Thursday 3 May 2018

சைவசித்தாந்தம்

என்னை நினை. என்னை நம்பு.
என்னை சரணடை. என்னை சார்ந்து விடு.
நானே காரணம் . நானே பின் விளைவு.
நானே செயல். நானே பலன்.
நான் என்பது தூய்மை, எளிமை, கருணை, நியாயம்.
நான் அல்லாதவை ஆணவம், சுயநலம், பொறாமை, பொய்.
நான் இருப்பதும் மனத்துள். நான் அல்லாதவை இருப்பதும் மனத்துள்.
நான் அநாதி. நான் அல்லாதவையும் அநாதி.
செடிக்குக்காரணம் வித்து. வித்துக்குக்
காரணம் செடி.
நான் அல்லாதவைக்குக் காரணம் நான்.
நான்-க்குக் காரணம் நான் அல்லாதவை.
நான் நிலைத்த சக்தியானவன். நான் அல்லாதவை நிலையாத சக்தியானவன்.
நான் விரிந்து பரந்து கலந்து கிடக்கும் இறைவன். நான் அல்லாதவை கவர்ச்சி போதை சொகுசால் நிறைந்திருக்கும் மாயை.
நான் பற்றைத்தருவதில்லை. நான் அல்லாதவை நிறைவைத் தருவதில்லை.
என்னை கற்றுக் கொள். என்னை  கற்றுக் கொடு.
அதுதான் இட்ட வாழ்க்கை. அதுதான் முடிவான முடிவு.

" ஆடம்பரம் ஆணவம் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போல திரி." பட்டினத்தார்.
                            –––
நேரம் ஒதுக்குங்கள்

இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். பகவானை வழிபடாத நாளெல்லாம் பட்டினி கிடந்த நாளாகும் என்றார் ஒரு பெரியவர். எவ்வளவுதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பகவானை நினைக்கவில்லை என்றால் அவன் பட்டினி கிடந்தவனுக்கு ஒப்பாவான்.

மனிதன் தன்னுடைய 20 ஆண்டு காலத்தை ஓடுவதும், ஆடுவதுமாக பொறுப்பின்றி கடந்து விடுகிறான். அடுத்து 20 ஆண்டுகளுக்கு குடும்பம், பிள்ளை குட்டி என்று பாடுபடுகிறான், பணம், பொருள் சேர்க்கிறான். அதன் பிறகு தான் தன்னைப் பற்றி நினைக்கிறான்.

அடடா! நமக்கு வயதாகி விட்டதே! இதுவரையில் ஆத்ம பலத்துக்கு என்ன செய்தோம்! ஒரு கோவிலுக்குப் போனோமா! காசிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போனோமா! வீடு வீடென்றே அலைந்து நாட்களைக் கழித்து விட்டோமே! இனி, உடம்பிலும் தெம்பு இல்லையே! தனியே துணையில்லாமல் ஒரு இடத்துக்குப் போய் வரமுடியுமா? என்றெல்லாம் ஏங்குவார். இது காலம் கடந்த ஞானோதயம்.

இன்னும் கொஞ்சம் வயதானால் இன்னும் உபத்ரவம் தான்! கண் பார்வை மங்கி விடும்: காது மந்தமாகி விடும் எழுந்து நடக்க முடியாது. இருமலோ, அஸ்துமாவோ, சர்க்கரை வியாதியோ ஏதோ ஒன்று இவனை ஆட்கொண்டு விடும். இவனை சதா காலமும் யார் கவனித்து பணிவிடை செய்து கொண்டு இருப்பர்!

சில இடங்களில் இப்படிப்பட்ட வயோதிகரை ஒரு மனிதராகக் கூட மதிக்க மாட்டார்கள். இவர் பாடுபட்டு உழைத்தது, பணம், பொருள் சம்பாதித்து வைத்தது எல்லாவற்றையும் மறந்து விடுவர்: இவரை ஒரு சுமையாகவே நினைப்பர்.

சிலர் இவரது ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து ஆயுள் பலம் எப்படி இருக்கிறது என்று கேட்பர் இப்படிப்பட்ட வாழ்வு வேண்டாம் என்றனர் பெரியோர்.

ஒரு சுலோகம் உண்டு. அதன் பொருள் பரமேஸ்வரா! எனக்கு துன்பமில்லாத மரணம் வேண்டும்! பிறருக்கு கை கட்டி சேவகம் செய்யாத வாழ்வு வேண்டும்: படுத்த படுக்கையில் நீண்ட காலம் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், சிரமமில்லாத மரணத்தைக் கொடு!

எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கிறது? அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! வாழ்நாளில் ஒரு பாதியை தெய்வ வழிபாட்டுக்கு ஒதுக்கி விட வேண்டும். சினிமா பார்க்கவும், சீட்டாடவும் நேரம் ஒதுக்கவில்லையா? உலகில் காண்பதும், அனுபவிப்பதும் நிரந்தரமானதல்ல; மாயை தான்! இதை நாம் உணரவேண்டும். இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்
இம்மையில் மட்டுமல்ல மறுமைக்கும் சேர்த்து மகிழச்சியைத் தேடுங்கள். பணத்தையும் புகழையும் அறவழியில் தேடுங்கள். லாபம் குறைவாக இருக்கும் ஆனால் நிமிர்ந்த நடையைத் தரும். இறைவனை கற்றுக் கொள்ளுங்கள். இறைவனை குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.

Tuesday 1 May 2018



கடவுளை எங்கே காணவில்லை.?
மரத்தில் செய்த யானையைப் பார்த்து குழந்தை அம்மாவை கட்டிப் பிடித்துக் கொள்கிறது.
அம்மாவோ அது மரம் தானே பயப்படாதே என்கிறாள். குழந்தைக்கு யானை என்று  தெரிவது அம்மாவுக்கு சிந்தையால் மரம் என்று தெரிகிறது.
உலகப் ( காட்சிகளை)பொருட்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு அவற்றிற்கு காரணமான பரம்பொருள் ( இறைவன்) தெரிவதில்லை. சிந்தையால் இறைவனை உணர்ந்தவர்களுக்கு உலகப் பொருட்களால் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. உலகப் பொருள் மீதுள்ள ஈடுபாட்டை விடமுடியாமல்  இறைஉணர்வு அனுபவம் தேடி அலையும் நம்மால் இறைவனை காணமுடியாது. திரை விலகினால் காட்சி தெரியும் என்பது போல ஈடுபாடு விலகினால் இறைவன் தென்படுவான் என்கிறார் திருமூலர்.
இதற்கு புளியங்காயையும் புளியம் பழத்தையும் உதாரணமாகச் சொல்லுவார்கள்.புளியங்காயானது ஓட்டுடன் பிரிக்க முடியாதபடி ஒட்டி இருக்கும். அதுபோல் நாம் உலகப் பொருட்களுடன் ஒட்டி இருக்கிறோம்.
புளியம்பழமானது தோட்டுக்குள் இருந்தாலும் தோட்டில் ஒட்டாமல் இருக்கும். திருமுறை பாடிய ஞானிகள் புளியம் பழம் போல் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் கோடீஸ்வர காரைக்குடி செட்டியாரான  படடினத்தார் ஆவர். திடீரென துறவியாகி வீட்டை விட்டு வெளியேறினார்.
இறைசக்தி பெற்றார். இறைசக்தி பெற அவர்கூறும் வழி.

உடை கோவணம் உண்டு உறங்க புறந் திண்ணையுண்டு உணவிங்கு
அடைகாய் இலையுண்டு அருந்த தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த பேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.
                                        பட்டினத்தார்.

மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தின் மறைந்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
                                      திருமூலர்.

ஆடம்பரமாய் வாழ அனைவரும் விரும்புகிறோம். அதன் மூலம் சந்ததிகள் வாழ்வை கடினமாக்குகிறோம்.
நிலவளம், நீர் வளம்,தென்றல் வளம், குளர்ச்சி வளம் அனைத்தும் கெடுவதை உணர்கிறோம்.
ஞானிகள் கூறிச்சென்ற வழிகளை மறந்தோம்.

இந்த உலகம் செழிப்பாய் இருப்பதற்கும்  செழிப்பு அழிந்து போவதற்கும் மனிதகூட்டமே காரணம். இன்ப வாழ்விற்கும் துன்ப வாழ்விற்கும் மனித கூட்டமே காரணம். தெய்வம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கிறது. உலகம் செழிப்பாய் இருக்கவும் வறண்டுபோகவும் மனித கூட்டமே காரணம். இதைத்தான் திருமூலரும் உறுதியாய் சொல்கிறார். அன்பே சிவம் என்றார்.
            ______________________