Friday 23 September 2016

                                             கடவுளும் மனிதனும்

மிருக வாழ்க்கை வாழ்ந்த ஆதிமனிதனுக்கு கடவுள் பற்றிய சிந்தனை இல்லாதிருந்தது. புயலையும், காட்டுத் தீயையும், காட்டு வெள்ளத்தையும், பூகம்பத்தையும், இடி, மின்னலையும் பார்த்து பயந்துகொண்டிருந்தான்.

மனிதனுக்குள் இருந்த  சிந்திக்கும், புரிந்துகொள்ளும், வெளிப்படுத்தும், செய்து பார்க்கும் சக்திகள் ஒவ்வொன்றாக பயன்பாட்டிற்கு வந்தன..

ஏதோ ஒரு சக்தி தான் இதையெல்லாம் நடத்துகிறது என்று மனிதனுக்குத் தோன்றியது. முதலில் இடி, மின்னலை வணங்கினான்.  பிறகு அவனுக்கு நன்மை செய்யும் ஒவ்வொன்றையும் வணங்க ஆரம்பித்தான். மனித கூட்டம் பெருக பெருக அனுபவங்களும், அறியாமைகளும்,  நம்பிக்கைகளும், பகுத்தறிவும் பலவாறாக மாறின. பலவித விளக்கங்களும், கதைகளும், வழிபாடுகளும், மதங்களும், விமர்சனங்களும் ஏற்பட்டன. ஆனால் இதுவரை யாரும் கடவுளை பார்த்ததில்லை

மனிதன் எழுத படிக்க தெரிந்த பிறகு  2000,2500 வருட வரலாறுகள் தான் ஓரளவு உள்ளன.அதற்கு முந்தைய வரலாறுகளெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் சொல்லும் விளக்கம் தான் நமக்கு இருக்கிறது. இருந்த போதும் இன்றும்  மனித இனம் சூரியனையும், சந்திரனையும், ஐம்பெரும் பூதங்களையும், செடியையும், மரத்தையும், உயிரினங்களையும் ( மிருகம், பறவை  முதலியன ) மனிதனையும் ( குரு, ரிஷி, ஞானி போன்றவர்கள் ) தெய்வத்தின் வடிவாக வழிபாடுகள் செய்து வணங்கி வருவதை காண்கிறோம். கடவுளுக்கு பல உதாரணங்களைச் சொல்லி, கதைகளைச் சொல்லி அனுபவங் களைச் சொல்லி கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தி இன்றளவும் வணங்கி வருகிறோம்.  ஆனால் இதுதான் கடவுள் என்று இதுவரை யாரும் காண்பித்ததில்லை.

"விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை" அதாவது, சொன்னவர்கள் பார்த்ததில்லை, பார்த்தவர்கள் சொன்னதில்லை என்று நம் முன்னோர்கள்  சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். அதாவது கடவுள் இருக்கிறார் ஆனால் பார்க்கமுடியாது என்கிற அர்த்தம் ஆகிறது.  எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்,  எல்லா சக்தியும் உடையவர்,  எப்போதும் விழித்திருப்பவர் என்பது தான் கடவுளுக்கு எல்லோரும் கூறும் விளக்கம். அப்படியானால் இந்த விளக்கங்களை எல்லாம் உடைய ஒருவர் எப்படி இருப்பார். இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்தவராய் இருப்பார். வெட்ட வெளியிலும் நிறைந்திருப்பார், அடர்ந்த மலையிலும் நிறைந்திருப்பார்.  ஒரு பலூனில் நிறைந்திருக்கும் காற்றைப்போல் எல்லா இடமும் வியாபித் திருப்பார். இதற்கு பொருந்துகிறார் போல் இன்றைய விஞ்ஞானிகள் நியூட்ரினோ என்னும் துகள்கள்  இந்த பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருப்பதாக சொல்கிறார்கள். உலக பொருட்கள் அனைத்தும் அதனுள் மூழ்கி இருக்கிறது என்கிறார்கள்.

இந்த பிரபஞ்ச இயக்கத்துக்கும், பிரபஞ்ச நியதிக்கும், பிரபஞ்ச சக்திக்கும், பிரபஞ்ச பரிணாமத்திற்கும் காரணமாய் ஒரு சக்தி இயங்குகிறது. மனிதனுக்கு இருக்கும் மூளையின் திறனால் அந்த கடவுள் உருவத்தை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவோ, நினைவில் நிறுத்தவோ முடியாது. அதனால் சிலர் கடவுள் இல்லை என்று விவாதிக்கிறார்கள்.

மனம் என்று ஒன்று இருப்பதை  அனைவரும் ஏற்றுக்கொள் கிறோம். எண் ஜாண் உடம்பை மனம் ஆட்டிப்படைக்கிறது. அந்த மனம் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது.அதன் வடிவம் என்ன. அதை எந்த நாட்டு மருத்துவர் களாவது இதுவரை பார்த்திருக்கிறார்களா. மனதை பற்றி முழுதாக தெரிந்தவர் எவரும் இல்லைஎன்பது தான் உண்மை .அப்படி இருக்கும் போது இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந் திருக்கும் மனம் போன்ற ஒரு வடிவத்தை, கடவுளை  எப்படி மனிதனால் பார்க்க முடியும்.  அதனால் கடவுளை விமர்சனம் செய்பவர் களையும், கடவுளை பாராட்டுபவர்களையும் கடவுள் கண்டுகொள்வதில்லை என்பது தான் அவரின் குணம் என்றாகிறது.

அந்தக் கடவுளை நம் முன்னோர்கள் "காரணங்களுக்கெல்லாம் காரண மானவன், அணுவுக்கும் அணுவானவன், பரம்பொருள், பரப்பிரம்மம், பராசக்தி, பரமேஸ்வரன், தெய்வநீதி, தெய்வசக்தி, பிரபஞ்சமனம், ஆதியந்தம் இல்லாதவன், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்றெல்லாம் உணர்ந் தார்கள், பெயரிட்டு அழைத்தார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடம், கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் கடவுள் என்பது மனத்தால் உணர்ந்துகொள்ளவேண்டிய ஒரு தாகம் ஆகும். தாகம் இல்லாதவர் களுக்கு தண்ணீர் தேவைப்படாது.

ஆதியந்தம் இல்லாத பரம்பொருளை எல்லோராலும் நினைத்துப்பார்க்க முடியாது, நினைவில் நிறுத்தி வழிபடமுடியாது என்பதற்காக இறைவனுக்கு வடிவம் கொடுத்தார்கள்.உருவமாகவும்,.உருவமில்லாமலும், ஆன அருவுருவ வடிவில் இன்றும் நாம் வழிபாட்டு வருகிறோம். சிவலிங்கம், மற்றும் வடிவமற்ற, வடிவமுள்ள  சிலைகளை வணங்கிவருகிறோம். கடவுளை மனத்தால் நினைக்கலாம் வணங்கலாம், பிரார்த்திக்கலாம் ஆனால், எல்லோராலும் மனதில் பதியவைக்கமுடியாது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அதற்கு வழிபாடுசெய்வதினால் நம்பிக்கை உறுதிபெறுகிறது, மனதில் பதிக்கிறது.

கடவுளை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவரமுடியாது என்பதால் உலகத்தில் தான் காணும் பொருட்கள் , உயிரினங்கள் அனைத்தும் கடவுளின் படைப்பே என உணர்ந்த மனிதன் காரண காரியங்களோடு கருடனையும், பாம்பையும், பசுவையும், துளசி செடியையும், அரசமரத்தையும், நீரையும், நெருப்பையும் இறைவனோடு சம்பந்த படுத்தி வழிபட்டான். தேங்காய், பழம், உணவுகளை கடவுளுக்குப் படைத்து திருப்திப்  பட்டுக்கொண்டான். கடவுளை குடும்பமாக பாவித்து கணவன், மனைவி, குழந்தைகள் என்று கடவுளை நெருக்கமாக்கிக் கொண்டான். தனது வேண்டுதல்களுக்கும், கஷ்டங்களுக்கும், பிரச்சினை களுக்கும் கடவுளால் உதவமுடியும் என்ற நம்பிக்கை கொண்டான்.

ஒவ்வொன்றிர்க்கும் காரணங்களை ஆராய்ந்த மனிதன்  விஞ்ஞானம் என்னும் செய்முறையில் நிரூபிக்கும் அறிவை  வளர்தது வந்தான். விஞ்ஞானம்   மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்ததினால் விஞ்ஞான தொழில்நுட்பம் மிக வேக மாக வளர்ந்தது. அதற்கு பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும் கூடவே வளர்ந்து வந்தது. இயற்கை சார்ந்த, கடவுள் சார்ந்த வாழ்க்கை புறந்தள்ளப்பட்டது. இயற்கையை புறந்தள்ளிய விஞ்ஞான வாழ்க்கை மனிதனுக்கு உடல்நலப்பிரச்சினை, தொழில் பிரச்சினை, குடும்பப்பிரச்சினை, பணப்பிரச்சினை என பல்வேறு பிரச்சிகளை பின்விளைவாக கொடுத்தது. மனிதன் வாழ்வில் அமைதியை இழந்தான். கவலை, கோபம், பதட்டம், பயம் போன்ற உணர்ச்சிகளில் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளானான். வழி தேடி, நிம்மதி வேண்டி, உதவி வேண்டி, மன்னிப்பு வேண்டி என பல கோரிக்கைகளுடன் கடவுளை நாட வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது.

தெய்வமாக வழிபாட்டு வந்த நிலம், நீர், நெருப்பு ( வெப்பம்), காற்று, ஆகாயம் அனைத்தும் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியால் சரிசெய்யமுடியாத அளவிற்கு  சிதைக்கப்பட்டு விட்டது. மனிதன் வணங்கி வந்த வனங்களும், பிற உயிரினங்களும் மரியாதையற்று போயிற்று. கடவுள் வழிபாடு சிலமணித் துளி நேரம் என்றாகி விட்டது.

நமது ரிஷிகளும், ஞானிகளும் மனிதவாழ்க்கை எளிதானது அல்ல கட்டுப்பாடு மிகுந்தது. செய்யத்தக்கதும், செய்யத்தகாததும் நிறைந்தது மனித வாழ்க்கை. மனம் ஆசைக்கும், ஆணவத்திற்கும் எளிதில் அடிமைப்பட்டுவிடும் அதிலிருந்து மீள்வதென்பது மிக்க கடினம் என உபதேசித்தார்கள். மனம்போன போக்கில் மனிதன் வாழ்ந்தால் தானும் கெட்டு, பிறஉயிர்களும் கெட்டு, உலகமும் கெடும் என எச்சரித்தார்கள். தங்கள் மனதை கட்டுப் படுத்துவதிலே முழுவாழ்க்கை யையும்  கழித்தார்கள். மனதை கட்டுப் படுத்தமுடியாமல் இறைவனிடம் பலவாறு வேண்டிநின்றார்கள். எளிய வாழ்க்கை, எளிய உணவு, எளிய உறைவிடம், உயர்ந்த ஒழுக்கம் போன்றவைகளை அவர்கள் பின் பற்றி வாழ்ந்தார்கள். அவர்கள் பின்பற்றிய வாழ்க்கையில் .மாசு, அலட்சியம், ஏமாற்று, சுயநலம் போன்றவை துளியும் இல்லாதிருந்தது.

தற்காலத்திலும் கடவுள் பக்திக்கு குறைவில்லை. கோவிலுக்கு ஏராள மானோர் செல்கிறார்கள். வழிபாடுகள் செய்கிறார்கள். வேண்டுதல் களை நிறை வேற்று கிறார்கள். பணம், தொழில், குடும்பம்  என்று வந்தால் கடவுள் வழிபாட்டின் போது  இருந்த மனநிலையையும், கடவுள் பயத்தையும்   மறந்து சுயநலம் ஒன்றையே நோக்கமாக வைத்து முடிவெடுக் கிறார்கள். உண்மையை, நியாயங்களை மறந்து சாமர்த்தியங்களை பேசி பிடிவாதமாய் இருக்கிறார்கள். இதனால் நீதி, நியாயம், கடவுள் வழிபாடு எல்லாம் அர்த்த மற்று போய்விடுகிறது. தனது நியாயமற்ற செயலால் பிற உயிர்கள் கண்ணீர், வேதனை என நியாயமாக வருந்தும் போது அது தீவினை என்னும் சக்தி பெற்று ஆரம்பமான இடத்தை ஏதாவது ஒரு வழியில், ஏதாவது ஒரு நேரத்தில் தாக்குகிறது. இதை தெய்வ நீதி ( Law of Nature ) என்கிறார்கள். தற்கால விஞ்ஞான வாழ்க்கையால் மனிதனுக்கு தெய்வநீதி பயம் இல்லாமல் போய்விட்டது.

கடவுளின் தன்மை

எங்கும் நிறைந்திருக்கிறாய்
எல்லாவற்றிலும் கலந்திருக்கிறாய்
பாதிப்புகளை உணர்ந்து கொள்கிறாய்
ஈடு செய்து உணர்த்திக் காட்டுகிறாய்
எல்லாம் உனது படைப்பு
எல்லாம் உனக்குத் தெரியும்
எல்லாம் உன்னால் முடியும்
எல்லாம் உனது அருள்/செயல்/நீதி/பரிணாமம்

மனிதனின் தன்மை  

விருப்பு - வெறுப்பால் ஆனவன்
சரி-தவறு  பற்றி கவலைப்படாதவன்
அறம் - நெறிகளை கற்றும் அதன்படி வாழாதவன்
வலி,தண்டனைக்கு பயப்படுபவன்
ஆணவம், ஆசைகளை வளத்துக்கொள்பவன்
நான் - எனது என்று உணர்ச்சிவயப்படக்கூடியவன்
நோய், முதுமை,நெருக்கடி வந்தபின் சிந்திப்பவன்
எண்ணங்களை நிறுத்தி தியானம் பழக விரும்பாதவன்

முன்னோர் வாக்கு. 


ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்.---புத்தர். 

செத்தாரைப்போல் திரிமனமே ----பட்டினத்தார் 

உலகம் பழிப்பதை ஒழித்து வாழ்வதே  சிறந்த வாழ்க்கை .----திருவள்ளுவர்

 வைதோரைக் கூடவை யாதே: - இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே  வெய்ய வினைகள் செய்யாதே -
 கல்லை வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே.
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய்தே மன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.----கடுவெளி சித்தர்

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே --அகத்தியர்

முதலில் உனது மனதிற்கு கல்வி கொடு( First Educate Your Mind ).---கீதை

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு --பழமொழி.

மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.--உலகநீதி.

செயலின் பின்விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது --நீயுட்டன்3ம் விதி

உலகப்பற்று  ஆன்மிகம் தராது
ஆன்மிகம் உலகப்பற்று  தராது

---------------------------------------------------------------------------------------