The Law of Compensation - ஐ வணங்குவோம்.

                                        -------------------------------------------

                                                                     

Friday 27 February 2015

இயற்கையின் நியதி -1 (The Law of Harmony )




                                         இயற்கையின் நியதி - 1
                                     (The Law of Harmony )                             

இந்த உலகமும்,இந்த பிரபஞ்சமுமான இந்த இயற்கை ஏதோ தாறுமாறாக இயங்கவில்லை .

அது ஒரு சட்டம்-ஒழுங்கில் கரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்கிற சுழற்சியில், மாறுதல்களை அடைந்துகொண்டே போகிறது.

மாறுதல் என்பது மட்டும்  நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது.

இயற்கையில் நடக்கும் பல்வேறு செயல்களை காணும் மனிதன் இந்த செயல்களெல்லாம் சில  நியதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது என்று உணர்ந்து அவைகளில் தெளிவு படுகிறான்.அவைகளை இயற்கையின் நியதிகள் என்கிறான்.      

ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியில் வித்தியாசமாக ஒலி எழுப்பும் பல இசைக்கருவி களை ஒரே நேரத்தில் உபயோகப்படுத்தி ஒரு இனிமையான இசையை,பாடலை  நமக்குத் தருகிறார்கள்.  வாய்ப்பாட்டுடன், வயலின், மிருதங்கம்,கடம், தம்புரா, ஹார்மோனியம் என பல வித்தியாசமான கருவிகளை ஒரு ஒற்றுமையோடு வாசிப்பதில் அனைத்து கலைஞர்களும் ஒரே மனதுடனும், முழுமனதுடனும் உழைக்கிறார்கள் அவரவர் இஷ்டப்படி ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் வாசித்தால் அதை யாரும் கவனிக்கப்போகிறது இல்லை

பல வித்தியாசங்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருந்தால் பலன் தானே வரும் என்பதுதான் இந்த இயற்கையின் நியதி,  இதை Law of Harmony எனலாம்.

 நீர், வெப்பம், காற்று, நிலம், ஆகாயம் என ஐந்து வித்தியாச மான பொருட்கள் ஒரு ஒற்றுமையான நிலையில் இருக்கும் போது அங்கு உயிரினங்கள் தோன்றுகிறது.  The Law of Harmony என்னும் இயற்கையின் நியதி நடக்கிறது.

நான்கு விளையாட்டு வீரர்கள் நான்கு விதமான குணங்களுடன் இருக்கிறார்கள் அவர்கள் ஒரு அணியாக விளையாடும் போது நம் அணி தான் வெற்றி பெறவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளில் விளையாடினால் தான் வெற்றி பெறமுடியும்.அதற்காக  The Law of Harmony   வேலை செய்யும்.

அதேபோல் ஒரு குழுவில், அல்லது ஒரு குடும்பத்தில் உள்ள வித்தியாச குணமுடைய  அத்தனை பேரும் தங்களுக்குள் ஒரு பொது குறிக்கோளை ஏற்படுத்திக்கொண்டு அது லாபம், வளர்ச்சி, ஒற்றுமை, உறவு தான் முக்கியம்,   என எதுவாகவும் இருக்கலாம். அனைவரும் முழு மனதுடனும் ,அதே கவனத்துடனும் இருந்தால் அவர்களது குறிக்கோளை  The Law of Harmony  என்கிற இயற்கையின் நியதி நிறை வேற்றித் தரும்

நானே மேலானவன், சுயநலம், பொறாமை, ஏமாற்று, ஆதிக்கம், என்கிற உந்துதல்களுடன் ஒருவர் உறவாடினால்கூட   The Law of Harmony என்னும் இயற்கையின் நியதியால் அந்த குழுவிற்கு பலன் கிடைக்காது..

                                     -------------------------------------

                                               

Thursday 26 February 2015

சுயமுன்னேற்றம்

                                        

                           
                                          சுயமுன்னேற்றம் 



நமது தோல்வி, பிரச்சினைகளுக்கு  சுயமுன்னேற்றக் கல்வி, மற்றும் பயிற்சிகளில் நாம் பின் தங்கி இருப்பதும் ஒரு  காரணம்

நமது  சிந்திப்பதில், செய்கையில், குணங்களில் இருக்கும் பலவீனங்களை கண்டுபிடிக்க நாம் விருப்பமுள்வர்களாய் இருக்கவேண்டும்

வெற்றியாளர்கள் எப்பொழுதும் பகுத்தறிந்து  நடைமுறைக்கு சாத்திய மானதை, சரியான, நியாயமான வழியில் செய்ய நினைக்கிறார்கள்.

வெற்றி என்பது என்ன.  பணம் சம்பாதிப்பது, அரசியலில் அதிகாரம் அடைவது, பெயரும் புகழும், கண்டுபிடிப்பது என பலருக்கும் பலவாக இருக்கிறது.

வாழ்க்கையில் நமது நோக்கத்தை அடைவது மட்டும் முக்கியமில்லை.அந்த வெற்றி நமது திருப்தியையும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தவேண்டும் அதுதான் உண்மையில் வெற்றி.

வெற்றி என்பது நம்மை சுற்றி இருக்கும் பலபேருடைய நேரடி, மறைமுக ஒத்துழைப்பாகும் .

வெற்றியானது  மனஅமைதியையும், மகிழ்ச்சியையும் தரவில்லையானால் அந்த வெற்றிக்கு அர்த்தமேயில்லை 

நாம் சாதிக்க வேண்டும். அந்த வெற்றி, மனஅமைதி, மகிழ்ச்சி எல்லாம் சமநிலையில் தொடர வேண்டும் அதுதான் உண்மையில் சாதனை.

நமக்கு பணம், புகழ், மரியாதை எல்லாம் வேண்டும் ஆனால் அவைகள் நமக்கு நலத்தையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் உண்மையிலேயே தர வேண்டும் 

பொதுவாக நாம் வெற்றி தோல்வி என்பதை பணத்தை வைத்துதான் பேசுகிறோம். பணத்தை தான்  நாம் வெற்றி என்று குழம்பி பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்கிறோம்   

பணத்தை அடைய தெரிந்த  வழிகளில் எல்லாம் ஓடுகிறோம். அதனால் மனஅழுத்தம், சச்சரவு, பகை,, அசௌகரியம், பிரச்சினை,  அமைதியின்மை போன்றவைகளை வரவழைத்துக் கொள்கிறோம் 

வெற்றிக்காக உழைக்கும் போதும், வெற்றி வந்தபின்பும் மகிழ்ச்சியாயிருக்க நமக்கு ஆரோக்கியமான உடலும், ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும் 

நாம் எல்லோரும் மனித இனம். படைப்பில் அனைவரும் சமம். ஆனால் ஒவ்வருவரின் செயல்களிலும், குணங்களிலும் மாற்றங்கள் காணப்படுகிறது. அதற்கு அவரவர் ஆழ்மனதிலிருந்து எழும் எண்ண உந்துதல்கள் தான் காரணம்.

தன்னுடைய வாழ்க்கையில் இப்படி, இப்படி யெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தூண்டுதலானது அவரவருக்குள் இருக்கும் சக்திவாய்ந்த அழுத்தமாகும் என்பதை  நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.     

வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமானால் மனதின் இந்த சக்தியை நாம் அறிந்துகொள்ள முயற்சிக்க  வேண்டும். நம் ஒவ்வருவரிடமும் இந்த மனசக்தி இருக்கிறது .

பிறருடனான நம் உறவானது பரஸ்பரம் அடிப்படையில் நாம்  செய்து கொள்ளும் மனதின் செயல்களாலும்  மனதின் எதிர் செயல்களாலும் ஆனது.

நமக்கு நமது மனமும், அதில் இருக்கும் உந்துதல் படி நாம் நடப்பதுபோல் நம்மை சுற்றி இருப்பவர்  அவர் மனமும் அதில் இருக்கும் உந்துதல்  படி அவர் நடப்பார், என்பதை  நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்

விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, சோகம், ஆவேசம், சாந்தம், தற்காப்பு, தாக்குதல், பொறாமை, பயம் குடும்ப வழக்கம் உணர்ச்சிகள், ஆசைகள் போன்றவை எல்லாம் மனத்துள் மறைந்து, புதைந்து கிடந்தது ஏதாவது வழியில் நம்மை செயல் படுத்தும் மிக சக்தி வாய்ந்த உந்துதல்களாகும். மனதின் இந்த நுட்பம் பற்றி பெரும்பாலனவர் கட்க்கு தெரியாது
.
ஒருவரின் வெளியில் தெரியும்  குணங்களுக்கு பின்னால் இருந்து மிக வலிமையான  மனோசக்தி அவரை இயக்குகிறது  நமது திறமை, நமக்கு கிடைக்கும் பிறரின்  ஒத்துழைப்பு, உதவி இவைகளை பொறுத்தே வெற்றி அமைகிறது.

நம்மை சுற்றியுள்ள நல்லவர்கள்  மனதில் நம்மைப் பற்றியுள்ள எண்ணங்களைப்  பற்றி நாம் சிந்திக்கவேண்டும்

ஒவ்வருவரின் தனித்தன்மையையும்  நான்கு பாகமாக பிரிக்கலாம்

1.தன்னைப்பற்றி தனக்கு தெரிந்தவைகளும் பிறருக்கு தெரியாதவைகளும்

2 தன்னைப்பற்றி தனக்கும் பிறருக்கும்தெரிந்தவைகள்

3.தன்னைப்பற்றி தனக்குதெரியாதவைகளும் ஆனால் பிறருக்கு      தெரிந்தவைகளும்

4.தன்னைப்பற்றி தனக்கும் தெரியாத பிறருக்கும் தெரியாதவைகள்

இந்த நான்காவது பாகம் முழுவதும் விருப்பு  வெறுப்பு ஏக்கம் ஆவேசம் பேராசை போன்ற பலவித மான உணர்வுகள் மறைந்து கிடந்து உந்துதல்களை கொடுத்து  ஒருவரின்நல்ல அல்லது மோசமான குணங்களுக்கு காரணமாக இருக்கிறது

முடிவாக நாம் அறியாத நமக்குத் தெரியாத சக்திவாய்ந்தமறைந்து கிடக்கும்   மன உந்துதல் களே வெற்றி தோல்விக்கு முக்கியகாரணமாக இருக்கிறது

நம்மைப்பற்றி வெளிப்படையாக நமக்கு தெரிந்த  உந்துதல்கள் 10% தான். நம்மைப்பற்றி நமக்கு தெரியாமல் நம்முள் மறைந்து கிடக்கும் உந்துதல்கள் 90%. இந்த ஆழ்மன உந்துதல்கள் தான் நம்மில் பலபேரை பணமும் மகிழ்ச்சியும் உடைய முழு வெற்றியை அடையவிடாமல் கெடுத்துவிடுகிறது

நாம் நம் மனதை  ப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.நாம் பிறரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் .பிறருடன் உள்ள நமது உறவை ஆரோக்கியமானதாக ஆக்க வேண்டும்

நாம் நம்மை சுற்றி இருப்பவர்களை  எவ்வாறு முக்கியமாய் நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி இருக்கிறது.அவர்கள் மனதில் நம்மைப்பற்றி நல்லெண்ணங்களை ஏற்படுத்த வேண்டும்.

திறமை,பணம்,இரக்ககுணம் போன்றவை மட்டும் வெற்றியை தராது

அன்பு,நேர்மை,பக்தி,அர்ப்பணிப்பு,உந்துதல்கள்,சாந்தம்,சமாதனம்,
போராட்டம், ஆவேசம், ஆணவம், சுயநலம், சுயவிசாரணை, நோக்கம், நன்னடத்தை,மனமுறிவு, பயம்,பதட்டம்,முன்தீர்மானம், பொறாமை,போன்ற பல உணர்வுகளும் முழுக்க  முழுக்க மனம் சம்பந்தப்பட்டவை.

எந்த ஒரு கணிதமோ, இயந்திரமோ இந்த மன பிரச்சினைகளை சரிப்படுத்தாது

பணமோ,விஞ்ஞானசாதனைகளோ மன அமைதியை, மகிழ்ச்சியை  தந்து விடாது.

ஒரு மனிதனால் மட்டுமே சிக்கலான மனதை ஆராய்ந்து சரிப்படுத்த முடியும். ஒருவன் செய்யும் எந்த வொரு செயலும் அவனை சுற்றியிருப்பவர்களை பாதிக்ககூடாது. அவனுடைய செயல்கள் அவர்களுக்கு திருப்தி தருவதாக இருக்க வேண்டும்
.
பல பேருடைய தோல்விக்கும்,வேதனைக்கும் காரணம் தன்னால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்பு களை அவர்கள் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பதில்லை

நம்முடைய செயல்களை நாமே ஆராய்ந்து அதனை  சிறிது வித்தியாசப்படுத்தி செய்ய ப்பழகவேண்டும்.

இதன்படி நாம் நம்மை சுற்றி யிருப்பவர்களிடம் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.     .

நமது செயல்களின் மேல்  நமக்கு இருக்கும் விழிப்புணர்வே நமக்கு உண்மையான வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொடுத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.

உளவியல் ஆலோசகர்கள் ,மற்றும் சுயமுனேற்ற பயிற்சியாளர்கள் நடத்தும் மனத்தின் நுட்பம் பற்றிய பயிற்சியில் கிழ்க்கண்ட பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன

1.மனதின் நுட்பம் ( Id-Ego-Super ego,the mechanism of the mind.)

2.மனதின் மூன்று நிலைகள் ( Parent ego,Adult ego,Child ego.)

3.சதா பிறருடன் ஒப்பிடுதல் (I am ok-You are ok;         I am ok-You are not ok;
                                                            I am not ok-You are ok;    I am not ok-You are not ok)
4.மூன்று குணாதிசயங்கள்   ( The dominator,   The sufferer,    The rescuer)

5.மனதின் இயற்கையான பாதுகாப்பு நுட்பம் (Natural defence mechanism of the mind.)

6.முரட்டு குணம்  (sadist,masochist,insanity,criminality,pervert etc.,)

மனதில்  நியாயமான, தர்க்கவாத விசாரணை செய்து நம் மனதினுள் இருக்கும் ஆணவம், ஆதிக்கம், சுயநலம், பதிலுக்குப்பதில், பொறாமை, சாமர்த்திய பேச்சு, பொய் போன்ற உந்துதல்களை  அடையாளம் காணவேண்டும். அவை பிறரை பாதிக்கும் போது அவருடனான உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் உண்மை  என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

எனவே நியாயமில்லாத மன உந்துதல்களை கண்டறிந்து  நம் மனதினுள் இருந்து வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருக்கமான தொடர்புடையது. நமது குணம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டு மானால் நமக்கு ஆரோக்கியமான உடலும் ஆரோக்கியமான மனமும் அதில் ஆரோக்கியமான எண்ணங்களும் இருக்கவேண்டும்.

ஆரோக்கியமான உடலுக்குரிய கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமான மனதிற்குரிய பயிற்சி களை  நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

இன்பங்கள் பலவிதம். நாம் எல்லோரும் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.நமக்குகீழ் உள்ளவர்களை திட்டுகிறோம்,தண்டிக்கிறோம்,
அலட்சியப்படுத்துகிறோம், ஏமாற்றுகிறோம், உபதேசம் செய்கிறோம், நமது தவறுகளை மன்னித்துக் கொள்கிறோம், பிறரிடம்  சாமர்த்தியம் பேசி தப்பித்துக் கொள்கிறோம். இப்படி பல வகையில் நமக்குள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது குற்றச்சாட்டுகள்  ஒரு விளையாட்டை போன்றது.  நமது செயலும் நமது எதிர்ச்செயலும் விளையாட்டுக்கான  கருவியைப் போன்றது நமது நோக்கம் எப்படியாவது நாம் வெற்றிபெற்று விடவேண்டும் என்பதுதான் ஆனால் உண்மைக்கு இடமில்லாத வாதங்களால் பாதிக்க பட்டவருக்கு   மனக்கஷ்டம்   தான் மிஞ்சுகிறது.உறவு பலவீனப்படுகிறது .                                                                  

நம்மில்  முழுநிறைவானவர் என்று யாரும் கிடையாது.இருக்கவும் முடியாது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல காரணங்கள் நம்மை சுற்றியிருந்து நமது வாழ்க்கையை கடினமாக்குகிறது. நற்குணமில்லாத அதிகாரி, உதவியாளர், கணவன், மனைவி, உறவினர், பொறாமைபிடித்த எதிரிகள், மாறிவிட்ட நண்பர்கள், பூகம்பம், விபத்து, கலவரம் போன்ற பல காரணங் களால் நாம் சமநிலையை இழக்கிறோம்.

நாம் எல்லோருமே எப்போதும் மகிழ்ச்சியுடனோ, அல்லது எப்போதும் சோகமாகவோ இருப்பதில்லை. நாம் அனைவரும்  மனஅழுத்தம், பதட்டம்,தவிப்பு,பயம்,தோல்வி போன்ற வற்றால் பாதிக்க கூடியவர்கள்.நமது மனமானது  மகிழ்ச்சிக்கும், மனச் சோர்வுக்கும் இடையில் மாறிக்கொண்டிருக்கும் .

நமக்கு நாம் நினைத்தது போல் எல்லாம் கிடைத்து, அந்த வெற்றியின் தாக்கத்தால்  பிரச்சினைகளை சரியாக கையாளாமல் நமக்கு உதவியவர் களையும், நெருங்கியவர் களையும் பகைத்து  மன அமைதியை இழப்பதால் என்ன லாபம்.

மரியாதை என்பது நானே மேலானவன் என்கிற எண்ணம் இல்லாமல் ஒருவருக்கொருவர் தேவை, உரிமைகளை பரஸ்பரம் மதித்து  அதில் சாமர்த்தியம் பேசாமல் உண்மையாக செய்வதாகும்.

 நாம் நமது வாழ்க்கையை விரும்பவும், மதிக்கவும் வேண்டும்.
அதேபோல்  பிறரது வாழ்க்கையை விரும்பவும், மதிக்கவும் வேண்டும்.இதை அறிந்து நடப்பவர்கள்  வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் .



https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y79UJhcSt1s#t=2014


Tuesday 24 February 2015

தத்துவம்

                                          

                                    தத்துவம் 

தான் செய்தது என்ன, தனது சூழ்நிலை செய்தது என்ன, உண்மையில் செய்திருக்க வேண்டியது என்ன என மூன்று கோணங்களிலிருந்தும்  விசாரிப்பதே  சரியான அணுகுமுறையாகும்  

உன்னுடைய தேவைகள் என்ன, சக படைப்புகளின் உரிமை என்ன நியாயமாய் நடக்க வேண்டியதின் அவசியம் என்ன என்பதே கற்க வேண்டிய கல்வி .

காரணம் என்ன, பின் விளைவுகள் என்ன, கட்டுப்பாடுகள் என்ன என ஆராய்ந்து செயல் படுவதே தற்காப்பு

பிறரிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது என்ன, பிறர் செய்தது என்ன, தன்னால் அல்லது பிறரால் ஏற்பட்ட முரண்பாடு என்ன என்று சிந்தித்து பார்த்தால் பிரச்சினைகள் தெளிவாகும்

நடந்தது என்ன நடைமுறை என்ன நியாயம் என்ன என்று சிந்தித்து பார்த்தால் சரி தவறு புரியும்

நமது எல்கை எது பிறர் உரிமை எது இதை நாம் மதித்து  நடக்கவேண்டும் என்பதே சுயக்கட்டுப்பாடு

செய்ய த்தக்கது என்ன செய்யத்தகாதது என்ன தன மனம் போகும் போக்கு என்ன என்று தன்னை சதா கண்காணித்து கட்டுப்பட்டு நடப்பதே பொறுமை

பிரச்சினை என்ன, முடிவு என்ன வேண்டும்,   அதற்குரிய பல தீர்வுகள் என்ன அதில் சிறந்த தீர்வு எது என ஆராய்ந்து அதைச் செய்வதே பிரச்சினையை தீர்க்கும் சரியான வழியாகும்.

செய்ய வேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன செய்தே ஆகவேண்டியது என்ன என சிந்தித்து செய்தால் தவறுகள் குறையும் .

தன்னை காப்பாற்றிக்கொள்வதும், தன்னை சரிப்படுத்திகொள்வதும், தன்னை பிறருக்கு பயனாக்கி கொள்வதும் தன்னுடை கடமைகள் என்று நடக்கவேண்டும்

எளிமை, கட்டுப்பாடு, மனிதாபிமானம், நியாயம்  இவை களை கடைபிடித்து வாழும்வரை மனிதன் குற்றவாளி ஆவதில்லை

உடல் இயங்கும் விதம், மனம் இயங்கும் விதம், இயற்கை இயங்கும் விதம் இவைகளை புரிந்து அதன்படி வாழ்ந்தால் உலகமும் ஆரோக்கியமாய் வாழும்

விருப்பு -வெறுப்பால் மனிதன் செயல்படுகிறான், அதிலுள்ள சரி-தவறை நியாயம் பார்க்கிறது, அதற்கேற்ப சூழ்நிலைகளை சாதக-பாதகமாய் காலம் கொண்டுவந்து நிறுத்துகிறது

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.காரணங்களை விசாரியுங்கள் உண்மையான காரணம் தெரியும்போது பரிகாரம் காண்பது சுலபம் .

நியாயமே இயற்கையின் சாரம். நியாயமாய் நடப்பதே வலிமை ,நியாயத்துக்கு பணிவதே உயர்வு, நியாயத்தை மறுப்பது ஆபத்து .

மனத்தை  அன்பு, கவர்ச்சி, சுகம் முதலியன எளிதில் ஈர்த்து விடும். மனதிற்கு உண்மை, பொய் பற்றி கவலையில்லை. மனம் தனது நம்பிக்கையை செயலாக்க முந்துகிறது. உலக சுகங்களை பெரிய பாக்கியம் என்று ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

பரஸ்பரம் மரியாதையால் ஒற்றுமை நிலைக்கும். ஒற்றுமைஅழிய சுயநலமே காரணம்.  நியாயமாய் நடப்பதே ஒற்றுமைக்கு வழி. தவறை திருத்திக் கொள்வதே ஒற்றுமைக்கு நல்லது.

பணமிருந்தால் மகிழ்ச்சி நிச்சயமில்லை, பணமில்லா விட்டால் சோகம் நிச்சயம், சட்டம், ஒழுங்கை மதிக்காத வளர்ச்சி நெருக்கடியில் கொண்டு நிறுத்தும் .

உதவியும் மரியாதையும் ஒருவழிப்பாதையல்ல. உண்மையும் நியாயமும் உறவுக்கு நல்லது

போலித்தனம் உங்களை காட்டிக்கொடுத்துவிடும், சாமர்த்தியபேச்சு உங்களை குற்றவாளியாக்கிவிடும். சுயநலம்  உறவுகளை பிரித்து விடும், யாரை நம்பியும் யாரும் இல்லை.

விதி வலிமையானது. முயற்சி  வலிமையானது. பரிகாரம் வலிமையானது
இவைகளுக்கு மேலாக பிரார்த்தனை வலிமையானது.

விதி என்பது நியாயத்தின் தீர்ப்பு, விதிக்கு பரிகாரம் வலிய சென்று உதவுவது, விதிக்கு மருந்து விடாமுயற்சி, விதியை தணிக்க பிரார்த்தனை உதவும்

அநியாயத்தை மக்கள் கண்டிக்கிறார்கள்,சட்டம் தண்டிக்கிறது,அநியாயத்துக்கு இயற்கை ஒத்துழைப்பதில்லை, காலம் கருணை காட்டமறுக்கிறது

கடவுளே நான் உன்னைச்சார்ந்தவன் ,நான் உன்னிடம் சரணடைகிறேன், சதா எனக்கு நல்லெண்ணங்களையும்  நல்ல சூழ்நிலையையும் தந்து உதவுங்கள் என்பதே பிரார்த்தனை

                                           ------------------------------------------

Monday 23 February 2015

மனத்தின் குணம்

                            மனத்தின் குணம் 

இதுவரை பார்த்தது கேட்டது அனுபவித்தது நம்பியது இதுதான் மனம்
மனம் மூளையின ஆரோக்கியத்தைப்  பொறுத்து உடலை செயல் படுத்துகிறது
சுகத்தின்,ருசியின்  அடிமையாகும்
பாராட்டுக்கு  ஏங்கும்
நானே மேலானவன் என்று நடக்கும்
நிலை மாறும் போது குணம் மாறும்
கெஞ்சினால் மிஞ்சும் ,மிஞ்சினால் கெஞ்சும்
யூகிப்பதை விசாரிக்காமல் நம்பும்
கேள்விப்படுவதை விசாரிக்காமல் நம்பும்
மிகைப்படுத்திப்பேசும்
நோக்கத்தை அடைந்தபிறகும் திருப்திபடாமல் தாவிக்கொண்டிருக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் தன்போக்கில் போகும்
நான் ,என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
ஆசையாலும் கோபத்தாலும் கிளர்ச்சிவயப்பட்டு தன்னிலை  மறக்கும்
 வலி,அவமானம் ,தண்டனைக்கு பயப்படும்
பயிற்சிகளை மறக்காமல் நினைவில் கொள்ளும்
வைராக்கியத்தை நிறைவேற்றிப்  பார்க்க வழி தேடும்
பசியாய் இருக்கும் போது  பொறுமையாய் இராது
சதா பிறரை மதிப்பீடுசெய்து கொண்டே இருக்கும்
தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்
அக்கரை பச்சையை உயர்வாய் யூகிக்கும்
குற்ற உணர்வால் நிம்மதி இழக்கும்
மகிழ்ச்சி ,அமைதி வேண்டி தவிக்கும்
அதிர்ச்சி செய்தியால் சில சமயம் இதயத்துடிப்பை நிறுத்திவிடும்.
உள்ளுக்குள் நினைப் பதை வெளியே பார்க்க முயற்சி செய்யும்
உண்மை-பொய்  பற்றிக்கவலைப்படாமல் தன் நம்பிக்கையை செயல்படுத்தும்.
பதட்டத்தாலும்,கவலையாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்
பின்விளைவுகளை யோசிக்காமல் செயல் படும்
காரணங்களை விசாரிக்காமல் அவசரப்படும்
நியாயத்தைப் பற்றி க்கவலைப்படாமல்சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்து கொள்ளும்.
இயற்கை நியதிகளின் வலிமையை அறியாமல் நானேமேலானவன்என்று நடக்கும்
உடல் களைப்படையும் போது மனமும் களைப்படையும்.
வெற்றியின் உயரத்தில் போன மனம் கீழேவிழும்போது தத்துவத்தை தேடும்
தோல்வி இழப்பால் துவண்ட மனதை தத்துவம் தான் சரிப்படுத்தும்
மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே.
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்
செத்தாரைப்போல் திரிமனமே
உலக சுகங்களை பெரிய பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்..
உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை சிறப்பாக்கி, மூளையை தூண்டி மனதை உற்சாகபடுத்துகிறது
உறக்கம்,பிடித்த இசை,புத்தகம்,பொழுதுபோக்கு போன்றவை மனதை புத்துணர்ச்சி படுத்தும்
சதாநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனதின் மறுபக்கத்தின் திறவுகோல்தான் தியானம்
நிமிர்ந்திருந்து கண்களை மூடி சிந்தனை களை நிறுத்தி ஏகாந்த பேரமைதியாய் இருப்பதே தியானம். அவரவர் வைராக்கியம் மற்றும் பயிற்சியின் தீவீரத்தை பொறுத்து மனத்தின் வழியாக  ஆன்மீக அனுபவங்களை பெறலாம்.

உண்மையென்று உணர்ந்த சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து திரும்ப, திரும்ப சொல்லிகொண்டிருப்பது சரியான ஒரு மனப்பயிற்சியாகும்.

மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்.
                               --------------------------------------------------    

Sunday 22 February 2015

மனிதனும் தவறும்

                                   மனிதனும் தவறும் 

தவறு செய்வது மனித இயல்பு .

தவறுகள் பல விதம் 

தவறு களுக்கு காரணம் உண்டு .

தவறுகளுக்கு பின்விளைவுகள் உண்டு. 

தவறுகளுக்கு பரிகாரம் உண்டு.

சில தவறுகளுக்கு மன்னிப்பும், சில தவறுகளுக்கு தண்டனையும்  

உண்டு. 

சிலருடைய தவறுகளுக்கு மன்னிப்பும், சிலருடைய தவறுகளுக்கு 

தண்டனையும்  உண்டு

நமது தவறுகள்  நமக்குத்  தெரியாது 

மது தவறுகளை எளிதில் மறந்து விடுகிறோம் 

 நமது தவறுகளை எளிதாய் எடுத்துக் கொள்கிறோம்

 நமது தவறுகளை நாம் பெரிது படுத்திக்கொள்வதில்லை

 நமது தவறுகளின் காரணங்களை நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை 

நமது தவறுகளுக்கு எதிர்ப்பு இல்லாதபோது தொடர்ந்து செய்கிறோம் 

நமது தவறுகளை மறந்து நடக்கிறோம் 

நமது மனதை சமாதானம் செய்து சில சமயம் தவறு செய்கிறோம் 

நமது தவறைஒரு வேளை உணர்ந்தால் அதை நினைத்து குற்ற

உணர்வால் வேதனைப்படுகிறோம் 

நமது தவறை மறைக்க பாதிக்க பட்டவனையே குற்றவாளி 

யாக்குகிறோம் . 

நமது தவறுகளுக்கு எதிர்ப்பு ஏற்படும்போது சாமர்த்தியம் பேசி

தப்பிக்கிறோம்

 நமது தவறுகளின் பின்விளைவுகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாது

நமது தவறுகளுக்குரிய தண்டனை கிடைக்கும் போது துன்பப்படுகிறோம்

 நமது தவறுகளை உணர்ந்து நம்மை சரிபடுத்திக்கொள்வது அதிசயம்

நமது தவறால் பிறருக்கு ஏற்ப்பட்ட பாதிப்பிர்க்காக வருந்துவது அபூர்வம்

நமது தவறை உணர்ந்து, ஏற்று, பரிகாரம் செய்வது ஆச்சரியமான குணம் 

தன் தவறு களை உணர்பவர்களுக்கு பிரச்சினைகள் குறைவு 

தவறை உணர்ந்தால் தவறு பாதியாக குறையும்.

தவறை நியாயப்படுத்தினால் தவறு இரட்டிப்பாகும்.

மேலும் கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

பழசிற்கு பரிகாரத்தைவிட, புதுசு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவறை செய்தவனும் நியாயம் கேட்கிறான்.அந்த தவறால் பாதிக்கப் 

பட்டவனும் நியாயம் கேட்டு அலைகிறான்.

தெரியாமல் செய்த தவறுகளை பெரிது படுத்தாமல் விடவேண்டும்

அடிக்கடி தவறு செய்தால் உணர்த்த வேண்டும்

செய்த தவறுக்கு வருந்தினால் மன்னிக்கவேண்டும்

தொடர்ந்து தவறு செய்தால் கண்டிக்கவேண்டும்

தெரிந்தே திட்ட மிட்டு தவறு செய்தால் துண்டிக்கவேண்டும்

நடந்த தவறுகளுக்கு வருந்தி உண்மையிலேயே சமாதானம் பேசும் போது 

ஏற்றுக்கொள்ளவேண்டும்

நடந்த பிரச்சினை களுக்கு நான் எந்த  அளவு காரணம் என்று நேர்மையாக 

தனக்குத்தானே பல கேள்விகளை கேட்டு சுய விசாரணை செய்து 

பார்க்கும் போதுதான் பிரச்சனையில் ன்னுடைய பங்கு என்ன என்பது 

புரியு ம். அப்போது தான் தனக்குள் வருத்தம் ஏற்பட்டு திருந்த த்தோன்றும் . 


நமது வாழ்க்கையிலும், மகிழ்ச்சியிலும், அக்கறை உள்ளவர்கள் நம்முடைய 

தவறுகளை கூறும்போது தர்க்கம் பேசாமல் கேட்கவேண்டும்.


(தன தவறுகளை தனக்கு உறைக்கும் படி கூற ஆள் இல்லாத திறமையான

அரசன் தன்னை கெடுக்க யாரும் இல்லாத போதும் தன தவறுகளாலே

கெட்டுப் போவான் என்கிறார் வள்ளுவர் .குறள் 448.)

நேர்மையான சுயவிசாரணை செய்து பார்க்காதவரை தன்னுள் 

மறைந்து கிடக்கும் நானே மேலானவன்,நான் சொல்வதே சரி,நான் செய்ததே 

சரி என்கிற தற்காப்பு உணர்வுகள் சாமர்த்தியம் பேசி தவறை நியாயப் 

படுத்தும்.பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கும்.பிரச்சினைகள் தொடரும்.

நமது தவறுகளால் பாதிக்கப்படப்போவது யார் யார், யாருடைய மனக்கஷ்ட 

ங்களுக்கெல்லாம் நாம் காரணமாகி விட்டோம் என சிந்தித்தால் மனம்

வருந்தும்.வருந்திய மனம் தான் திருந்தும்.


----------------------------------------------------





------------------------------------------------------------------

Saturday 21 February 2015

இயற்கையின் நியதிகள் ( THE LAWS OF NATURE )


                               
                                         இயற்கையின் நியதி 

மனிதன் ஏற்படுத்திய சட்டமாகட்டும், இயற்கை ஏற்படுத்திய சட்டமாகட்டும் சட்டம் பற்றி தெரியாது என்பதால் மன்னிப்புக் கிடையாது. மனித சட்டங்களை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ், வழக்குரைஞர், நீதிபதி என மனிதர்கள் இருக்கிறார்கள். இயற்கைன் நியதி களை மீறுபவர்களை கண்காணிக்க பாதிக்கப்பட்டவர்களின் மனவலி, உடல்வலி போன்றவைகள் ( கடல் நீரானது ஆவியாகி மேகமாகி மழையாவது போல ) எண்ண அதிர்வுகளை உண்டாக்கி அதனதன் வலிமைக்கேற்ப  பின்விளைவுகளை உண்டு பண்ணு கின்றன.   

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் திறந்த வெளியில் மரநிழலில் காய், கனி, கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தான். அன்றாடம் உணவை தேடி அலைவது மட்டுமே அவனது ஒரே வேலை யாக இருந்தது.

மனிதனுக்கே உடைய சிந்தனை திறனாலும், உடல் வாகாலும் இயற்கையில் கிடைத்தவை களில் மாற்றங்கள் செய்து தனது தேவை, வசதிகளை வளர்த்துக்கொண்டான். இயற்கையின் செயல் பாடுகளை உற்று கவனித்து அதன் சட்டம் ஒழுங்கை புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

பல விஞ்ஞான விதிமுறைகளை கண்டுபிடித்து அவைகளை செய்முறையில் விளக்கினான்.ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் பல ஆன்மீக விதிகளை போதித்தார்கள்.சிந்தனையாளர்கள் பல பழமொழிகளை வழக்கத்தில் பேசி வந்தார்.

மனிதன் தங்களுக்கு  வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு போன்ற இரட்டைகள் ஏற்படுவதற்கு உரிய  காரணங்களை ஆராய்ந்தான். அவைகள் பழமொழிகளாகவும், பொன்மொழிகளாகவும் இயற்கையின் நியதிகளாகவும் புழக்கத்தில் கொண்டுவந்தான்

புவிஈர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி போன்ற கண்ணுக்குத் தெரியாத சக்திகளை பரிசோதனை கூடத்தில் ஆராய்ந்து அவைகளை நமது தேவை களுக்கு பயன் படுத்தி கொண்ட அளவிற்கு இயற்கை நியதி சக்திகளை ஆராய்ந்து உபயோகப்படுத்திக்கொள்ள நம்மால் முடியவில்லை. காரணம், புத்தர், வியாசர் போன்ற ரிஷி வாழ்க்கை, தவ வாழ்க்கையில் அப்பழுக்கற்ற ஈடுபாடு உடையவர்களால் தான் சிக்கல் நிறைந்த இயற்கையின் நியதிகளை புரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் முடிந்தது.

இயற்கையின் நியதிகளை யாரும், யாருக்கும் கூறி கட்டாயப்படுத்தவோ, செயல்முறைப்படுத்தவோ முடியாது. இயற்கையின்நியதிகளை கூறி தண்டிக்கமுடியாது. இயற்கை நியதிகளின் உதடுகள் மூடியே இருக்கும். ஆனால், காது வழியே புரிந்து கொள்ளும். இயற்கையின் நியதிகளை குறிப்பட்டு பேசுவதால் சில சமயம் மனஸ்தாபங்கள் ஏற்படவும், மனம்  புண்படவும், போன்ற விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட காரணமாகும்.

இயற்கையின் நியதிகளை சொல்லி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம், எச்சரித்துக் கொள்ளலாம். துன்பம் தோல்வி களிலிருந்து ஆறுதல் பெறலாம் அல்லது வராமல் பார்த்துக் கொள்ளலாம். தன்னை சரிப்படுத்திக் கொள்ளலாம்.

அவரவர் வாழ்க்கையில் அனுபவித்த, கேள்விப் பட்ட, பார்த்த சிறந்த பழமொழிகளை, பொன்மொழிகளை, இயற்கையின் நியதிகளை நினைவில் நிறுத்தி தனது வாழ்க்கை யில் பயன் படுத்தி வந்தால், பிரச்சினைகள் குறைந்து மனஅமைதி கூடும்.

ஒரு கருத்தை ஒருவர் உண்மை என்று உணர்ந்து, பின்  அதை கடைபிடிக்காமல் விட்டுவிட்டால் அதனாலுள்ள பலன் அவருக்கு கிடைக்காமல் போகும் .

 இயற்கையின் படைப்பில்,  எல்லாம் அல்லது எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. ஆனால் நாம் ஒருவருக்கொருவரை ஒப்பிட்டு பேசி உயர்வாகவோ,  தாழ்வாகவோ எண்ணி நடக்கிறோம்

எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற நல்ல குணங்களை அனைவருக்கும் பொதுவான  ஒரு அளவு கோலாய் வைத்து அதனுடன் அனைவரும் தன்னை  ஒப்பிட்டு பார்த்து நான் எளிமையானவனா, தூய்மையானவனா, கடமையை கருதி நடப்பவனா, நியாயமாய் நடப்பவனா என இந்த உலகமக்கள் அனைவரும் நடந்தால் அனைவரின் மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் குறைவே இருக்காது. ஆனால் நமக்கு அது மாதிரியான கல்வி இல்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்  என்கிற நோக்கத்தில் தான் கல்வி இருக்கிறது. அதற்காகவே தினமும் வாழ்கிறோம்.

இயற்கையின் நியதிகள் ஏராளமாக இருந்தாலும் ஒருசிலதை நாம் நினைவில் நிறுத்தி அதனை பயன் படுத்தி பலனை பெறவேண்டும்.

.நமது கல்வியில் மனம் இயங்கும் விதம் பற்றியோ, இயற்கை நியதிகள் இயங்கும் விதம் பற்றியோ பொதுப் பாடம் கிடையாது. இவைகளெல்லாம் கண்ணுக்குத் தெரியாதவை, புலப்படாதவை, நிரூபிக்கப் படாதவை என்று நாம் ஒதுக்கி விட்டோம். ஆனால் அவைதான் அவரவர் வாழ்க்கையின் ஆணி வேராய் இருக்கிறது  

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதி.( Law of Attraction)

ஒற்றுமை என்னும் இயற்கையின் நியதி (Law of Harmony )             

ஈடு செய்யும் இயற்கையின் நியதி.( Law of compensation)              

காரண காரிய இயற்கையின் நியதி.( Law of cause and effect)              

பரிகாரம் என்னும் இயற்கையின் நியதி.( Law of remedy)      
      
பிரிவுகள்  என்னும் இயற்கையின் நியதி (Law of Classification)

கர்மா என்னும் இயற்கையின் நியதி (Law of Karma)

திருப்பி செய்யும் இயற்கையின் நியதி.( Law of reciprocation)

மாற்றம் என்னும் இயற்கையின் நியதி ( Law of Change)

விடாமுயற்சி என்னும் இயற்கையின் நியதி(Law of Perseverance)

எதிர்த் தன்மை என்னும் இயற்கையின் நியதி(Law of Polarity)

 நினைப்பு என்னும் இயற்கையின் நியதி (Law of Thinking)

அதிர்வு என்னும் இயற்கையின் நியதி (Law of Vibration) 

போன்ற சில இயற்கையின் நியதிகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.         

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதி.( Law of Attraction)

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதிஎன்பது, ஒன்று அதே போல உள்ள மற்றவைகளோடு சேர்ந்திருக்க விரும்பும் .தண்ணீர், தண்ணீருடன் சேர விரும்பும்.எறும்பு, எறும்புகளோடு சேர்ந்திருக்க விரும்பும். எண்ணங்கள், அதே வகையைச் சார்ந்த எண்ணங்களுடன் இருக்க விரும்பும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ,

நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
நம்மை உருவாக்கிய பிரபஞ்சசக்தியிடம் அந்த தேவையை கேட்கவேண்டும்.
அந்த தேவை நம்மை நோக்கி வந்து கொண்டி ருப்பதாக உணரவும், நம்பவும் வேண்டும்.
நமக்கு நன்மை யானது வந்து சேரும்.
நமக்கு எது வேண்டுமோ அதை மட்டுமே நினைக்க வேண்டும்.
எது வேண்டாமோ அதை நினைக்கக் கூடாது. நாம் அடிக்கடி நினைப்பது நம்மிடம் வந்து சேரும்.
ஆனால் நிறைய நேரம் நாம் தவறானவை களையே நினைக்கிறோம்.(90%)
தீர்வில் தான் நம் கவனம் இருக்க வேண்டும். பிரச்சனையை பேசிக் கொண்டி ருப்பதில் அல்ல. .
நல்ல, சிறந்த, உயர்ந்த வார்த்தை களில் நமது கவனத்தை கூர்மையாக்க வேண்டும். அடிக்கடி நினைக்கவேண்டும்,நம்ப வேண்டும். The Law of Attraction .நமக்கு உதவ இது ஒரு சிறந்தவழி.

 பிற நியதி களை அடுத்தடுத்து உள்ள விளக்கங்களில் காணலாம்.

                                          --------------------------------------

                                    

Thursday 19 February 2015

நியுட்ரினோ என்னும் கடவுள் துகள்




நியுட்ரினோ என்னும் கடவுள் துகள் 

எங்கும் நிறைந்த (omni present )

எல்லாம் தெரிந்த (omni scent)

எல்லா சக்தியும் உடைய (omni potent)

எப்போதும் விழித்திருக்கும்(omni awakent)  

ஒரு பொருள் அல்லது உயிரினம் தான் கடவுள். இவைதான் கடவுளுக்குரிய அடையாளம் என்று  எல்லா மதமும் எல்லா ஞானிகளும், மகான்களும், கூறுகிறார்கள்  இந்த அடையாளங்களை உடைய ஒரு உயிரினத்தை இதுவரை மனிதர்கள் யாரும் பார்த்ததே இல்லை. கடந்த ஐநூறு வருடங்களில் மனிதன் இந்த பிரபஞ்சத்தை தீவிர மாக ஆராய்ந்து பிரபஞ்சத்திலுள்ள  பல சக்தி களையும், சட்டங்களையும் உணர்ந்து, சோதித்து, நிரூபித்து கல்வியாக்கி இருக்கிறான்

1.புவியீர்ப்பு சக்தி
2.மின்காந்த சக்தி
3.அணு சக்தி
4.பௌதீகவிதிகள்
5.இராசயனவிதிகள்
6.கணிதவிதிகள்
என்பன அவற்றுள் சில.    
                                                                                                                                                                                                                  இயற்கையின் சக்திகளை பற்றிய விஞ்ஞானிகளின் அறிவு முழுமை பெறவில்லை. பிரபஞ்ச விதிகளுக்குபின்னால் சர்வ சக்தி ஒன்று  இயங்குகிறது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒப்புகொள்கின்றனர் சமீபத்தில் கண்டுபிடித்த நியுட்ரினோவை கடவுள் துகள்கள் என்கின்றனர். அணுவை  விட கண்ணு க்குத்தெரியாத நியுட்ரினோ என்னும் துகள்கள் பற்றி சமீபத்தில் தான் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த துகள்களை பற்றிய பல்வேறு  ஆராய்ச்சிகளுக்காக தமிழ் நாட்டில் தேனீ என்னும் இடத்தில இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைய போகிறார்கள்.

 நியுட்ரினோ துகள்கள் தினமும் கோடானகோடி கணக்கில் நம்மை கடந்து செல்கின்றன. மலையிலும் கடலிலும் மனித உடலிலும் புகுந்து செல்கின்றன. பூமியின் ஒரு பக்கம் புகுந்து மறுபக்கம் வெளிவருகின்றன என்று சொல்லி மேலும் விஞ்ஞானிகள்  இதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இத்துகள்களை நீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, காற்று கரைக்காது, மண் மக்கச்செய்யாது. கடல், மலை, மண், குளிர் ,வெப்பம் என அனைத்திலும் புகுந்து இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறது   தண்ணீ ரினுள்  மூழ்கி இருக்கும் பஞ்சினைப்போல் நாம்  நியுட்ரினோவில் மூழ்கி இருக்கிறோம்.                                                                                                                                   உடல் முழுவதும் மனம் நிறைந்திருபதுபோல் பிரபஞ்சம் முழுதும் கடவுள் நிறைந்திருக்கிறார். மனமானது மனிதனின் மூளையின் வழியாக அவனை இயக்குகிறது போல் இறைவன் இயற்கையின் நியதிகள் வழியாக பிரபஞ்சத்தை இயக்குகிறார். என்றெல்லாம் நமது ஞானிகள் சொன்னதை இன்றைய விஞ்ஞானிகள் அவைகளை நிரூபிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, நியாயம், சமநிலை, ஈடு, எளிமை, இயற்கையை சீர் குலைக்காமல் இருப்பது  இவை தான் இயற்கை நியதிகளின் சாரம்.      

ஆனால் இன்றைய மனிதனின் எண்ணங்களும், நோக்கங்களும் எந்தவகை யானது அவற்றை எப்படி சரிப்படுத்துவது என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மனித இனம் இருக்கிறது.

உயிரினங்களுக்கு வேண்டியது தனக்குரிய இயற்கையான உணவு மட்டுமே. ஆனால், மனிதன் மட்டுமே இயற்கை யில் காணும் வளங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்து அதை வளர்ச்சி என்று சொல்லி இயற்கையை கெடுத்து, தனக்கு எல்லாவழியிலும் சிரமங்களை ஏற்படுத்திக்கொள்கிறான்.மனிதனின் துயரங்களுக்கு கரணம் யார் என்று ஆராய்ந்து பார்த்தல் அது மனிதனின் செயல்கள் என்பதில் தான் போய் முடியும்.

மனித உயிர்கள் உலகில் பல மாற்றங்களை செய்து அதன் பின்விளைவுகளையும் அனுபவிப்பதால் மனிதனுக்கு கடவுள் என்னும் நினைப்பு ஏற்படுகிறது. வெறும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த மனித இனத்துக்கு கடவுள் நினைப்பு இல்லாதிருந்தது. இதுதான் உண்மை. கடவுள் என்று தனியாக எங்கேயும் கிடையாது, ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நமக்கு துன்பம் வரும்போது கடவுளை அதிகமாக நினைக்கிறோம். இன்பம் அனுபவிக்கும் போது அவ்வளவாக நினைப்பதில்லை.

மனிதன் இயற்கையாய் வாழ்ந்த காலம் வரை அவனுக்குத் துன்பம் இல்லை. இயற்கையை மாற்றும போது மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். இயற்கையாய் வாழ்வதும் எளிதன்று, கடினமே. ஆனால், அதுதான் எல்லா படைப்பு களும் வாழும் வாழ்க்கை. அது தான் இயற்கை விதித்த வாழ்க்கை.

நாம் இயற்கை யை விட்டு வெகுதூரம் வந்து வலி தாங்க முடியாமல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நமக்கு உதவி செய்யாமல் எங்கோ இருக்கிறார் என்று அவரவர் தேவைகளுக்கு அவரவர் வழியில் கடவுளை நினைக்கிறோம். ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நம்முள் கடவுள் நிறைந்திருக்கிறார், நாம் அவருள் மூழ்கியிருக்கிறோம்.    

                                         ---------------------------------------------                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

Monday 16 February 2015

மனிதனின் தேவைகள்

                    மனிதனின் தேவைகள் 


   1.உடல் ஆரோக்கியம்

   2.மன ஆரோக்கியம்

   3.உணர்ச்சிகள்  ஆரோக்கியம்

   4.சமுக  ஆரோக்கியம்

   5.சுற்றுப்புற  ஆரோக்கியம்

   6.நிதி  ஆரோக்கியம்

   7.தொழில்  ஆரோக்கியம்

   8.ஆன்மீக  ஆரோக்கியம்

   9.அறச்செயல் ஆரோக்கியம்

 என  ஒன்பது  வகைப்படும் .

 மனிதன் :-  உலகிலுள்ள ஜீவரசிகளுள் மனித இனம் ஒன்றினால் மட்டுமே கண்டு பிடிப்பு களையும்  மாற்றங்களையும் செய்து உலக ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அல்லது அழிக்கவும் முடியும். கடந்த நூறு  ஆண்டுகளில் விஞ்ஞானம், தொழில், நுட்பம், முaன்னேற்றம், வளர்ச்சி, என்கிற  பெயரில் நாம் மிக வேகமாக உலக  ஆரோக்கியத்தை கெடுத்து  வருகிறோம்.

புவிவெப்பமடைதல், நன்மையான  ஜீவராசிகளின்  அழிவு, ஒழுங்கற்ற வானிலை  போன்ற பல  பாதிப்புகளை கண்கூடாக  காண்கிறோம்.

 இதேபோல்  தனி மனித  வாழ்க்கையும் அவனது சமூக வாழ்க்கையும் பல திசை களில் மாறி மனிதன் மனஅழுத்தம், சமத்துவமின்மை போன்ற வற்றால் தாக்கப்பட்டு சுயநலம், அலட்சியம், தீவிரவாதம் என பாதிக்கபட்டிருகிறான்

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு மேற்கண்ட  ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

1.உடல் ஆரோக்கியம் :- ஒவ்வருவரும்  தனது  உடல்  இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை  உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும்,  நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .

2.மனஆரோக்கியம்:- தினசரி மாறி வரும் நமது சூழ்நிலைகளிலுள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டும், தனது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காக அனைத்தையும் அனுசரித்தும் வாழ்வதே மன ஆரோக்கியம்.

3..உணர்ச்சிகள் ஆரோக்கியம்:- நாம் உணர்ச்சிவயப்படும் போது வெளிபடுத்தும்  உணர்ச்சிகள் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர கெடுதல் செய்வதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே உணர்ச்சிகள் ஆரோக்கியம் .

4.சமூக ஆரோக்கியம்:- வீட்டிலுள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும், நண்பர்களிடமும் பணி இடத்திலும், மற்றும் நாம் உறவாடும் அனைவரிடமும் நாம் வைத்திருக்கும் உறவின் தரம்  சமூக ஆரோக்கியமாகும்.

5.சுற்றுப்புற ஆரோக்கியம் :-  கற்று,நீர் ,மண் மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் சுற்றுவட்டாரத்தை வளமாகவும் ,மகிழ்ச்சிதரகூடியாதகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது சுற்றுப்புற ஆரோக்கியமாகும் .

6.நிதி ஆரோக்கியம்:- பணம்  இல்லையானால் அமைதியும், மகிழ்ச்சியும்  வாழ்க்கையில் இருக்காது.சரியாக திட்ட மிடல், கடின உழைப்பு, சிக்கனம் சேமிப்பு, முதலீடு என தேவைக்கேற்ப பணத்தை பெருக்கிக் கொள்வதே
 நிதி ஆரோக்கியமாகும்

7.தொழில்  ஆரோக்கியம்:-    ஏதாவது ஒரு தொழிலில் நம்மை  ஈடுபடுதிக் கொள்கிறோம். வேலையில் நமக்குள்ள விருப்பம், நமது திறமை வேலையிடத் துள்ள நல்ல சூழ்நிலை, திருப்தியான வருமானம் மற்றும் வசதிகள் ஆகியன தொழில் ஆரோக்கியமாகும் .

8.ஆன்மீக ஆரோக்கியம்:- காற்று, நீர், மண்,கடல், வெப்பம் போன்ற சுற்றுப்புறத்தின் உரிமையை மதித்தும்,  பிற உயரினங்களின் உரிமைகளை மதித்தும் அவை மகிழ்ச்சியுடன் வாழ விருப்பம் கொண்டும் அவைகளுடன் இணக்கமாய் இருந்து இந்த ஆன்மீக நோக்கத்தை அறிந்து, ஆன்மீகப் பாதையில் வாழவேண்டும். நீதி நெறி யுடன் (ethics)நன்னடத்தையோடு (moral) நன்மதிப்புடன்( value )வாழுவதே ஆன்மீக ஆரோக்கியமாகும்
                     
9.அறச்செயல் ஆரோக்கியம்:- மனிதன் மனம் போன போக்கில் போககூடியவன். ஆணவம், சுயநலம், பொறமை, சாமர்த்தியப்பேச்சு என்பன தன்னுள் இருப்பதை  அறியாதவன். அதன் விளைவு களில் சிக்கி வாழ்க்கையை களிப்பவன். எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற குணங்கள்  தான்  இந்த இயற்கையையும் தன்னையையும் சிறப்பாக வாழவைக்கும்.என்பதை அலட்ச்சிய படுத்தி வாழ்பவன்.  உலகம் போற்றும்  நல்ல குணங்களை கொண்டிருப்பதே அறச்செயல் ஆரோக்கியமாகும்.


 சிறந்த உடல் நலம் பெற சரியான ஆரோக்கியத்திர்க்காக சிரமப்படவேண்டும் மேற்கூறிய பிரிவுகளில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை பாதிக்கலாம் இதனால் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்த அனைத்து பிரிவு களையும் புரிந்துகொண்டு சரியாக நடக்கும் ஒருவர் சிறந்த உடல் நலம் பெற்று சாதிப்பவராவார்.

எல்லா நேரமும் எல்லா பிரிவுகளையும்ஒருவரால் சிறப்பாககடை பிடிக்க முடியும்  என்பது உண்மையில் நடக்ககூடிய காரியமல்ல. எந்த ஒருவரும் முழு ஆரோக்கியமுடையவர் என்றோ, முழு ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ இருப்பதில்லை.

நல்ல ஆரோக்கியம் முதல் மரணம் வரை உள்ள இடைப்பட்ட ஒரு இடத்தில நம் ஆரோக்கியம் இருக்கிறது .

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு மேற்கண்ட  ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

ஆரோக்கியத்துக்குரியநடவடிக்கைகளை அதிக அளவு தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது நல்லது

நல்ல ஆரோக்கியத்தை நாடி அந்த வழிகளை கடைபிடிக்கும் குணாதிசயங்கள் நமக்கு இருக்க வேண்டும்.

                                       -----------------------------------------


                                        --------------------------------------------