Monday 4 May 2015

தன்னை அறிதல் -2

                                    தன்னை அறிதல் -2


மனிதனுக்கு படிப்பு, பணி, பணம், புகழ், போன்றவை எல்லாம், தான் நினைத்து போல் கிடைத்து விட்டாலும், சில இயற்கையின் நியதிகளால் தனக்கு கிடைக்காத நிம்மதி, அமைதி, திருப்தி, இரட்டைகளை (வெற்றி-தோல்வி, உயர்வு-தாழ்வு, லாபம்-நஷ்டம்) எதிர்கொள்ளும் சமநிலை போன்றவை களுக்காக மனிதன் அல்லல் படுகிறான். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல.


தாயின் வயிற்றில் கரு ஜெனித்தவுடன் இதயம் தான் முதலில் உருவாகிறது.ஒவ்வொரு இதயத்துள்ளும் ஆன்மா என்கிற பிரபஞ்ச சக்தி குடிஅமர்கிறது. மனிதன் பிறந்தது முதல் தனது உடல், உணர்ச்சி , அனுபவம் இவைகளில் மட்டுமே கவனம் முழுவதையும்செலுத்தி சுகம், சொகுசு இவை களை அடைவது தான் வாழ்கை என வாழ்வதால் தன்னுள் கலந்திருக்கும் சூக்ஷ்ம சக்திகளை பற்றி அறிவதில் நாட்டம் ஏற்படுவதில்லை. அதை அறியும் வழி முறைகள் கஷ்டமாக தோன்றுகிறது.

வெளிஉலகம், ஐம்புலன்கள்(உடல்), உயிர், மனம், அனுபவம் இவைகளை மட்டுமே வாழ்க்கையின் முக்கிய கருவிகள் என்று  எண்ணி மனிதன் வாழ்ந்து மடிகிறான். மிகச்சிலரே தன் மூளை-மனம்-ஆன்மா என அடுத்தடுத்து  தொடர்பிருப்பதை உணர்ந்து, நம்பி அதனை அறியும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றார்கள். இதயத்துள் இருக்கும் ஆன்மா வை,  என்ன துயரப்பட்டாவது அதனை பார்த்துவிடவேண்டும் என்றுஅதனை கண்டார்கள். மனம் மூளையின் தொடர்பில் இருக்கும் போது பிரபஞ்ச  காட்சிகள்  தெரியும்.  மனம் இதயத்தில் அமரும்போது போது பிரபஞ்ச சக்தி தெரியும் என்பதை உணர்ந்து சொன்னார்கள்.

வெளிஉலகம், அதில் இயற்கையையும், அந்த இயற்கையில் மனிதன் செய்த மாற்றங்களையும் காண்கிறோம். இவை மனிதனை ஈர்க்கின்றன, மனிதனும் அதைக்கண்டு மயங்குகிறான். ஆனால் அவை அனைத்தும் காலத்தால் அழியக்கூடியவை. அதனால் வரும் மகிழ்ச்சி அனைத்தும் நிச்சய மற்றவை. வெளி உலக செயல்கள் மகிழ்ச்சி யாய் இருப்பதுபோல் தோன்றி பின் துயரமாய் வந்து நிற்கும். தன்னை அறிந்தவனுக்கு வெளி காட்சிகள் மாயையாய் தெரியும். வெளி உலக ஈடுபாட்டில் நாட்டம் இருக்காது.


உடல்  ஐம்புலன்களால் ஆனது. ஐம்புலன்கள் மூலமே மனம் வெளிஉலக எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறது. ஐம்புலன்களும் செயல்பட சக்தியாய் இருப்பது நாம் உண்ணும் உணவாகும். எளிய தாவரவகை  உணவு களால் ஆன உடலே (ஐம்புலன்களே)  அமைதியாய் இருக்க ஒத்துழைக்கும் .

உடல் வாழ  உயிர், அதாவது மூச்சு தேவை.மூச்சு இல்லை என்றால் உயிர் இல்லை. உயிர் இல்லை என்றால் மூச்சு இல்லை. உடலுக்குத்தேவை ஆழமான, இயல்பான மூச்சு. ஆழமான மூச்சு எண்ணங்களை குறைத்து மனதை அமைதி பாதைக்குள் திருப்பிவிடும். மேல் மூச்சு மனம் எண்ணங்களால் ஆக்கிரமித்திருப்பதைக் காட்டும். மூச்சு- உயிர்-ஆன்மா என அடுத்தடுத்து தொடர்பிருப்பதை நாம் நம்புகிறோம். உதாரணமாக, மூச்சு நின்றது, உயிர் பிரிந்தது, ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம், என்பது வழக்கத்தில் உள்ள ஒன்று.

மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் குறைய, குறைய கவனம் கூர்மையாகும். எண்ணமே இல்லையானால் கூர்மையான கவனம் மட்டுமே இருக்கும். ஆனால் நமது வாழ்க்கை முறையில் சதா நேரமும் மனதை எண்ணங்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. தியானப் பயிற்சி யின் மூலம் எண்ணுவதை நிறுத்தி, கூர்மையான கவனத்தால் மனக்குகைக்குள் இருக்கும் ஆன்மாவை உற்று நோக்கவேண்டும். அப்போது பிற எண்ணங்கள் ஏதாவது எழுமானால், அந்த எண்ணங்களை பின் தொடராமல் அந்த எண்ணங்களை எண்ணுவது யார் என்று கேட்டு அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும். பற்றற்ற மனதால் மட்டுமே இதனை எளிதாக
செய்ய   முடியும். ஆன்மாவை தரிசிக்கும் தியானத்தை விடாப் பிடியாக  செய்ய வேண்டும். மனம் இருதயத்தில் தங்கினால் சூக்ஷ்மமாகவும்(பிரபஞ்ச சக்தியாகவும்), மனம் மூளையில் தங்கினால் ஸ்தூலமாகவும் (ஐம்புலன் வழியாகவும்)  செயல்புரியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். .

எண்ணங்கள் வரும், போகும் ஆனால் அனுபவங்கள் நம்முள் என்றும் அழியாத ஒரு விருப்பு, வெறுப்பை பதிவு செய்து விடுகிறது. அதுவே நம்முள் ஒரு சரியான அல்லது தவறான நம்பிக்கையை ஏற்படுத்திவிடும். அது நமது பலமாக அல்லது பலவீனமாக ஆகிவிடும். நமது சுகம் அல்லது வலி அல்லது அமைதி அனுபவங்களை பொறுத்து மனதுள் எண்ணங்கள் வளரவும், முடங்கவும்,  தர்க்கம் செய்யவும் காரணமாகிறது. என்னதான் வளமும், நலமும்  இருந்தாலும் ஆன்மா தேடுவது அமைதியைத்தான்.

வாழ்க்கையில் உடல், மனம், அனுபவம், இவைகளில் மட்டுமே நாம் சிக்கிவிடுவதால் பிரபஞ்ச சக்தி (ஆன்மா) நம்முள் இருப்பதை உணராமலே  வாழ்ந்து மடிகிறோம்.

" வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னை அறியும் முயற்சியில் இறங்கவேண்டும். உடல், மனம், அனுபவம் இவைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு மனத்தின் குகைக்குள்ளே குடியிருக்கும் ஆன்மாவை தேடவேண்டும். ஆன்ம தெரிசனம் கிடைத்தால், அதுவரை 'நான்' க்கு இருந்த அகங்காரம் அடியோடு அழிந்து விடும். வெளிவிஷயங்களில் இருந்த ஈடுபாடு குறைந்துவிடும். மௌனமே பேச்சாகிவிடும். நான் யார் என்கிற தேடுதலுக்கு விடை கிடைத்துவிடும்.

தன்னை அறியாமல், தான் காணும் பிற அனைத்தும்,  ஒரு கட்டத்தில் எந்த பயனும் இல்லாமல் போகும். வெளி உலக அறிவு அனைத்தும் காலத்தால் அழியக்கூடியது. தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறியாமல், அழியும் மற்றவைகளை அறிவதால் என்ன பயன்.  தன் உண்மை வடிவை அறிந்த பிறகு வாழ்க்கையில் மேலும் அறிய வேண்டியது ஒன்றுமே இல்லை என்று தோன்றிவிடும்.  அப்போது அறிபவன்,அறியப்படும் பொருள்,அறிவு மூன்றும் ஒன்றாகி விடும் "  என்று பகவான் ரமணர் உபதேசிக்கிறார்.

எனவே, தியான பயிற்சிக்கு முயற்சிப்போம் பலன்  ஈடுபாட்டை  பொறுத்தே இருக்கும். இருள் தோன்றியதும் ஒளி மறைந்து விடுகிறது. ஒளி தோன்றியதும் இருள் மறைந்து விடுகிறது. பகை தோன்றியதும் அன்பு மறைந்து விடுகிறது. அன்பு தோன்றியதும் பகை மறைந்து விடுகிறது. அதேபோல் மனதில் எண்ணங்கள் இருக்கிறவரை  பிரபஞ்சசக்தி மறைந்து காணப்படுகிறது. பிரபஞ்சசக்தி தோன்றும் போது எண்ணங்கள் மறைந்து விடுகிறது. எண்ணங்களே இல்லாமல் மனம் அசையா திருக்கும் பயிற்சியே தியானம்.

அசையாத பால் உறையும்
அசையாத விதை முளைக்கும்
அசையாத கரு வளரும்
அசையாத மனம் ஆன்மீகமாகும்

அகத்தை தகுதியாக்கி
அகத்தை மவுனமாக்கி
அகத்தை உற்று நோக்கி
அகத்தை தரிசனம் செய்.  

                             --------------------------------------------------------


                                                         
                                 

No comments:

Post a Comment