Saturday 23 May 2015

மருத்துவ சோதனை

                                           மருத்துவ சோதனை 

உண்பதும், தினசரி வேலைகளை செய்வதும் சிறந்த ஆரோக்கியம் ஆகாது.
மருத்துவ சோதனை உடலின் ஆரோக்கியம் பற்றியும், ஆரோக்கியகுறைவு பற்றியும் நமக்குத் தெரியப் படுத்துகிறது.

ஆரோக்கியத்தை காக்கவும், நோய்களின் ஆரம்ப நிலையிலே சிகிச்சை எடுக்கவும், நோய் வலிமையடையாமல் தடுக்கவும், வாழ்க்கையை அச்சுறுத்தும் நிலைக்கு கொண்டுவராம லிருக்கவும் மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம்.

சரியான மருத்துவ சோதனைகளை சரியான நேரத்தில் செய்து உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவேண்டும். குறைகள் இருக்குமானால் அதை ஆரம்ப நிலை எச்சரிக்கை அடையாளமாக எடுத்துக் கொண்டு தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்வதால் பல எதிர்கால  நோய்களை தடுக்கலாம்.

காலா காலத்தில் செய்து கொள்ளும் மருத்துவ சோதனை உடலையும், மனதையும் நல்ல நிலையில் வைத்திருக்கும்.

மருத்துவ சோதனைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது சேமிப்பு, வாழ்க்கை, மகிழ்ச்சி போன்றவை ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீங்கள்தான் தீவிர கவனத்துடன் இருக்கவேண்டும்.

உங்களை சுற்றி இருப்பவர்களோ, அல்லது உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுபோன்ற பிரச்சினைகளோ உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாது. உடல் பராமரிப்பு மீதுள்ள அலட்சியமே அதிகமாய் இருக்கும்.

உணவு, உடற்பயிற்சி, உடல் எடையில் கவனம் செலுத்துங்கள். புகைத்தல், மது அருந்துதல், சீனி இனிப்புகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

மன அழுத்தம், பரபரப்பு,  ஆத்திரம், பரிதவிப்பு  போன்றவற்றை குறையுங்கள்.
மருத்துவர் நீண்ட நாட்களுக்குத்தரும் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை யின்றி நிறுத்தக்கூடாது.

மருத்துவர் மாத்திரை எழுதி தரும்போது அந்த மாத்திரை உடலுள் என்ன பலனை தரும், வேறு மாத்திரையுடன் சாப்பிடலாமா, உணவு கட்டுப்பாடு என்ன, என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். மாத்திரைகளின் பலனை அறிந்து சாப்பிடுவதால் அதன் பலனை நம்மால் உணர முடியும்.
தற்போது சாப்பிட்டு வரும் அனைத்து மாத்திரை களின் பட்டியலையும் ஒவ்வொரு முறையும் அவரிடம் தரவேண்டும்.

ஐபுப்ருபன்(IBUPROFEN)  மாத்திரையை எந்த ஒரு BP மாத்திரையுடனும் சேர்த்து உண்ணக்கூடாது. மாத்திரைகள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போக வில்லையானால் புதிய நோய்கள் வரக் காரணமாகும். BP க்கு மாத்திரை சாப்பிட்டாலும், உணவில் உப்பை குறைத்து, கொழுப்பை குறைத்து, சரியான உணவையும், தினசரி உடற்பயிற்சியையும் செய்து வருவது நல்லது. BP மாத்திரைகள் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத் தக்கூடியது.

வைட்டமின் மாத்திரைகளை வேறெந்த மாத்திரைகளுடனும் சேர்த்து உண்ணாமல் தனியாக உண்ண வேண்டும்.

ஒவ்வொரு முறை மருத்துவரிடம் செல்லும் போதும் எடை, இரத்த அழுத்தம், உண்ணும் மாத்திரைகள் பற்றியும், தினசரி உணவு, உடற்பயிற்சி போன்ற வற்றையும் உடலில் ஏதாவது அசௌகரியம் இருக்குமானால் அதைப்பற்றியும் பேசுங்கள்.

ஆரோக்கியம் பற்றியும், நோய்பற்றியும் சிறுநீர் சோதனையிலும் அறியலாம்.
எதை எல்லாம் உண்ணுகிறோம், எதை எல்லாம் குடிக்கிறோம், எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறோம் என்பது அனைத்தும் சிறுநீரில் வெளியாகும் கழிவு களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகத்தின் ஆரோக்கியம், பல வீனம் சிறு நீர் சோதனையில் தெரியும். எந்த உணவை குறைக்கவேண்டும், எந்த உணவு பற்றாக்குறை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சிறுநீர் சோதனை முடிவுகளை அலட்சியம் செய்யக்கூடாது. நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் சிறுநீரகத்துக்கு வந்து கழிவுகள் பிரிக்கப்பட்டு சிறுநீரில் வெளியேறுகின்றன. சிறு நீரில் நூற்றுக்கு மேற்பட்ட கழிவுகள் இருக்கின்றன.

மருத்துவ சோதனை செய்து கொள்வதில் அலட்சியமாய் இருக்காதீர்கள். ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை இழந்து விட்டால் உணவுக்கட்டுப்பாடும், மருந்து மாத்திரைகளும், வீண் பணச்செலவும் அதனால் மனச்சோர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

                           --------------------------------------------------------



        
  

Tuesday 19 May 2015

மனஅழுத்தம்

                                       மனஅழுத்தம்

ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை.

தொழில்,  குடும்பம், ஆரோக்கியம் போன்றவை மன அமைதியை தருகின்றன அல்லது பாதிக்கின்றன.

தனது பிரச்சினைகளை தீர்க்கும் திறனும், தனது உணர்ச்சிகளும், தனது அணுகுமுறையும், நியாயங்களை ஏற்று கொள்ளும் தனது பக்குவமும் அவரவர் மனஅழுத்தத்தை நிர்ணயிக்கின்றன.

ஒரு மனோதத்துவ மருத்து வரால் பிரச்சனைகளை அறிந்து மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவ முடியும்.

கோபம்:- கோபம் இயற்கையானது.காரணத்தோடு கோபம் வருவது இயற்கை.உண்மையை அறியாமல் கோபப்படுவது  தவறு. தான் கோபப்பட்டது சரியா என யோசித்து பார்ப்பது மறு முறை எடுத்தவுடன் கோபம் வராது.

தவிப்பு ;-  தோல்வி, நஷ்டம், மறுப்பு, அலட்சியம் போன்ற ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்றுஎதிர்பார்க்கும் சூழல் ஒரு விதமான தவிப்பு (அழுத்தத்தை) ஏற்படுத்தும். நம் கட்டுப்பாட்டில் இல்லாததை எண்ணி தவிக்கிறோம். தோல்வி, பயம், மதிக்கவில்லை போன்ற வைகளை ஏற்றுக்கொள்வதால் தவிப்பிலிருந்து விடுபடலாம்.

கவலை :-  கஷ்டங்களும், பிரச்சினைகளும் எல்லாருக்கும்  இருக்கிறது. பலரும் பலவிதமாய் அவைகளை எதிர் கொள்கிறார்கள். கவலை பட்டுக்கொண்டிருப்பதால் எந்த மாற்றமும்  ஏற்பட்டு விடாது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து, தீர்வு காணவேண்டும். உடற்பயிற்சி, தோட்டவேலை  போன்ற  ஏதாவதொரு உடல் உழைப்பை செய்தால் கவலை ஆரோக்கியத்தை பாதிக்காது.

மனமுறிவு.:- தனது நியாயமான உரிமைகளை மறுக்கும் போதும், தன்னை பொய் சொல்லி ஏமாற்றும் போதும், பதிக்கப்பட்டவனை குற்றவாளி ஆக்கும் போதும், மனதில் ஏற்படும் பொதுவான கொந்தளிப்பாகும்.

கோபம், கவலை, தவிப்பு, மனமுறிவு, போன்றவை இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். திருப்தியற்ற வேலை, வேலையினாலுள்ள மன அழுத்தம் இருதயத்தை பலவீனப்படுத்தும்.ஆழமான மூச்சு, உடற்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.

உங்கள் வலிமை மற்றும் திறமையின் அளவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வருமானத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எல்லோராலும், எல்லாவற்றையும் முழுமையாகவும், திறமையாகவும் செய்யமுடியாது.
உங்களால் முடியாது என த்தெரிந்தால் அதற்காக போராடாதீர்கள்.
உங்கள் சக நண்பர் அடைந்த வெற்றியை ஒப்பிட்டு நீங்களும் அதே குறிகோளுடன் முனையாதீர்கள்.
தோல்வியை எண்ணி சோர்ந்து விடாதீர்கள். தோல்வி கடைசி  யல்ல. மனதை கூர்ந்து கவனியுங்கள் மனதில்  தவறான, எதிர்மறை எண்ணங்களை உற்பத்தியாவதை கவனியுங்கள். அவ்வாறான எண்ணங்கள் தவறு என்று சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் தவறான எண்ணங்கள் தோன்றாது.
.
உணர்ச்சிகளினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

மகிழ்ச்சியற்ற உணர்சிகள் உடலிலை  சோர்வாக்கி விடுகிறது.
கோபம் எரிச்சலை தருகிறது.
பயம் உதறலை தருகிறது.
கவலை பசியின்மையை தருகிறது.
துக்கம் தொண்டையை அடைக்கிறது.
பதட்டம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துகிறது.
அதிர்ச்சி இதய துடிப்பை பலவீனப்படுத்துகிறது,அல்லது  நிறுத்திவிடுகிறது.
சில சுரப்பிகளின்  இயக்கம் அசாதாரணமாகி தற்காலிக அல்லது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உணர்ச்சிகளின் வடிகால் 

தனது பிரச்சினைகளை அலச உதவும் புத்தகங்களை படித்தல்.
தனக்கு பிடித்த இசையை கேட்டல்
சுற்றுலா செல்லுதல்
நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுதல்.
நகைச்சுவைகளை ரசித்தல்
சூழ்நிலைகளிலிருந்து வெளிவர முயற்சி செய்தல்.
யோகா,பிராணயாமா,தியானம் போன்றவற்றை பிறருடன் சேர்ந்து (சத்சங்கம்) செய்தல்

ஆரோக்கிய மனம் 

புதிய எண்ணங்கள்
புதிய பழக்க வழக்கங்கள்
மன அழுத்தத்திற்கு பொறுப்பேற்றல்
எதையும் மிகைப்படுத்தாதிருத்தல்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் 
கவனித்தலை அதிகமாக்குதல்
பேசுவதை குறைத்தல்.
மனநிலையை ( MOOD ) கவனித்து நிர்வகித்தல்.
பிறர் தேவை,உரிமைகளை மதித்து நடத்தல்.

வெற்றி பெருக, பெருக மகிழ்ச்சியும்   பெருக வேண்டுமானால்,

பிறரை  பரஸ்பரம் மதித்து நடக்கும் சூழ்நிலையை பராமரியுங்கள்.

தனது நோக்கம் (intention), நானே மேலானவன் (Ego) இவைகளை கூர்ந்து கவனித்து சரிப்படுத்துங்கள் .

உனது பாவனைகளையும் (non verbal communication) மற்றும் வார்த்தைகளை யும் (verbal communication) பிறர் சதா கூர்ந்து கவனித்து உன்னை மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு சாமர்த்தியமாய் பேசுவதை கைவிட்டு, வெளிப்படையாக இருக்க முயற்சியுங்கள். வெளிப்படையாக இருப்பது அதிகமாகும்போது, பிரச்சினைகள் குறைந்து போவதை காணலாம்.

பிரச்சனைகள் வரும் போது பாதிக்கப்பட்டவனை குற்றவாளி ஆக்காதீர்கள்.
உங்கள் குற்ற உணர்வு உங்கள் மகிழ்ச்சியை வடித்து மன அழுத்தத்திற்கு ஒரு  காரணமாகும்.

                                    ---------------------------------------------------------.













Wednesday 13 May 2015

உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்

                                             உடற்பயிற்சி 

உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு தெம்பையும், உணர்ச்சிகளுக்கு கட்டுப்பாட்டையும் தருகிறது.

உடல் நகர்வதற்காக படைக்கப்பட்டிருகிறது. உட்கார்ந்தே இருப்பதற்காக அல்ல.உடல் அவையவங்கள் Use it or Lose it  என்பதையே உணர்த்து கின்றன.

உடற்பயிற்சி நோய் வராமல் தடுக்கவும், வந்த நோய்யை குணப்படுத்தவும் உதவுகிறது.

உடலானது உழைப்பில் அல்லது உடற்பயிற்சியில் இருக்கும்  போது சத்துக்கள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.

தினசரி செய்யும் உடற்பயிற்சிகள்  ரத்தத்தில் நல்ல கொழுப்பை ( HDL ) அதிகமாக்கி,கெட்ட கொழுப்புகளை  (LDL, Triglycerides) குறைக்கிறது. உடற்பயிற்சி இல்லையெனில் இரத்தத்தில் LDL அதிகமாகியும், HDL குறைந்தும் விடுகிறது.

உடற்பயிற்சி உடலுக்கு வலிமையையும், வளைவுத்தன்மையையும், நீண்டநேரம் தாங்கும் சக்தியையும் தருகிறது.

வலிமை:- தசைகளை வலிமையாக்கி பாரங்களை இழுக்கவும்,தள்ளவும், தூக்கவும், சுமக்கவும் முடிகிறது.

வளைவுத்தன்மை:- உடலிலுள்ள மூட்டு மற்றும்  தசைகளின் விறைப்பை குறையச் செய்து, குனியவும்,நிமிரவும்,நீட்டவும்,மடக்கவும், முறுக்கவும், சுற்றவும்,குதிக்கவும் முடிகிறது.

தாங்கும் நேரம்:- ஓய்வின்றி நீண்டநேரம் ஒரே சீராக செய்யமுடியும் தன்மையை தக்கவைக்கிறது.

தான் எவ்வளவுஉறுதியாய் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தொரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்காக செய்யும் உடற்பயிற்சி மூளையில் பல ரசாயனங்களை சுரக்கச்செய்து மன அழுத்தங்களைக் குறைக்கிறது. 

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி எல்லா திசுக்கழுக்கும் சரியான அளவு பிராணவாயுவையும், சத்துக்களையும் கிடைக்கச்செய்து    உடலை ஆரோக்கியமாக்குகிறது.

உடற்பயிற்சியின் போதுள்ள மூச்சு அதிகமான தசைகளை இயங்கச் செய்கிறது.

உடற்பயிற்சி இரவில் சீக்கிரமாய் தூக்கம் வரச் செய்து, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.   

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்பொழுதே உடற்பயிற்சியை மேற் கொண்டால், நோய்வரும் வாய்ப்புகள் இருக்காது.

உடற்பயிற்சி செய்யும் போது நன்றாக, இயல்பாக சுவாசிப்பது நல்லது. மூச்சை அடக்குவது கெடுதலாகும். 

தினசரி உண்ணும் உணவுகள் எரிக்கப் படவேண்டும். அவை உடலில் சேமிப்பாக விடக்கூடாது.

நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள், நீச்சல், படிஏறுதல், தரைதுடைத்தல் என எதாவது ஒன்றையோ, சேர்த்தோ செய்வது நல்லது.

இரத்த அழுத்தம், உடல் எடை, சுகர்,      கொலஸ்டிரால் போன்றவை சரியான அளவில் இருந்தாலும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நோய், மற்றும் இயலாமையை தள்ளிப்போடலாம்.

உடற்பயிற்சியை அலட்சியப் படுத்துபவர்கள் நோய்க்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி அதை செய்யாதவர்கள், இளம் வயதிலேயே முதுமைத் தன்மையை அடைகிறார்கள். வாழ்நாள்  முழுவதையும்  நோய்க்காக ஒதுக்குகிறார்கள்.

குனியவும், நிமிரவும், நீட்டவும், மடக்கவும், முறுக்கவும், சுற்றவும், ஆழமாக மூச்சுவிடுதலையும் குறைந்த பட்சமாக காலையில் செய்தாக வேண்டும்.

காலை உடற்பயிற்சி சிறந்தது. காலையின் குளிர்ச்சியான காற்று, அமைதியான மனம், காலியாயுள்ள வயிறு, உடலின் வளைவுத்தன்மை எல்லாம் உடற்பயிற்சிக்கு சாதகமானது. சேமிப்பிலுள்ள இனிப்பும், கொழுப்பும் எரிக்கப்படுகிறது. உப்பு வேர்வை வழியே வெளியேறுகிறது. உடற்பயிற்சியை முடித்து விட்டு இனிப்பையும், உப்பையும், கொழுப்பையும் உண்பதால் பலன் ஏதும் இருக்காது.

ஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.அதிக நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பது மூட்டுக்களையும், தசை களையும்  விறைப்பாக்கி விடுகிறது.

முக்கியமாக முதுகிலுள்ள தசைகள் விரைவாக சிறுவயதிலேயே வளையும் தன்மையை இழந்து விறைப்பாகி விடுகின்றன. 

குறைவான நடையும், அதிகம் உட்கார்த்திருப்பதும் உடல் எடை கூடுவதற்கும், நோய்களுக்கும் காரணமாகும். கால் தசைகளில் மின் செயல்கள் நின்று விடுகின்றன. கலோரி எரிவது குறைந்து விடுகிறது.

இனிப்பும்,  கொழுப்பும் இரத்தத்தில் அதிக மாகி உடலுள் சேமிக்கப்படுகிறது. வயறு பருமனாகிறது. என்ஸைம்கள் சுரப்பது குறைகிறது. HDL குறைகிறது. LDL & Triglycerides அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பது பலவீன மடைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உட்கார்ந்திருப்பதை நடை பயிற்சி மூலம் ஈடு செய்வதை விட வேறு வழி இல்லை.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடப்பதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

                                         --------------------------------------------   

Monday 4 May 2015

தன்னை அறிதல் -2

                                    தன்னை அறிதல் -2


மனிதனுக்கு படிப்பு, பணி, பணம், புகழ், போன்றவை எல்லாம், தான் நினைத்து போல் கிடைத்து விட்டாலும், சில இயற்கையின் நியதிகளால் தனக்கு கிடைக்காத நிம்மதி, அமைதி, திருப்தி, இரட்டைகளை (வெற்றி-தோல்வி, உயர்வு-தாழ்வு, லாபம்-நஷ்டம்) எதிர்கொள்ளும் சமநிலை போன்றவை களுக்காக மனிதன் அல்லல் படுகிறான். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல.


தாயின் வயிற்றில் கரு ஜெனித்தவுடன் இதயம் தான் முதலில் உருவாகிறது.ஒவ்வொரு இதயத்துள்ளும் ஆன்மா என்கிற பிரபஞ்ச சக்தி குடிஅமர்கிறது. மனிதன் பிறந்தது முதல் தனது உடல், உணர்ச்சி , அனுபவம் இவைகளில் மட்டுமே கவனம் முழுவதையும்செலுத்தி சுகம், சொகுசு இவை களை அடைவது தான் வாழ்கை என வாழ்வதால் தன்னுள் கலந்திருக்கும் சூக்ஷ்ம சக்திகளை பற்றி அறிவதில் நாட்டம் ஏற்படுவதில்லை. அதை அறியும் வழி முறைகள் கஷ்டமாக தோன்றுகிறது.

வெளிஉலகம், ஐம்புலன்கள்(உடல்), உயிர், மனம், அனுபவம் இவைகளை மட்டுமே வாழ்க்கையின் முக்கிய கருவிகள் என்று  எண்ணி மனிதன் வாழ்ந்து மடிகிறான். மிகச்சிலரே தன் மூளை-மனம்-ஆன்மா என அடுத்தடுத்து  தொடர்பிருப்பதை உணர்ந்து, நம்பி அதனை அறியும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றார்கள். இதயத்துள் இருக்கும் ஆன்மா வை,  என்ன துயரப்பட்டாவது அதனை பார்த்துவிடவேண்டும் என்றுஅதனை கண்டார்கள். மனம் மூளையின் தொடர்பில் இருக்கும் போது பிரபஞ்ச  காட்சிகள்  தெரியும்.  மனம் இதயத்தில் அமரும்போது போது பிரபஞ்ச சக்தி தெரியும் என்பதை உணர்ந்து சொன்னார்கள்.

வெளிஉலகம், அதில் இயற்கையையும், அந்த இயற்கையில் மனிதன் செய்த மாற்றங்களையும் காண்கிறோம். இவை மனிதனை ஈர்க்கின்றன, மனிதனும் அதைக்கண்டு மயங்குகிறான். ஆனால் அவை அனைத்தும் காலத்தால் அழியக்கூடியவை. அதனால் வரும் மகிழ்ச்சி அனைத்தும் நிச்சய மற்றவை. வெளி உலக செயல்கள் மகிழ்ச்சி யாய் இருப்பதுபோல் தோன்றி பின் துயரமாய் வந்து நிற்கும். தன்னை அறிந்தவனுக்கு வெளி காட்சிகள் மாயையாய் தெரியும். வெளி உலக ஈடுபாட்டில் நாட்டம் இருக்காது.


உடல்  ஐம்புலன்களால் ஆனது. ஐம்புலன்கள் மூலமே மனம் வெளிஉலக எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறது. ஐம்புலன்களும் செயல்பட சக்தியாய் இருப்பது நாம் உண்ணும் உணவாகும். எளிய தாவரவகை  உணவு களால் ஆன உடலே (ஐம்புலன்களே)  அமைதியாய் இருக்க ஒத்துழைக்கும் .

உடல் வாழ  உயிர், அதாவது மூச்சு தேவை.மூச்சு இல்லை என்றால் உயிர் இல்லை. உயிர் இல்லை என்றால் மூச்சு இல்லை. உடலுக்குத்தேவை ஆழமான, இயல்பான மூச்சு. ஆழமான மூச்சு எண்ணங்களை குறைத்து மனதை அமைதி பாதைக்குள் திருப்பிவிடும். மேல் மூச்சு மனம் எண்ணங்களால் ஆக்கிரமித்திருப்பதைக் காட்டும். மூச்சு- உயிர்-ஆன்மா என அடுத்தடுத்து தொடர்பிருப்பதை நாம் நம்புகிறோம். உதாரணமாக, மூச்சு நின்றது, உயிர் பிரிந்தது, ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம், என்பது வழக்கத்தில் உள்ள ஒன்று.

மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் குறைய, குறைய கவனம் கூர்மையாகும். எண்ணமே இல்லையானால் கூர்மையான கவனம் மட்டுமே இருக்கும். ஆனால் நமது வாழ்க்கை முறையில் சதா நேரமும் மனதை எண்ணங்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. தியானப் பயிற்சி யின் மூலம் எண்ணுவதை நிறுத்தி, கூர்மையான கவனத்தால் மனக்குகைக்குள் இருக்கும் ஆன்மாவை உற்று நோக்கவேண்டும். அப்போது பிற எண்ணங்கள் ஏதாவது எழுமானால், அந்த எண்ணங்களை பின் தொடராமல் அந்த எண்ணங்களை எண்ணுவது யார் என்று கேட்டு அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும். பற்றற்ற மனதால் மட்டுமே இதனை எளிதாக
செய்ய   முடியும். ஆன்மாவை தரிசிக்கும் தியானத்தை விடாப் பிடியாக  செய்ய வேண்டும். மனம் இருதயத்தில் தங்கினால் சூக்ஷ்மமாகவும்(பிரபஞ்ச சக்தியாகவும்), மனம் மூளையில் தங்கினால் ஸ்தூலமாகவும் (ஐம்புலன் வழியாகவும்)  செயல்புரியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். .

எண்ணங்கள் வரும், போகும் ஆனால் அனுபவங்கள் நம்முள் என்றும் அழியாத ஒரு விருப்பு, வெறுப்பை பதிவு செய்து விடுகிறது. அதுவே நம்முள் ஒரு சரியான அல்லது தவறான நம்பிக்கையை ஏற்படுத்திவிடும். அது நமது பலமாக அல்லது பலவீனமாக ஆகிவிடும். நமது சுகம் அல்லது வலி அல்லது அமைதி அனுபவங்களை பொறுத்து மனதுள் எண்ணங்கள் வளரவும், முடங்கவும்,  தர்க்கம் செய்யவும் காரணமாகிறது. என்னதான் வளமும், நலமும்  இருந்தாலும் ஆன்மா தேடுவது அமைதியைத்தான்.

வாழ்க்கையில் உடல், மனம், அனுபவம், இவைகளில் மட்டுமே நாம் சிக்கிவிடுவதால் பிரபஞ்ச சக்தி (ஆன்மா) நம்முள் இருப்பதை உணராமலே  வாழ்ந்து மடிகிறோம்.

" வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னை அறியும் முயற்சியில் இறங்கவேண்டும். உடல், மனம், அனுபவம் இவைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு மனத்தின் குகைக்குள்ளே குடியிருக்கும் ஆன்மாவை தேடவேண்டும். ஆன்ம தெரிசனம் கிடைத்தால், அதுவரை 'நான்' க்கு இருந்த அகங்காரம் அடியோடு அழிந்து விடும். வெளிவிஷயங்களில் இருந்த ஈடுபாடு குறைந்துவிடும். மௌனமே பேச்சாகிவிடும். நான் யார் என்கிற தேடுதலுக்கு விடை கிடைத்துவிடும்.

தன்னை அறியாமல், தான் காணும் பிற அனைத்தும்,  ஒரு கட்டத்தில் எந்த பயனும் இல்லாமல் போகும். வெளி உலக அறிவு அனைத்தும் காலத்தால் அழியக்கூடியது. தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறியாமல், அழியும் மற்றவைகளை அறிவதால் என்ன பயன்.  தன் உண்மை வடிவை அறிந்த பிறகு வாழ்க்கையில் மேலும் அறிய வேண்டியது ஒன்றுமே இல்லை என்று தோன்றிவிடும்.  அப்போது அறிபவன்,அறியப்படும் பொருள்,அறிவு மூன்றும் ஒன்றாகி விடும் "  என்று பகவான் ரமணர் உபதேசிக்கிறார்.

எனவே, தியான பயிற்சிக்கு முயற்சிப்போம் பலன்  ஈடுபாட்டை  பொறுத்தே இருக்கும். இருள் தோன்றியதும் ஒளி மறைந்து விடுகிறது. ஒளி தோன்றியதும் இருள் மறைந்து விடுகிறது. பகை தோன்றியதும் அன்பு மறைந்து விடுகிறது. அன்பு தோன்றியதும் பகை மறைந்து விடுகிறது. அதேபோல் மனதில் எண்ணங்கள் இருக்கிறவரை  பிரபஞ்சசக்தி மறைந்து காணப்படுகிறது. பிரபஞ்சசக்தி தோன்றும் போது எண்ணங்கள் மறைந்து விடுகிறது. எண்ணங்களே இல்லாமல் மனம் அசையா திருக்கும் பயிற்சியே தியானம்.

அசையாத பால் உறையும்
அசையாத விதை முளைக்கும்
அசையாத கரு வளரும்
அசையாத மனம் ஆன்மீகமாகும்

அகத்தை தகுதியாக்கி
அகத்தை மவுனமாக்கி
அகத்தை உற்று நோக்கி
அகத்தை தரிசனம் செய்.  

                             --------------------------------------------------------