Friday 14 October 2016

                         தனிமனித பொறுப்புகள் 

உயிரினங்களில் மனித இனம் உயர்ந்தது. காரணம் மனிதனுக்கு மனம் என்பது கூடுதலாக இருக்கிறது. அந்த மனத்தால் சிந்திக்க முடியும் சிந்தித்ததை வெளிப்படுத்தமுடியும்,  சிந்தித்ததை செயல்படுத்தவும் முடியும். மனித சிந்தனை எல்லையற்றது, கட்டுப்பாடற்றது. ஆனால் இயற்கையின் செயல்கள் அனைத்திற்கும் எல்கையும் கட்டுப்பாடும் உண்டு. வெயிலுக்கு மழையும், மழைக்கு வெயிலும் என எல்கையும் கட்டுப்பாடுமாக இருக்கிறது. காற்றிலுள்ள பிராணவாயுவை மனிதனுக்கும், மனிதன் வெளியேற்றும் கரியமலவாயுவை தாவரங்களுக்கும்  என எல்கையும்  கட்டுப்பாடுமாக இருக்கிறது. இது போன்று இயற்கை எல்லாவற்றையும் ஒரு சுழற்சிக்குள் ஏற்பாடு செய்திருப்பதால் இந்த உலகம் ஒரு சீராக எல்கையும், கட்டுப்பாடு  மாக இயங்கி வருகிறது.

மனித மனத்தின் சிந்தனையும் செயலும் இந்த சுழற்சி தத்துவத்தை கடைபிடிப்பது கிடையாது. மனிதன் இயற்கையிலுள்ள பொருட்களில் இருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டாத கழிவுகளை இயற்கை மீது எறிந்து விடுகிறான். மனிதன் இயற்கையின் மீது கொட்டும் கழிவுகளால் ஐம்பொருட்களும் மாசடைவது பற்றியோ, இதர ஜீவராசிகளின் அழிவு பற்றியோ மனிதன் கவலைப்படவில்லை. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது மனிதனுக்கு நன்றாகவே தெரியும். இதன் விளைவு தான் இன்றைய காலநிலை மாற்றங்கள், மாசு, நோய்கள், போட்டி, பொறாமை, வறுமை, ஆடம்பரம், சுயநலம், இல்லாமை, தீவிரவாதம் போன்று பல்வேறு பிரச்சினைகளாய் வெளிப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு, வீட்டுக்குள், தனிமனிதனுக்கு என பலவகையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை அறிவோம். இயற்கை பேணும் எல்கை, கட்டுப்பாட்டு சுழற்சியை மனிதனும் பேணி கட்டுப்பாடுடன் விஞ்ஞானத்தை வளர்த்திருந்தால் வாழ்க்கை அனைவருக்கும் இனிப்பாய் இருந்திருக்கும்.  

அறம் பேணு 
 கடமை என்று வரும் போது பலனை எதிர் பாராமல் செய்வது
ஆதிக்கம் செய்யாமல் அடுத்தவர்  உரிமைகளை மதித்து  நடப்பது.
எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நியாயமாய் நடந்து காட்டுவது .
பிறர் கஷ்டம் உணர்ந்து  தன்னால் இயன்றதை வலிய செய்வது 

இயற்கை பேணு 
சுயநலம் பின்விளைவை கருத்தாமல் போனால்,
                                               சுயநலம் பின்பலனை சிதைத்து விட்டுப்போகும்
பரஸ்பரம் மரியாதையை கருதாமல் போனால்,
                                              பரஸ்பரம் தொடர்பு இல்லாமல் போகும்
உதவும்பொருளை கருதாமல் போனால்,
                                              கருதாத பொருள் உதவாமல் போகும்,
மனசாட்சி கடவுள்பயம் கருதாமல்போனால்.
                                              கடவுள்நீதி மனசாட்சி இல்லாமல் போகும்

உடல் பேணு 
உடல் இயங்கும் விதத்தை தெரிந்திருப்பது
உடலை வழிநடத்த  மனக்கல்வி பழகுவது
உடல் உழைப்பில் விவசாயம் முதன்மையானது
உடல் நலத்திற்கு உணவே மருந்தாக வேண்டும்.

எளிமை பேணு 
விஞ்ஞான வளர்ச்சியால் சுகாதாரம் அழியும்
ஆடம்பர வளர்ச்சியால் வளங்கள் அழியும்
சொகுசு வளர்ச்சியால் வலிமை அழியும்
கட்டுப்பாட்டின் வளர்ச்சியால் துன்பம் அழியும்

விளக்கம் 

அறம் பேணு 
ஒவ்வொரு தனி மனிதனும் பேண வேண்டிய சில பொது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் இனிமையாய் வாழ நம் முன்னோர்கள் நன்னடத்தை, மதிப்பு, ஒழுக்கம் என்கிற சில நற்செயல்களை பொதுவாக்கி அதனை அறம் என்று சொல்லி குருகுல கல்வியில் போதித்தார்கள். ஒவ்வொருவரும் இந்த அறத்துடன் தன குணத்தை ஒப்பிட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவேண்டியது அவரவர் கடமையாகும் என்றார்கள்  .ஆனால், நாம் அப்படி செய்யாமல், நம்மை பிறருடன் ஒப்பிட்டு அவர்களைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ ஆரம்பிக் கிறோம் அறம் கூறும் வழியினை தொலைத்து விட்டு துன்பப் படுகிறோம். தற்கால கல்வி பணம் சம்பாதிக்கும் வழியினை மட்டுமே சொல்லித்தருகிற கல்வியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவோம். மனம் போகும் போக்கில் போவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும், பிறரிடம் பகை கொள்வ தற்கும், பிறரை ஆதிக்கம் செய்வதற்கும், தனது பலத்தால் பிறருக்கு பாதிப்பினை ஏற்படுத்தவும், நிரபராதி யார் என்று விசாரிக்காமல் தண்டிக்கவும், உண்மைகளை மறைத்து சாமர்த்தியம்  பேசுவதற்கும், அனைத்து தரப்பினரும், அனைத்து துறையிலுள்ளவர்களும் எந்த பயமும் இல்லாமல் நடப்பதை கண்கூடாக காண்கிறோம். அறம் என்பதை தனிமனிதன் பேணாமல் போனதால் தனிமனித கட்டுப்பாடுகள் என்பது இல்லாமல் போய்விட்டது. பின்விளைவாக மனஅழுத்தம் நிரந்தரமாகி விட்டது. அது ஒருத்தரை ஒருத்தர் நிம்மதியாக வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

இயற்கை பேணு 
1.நாம் காணும் இயற்கை நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மகாசக்தியின் வெளிப்பாடு என விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் சொல்லுகிறார்கள். மனிதன் பயப்படவேண்டியதற்கு பயந்து வாழவேண்டும் என்பதை பழமொழிகளிலும், நீதிகளிலும் மிக அழுத்தமாய் நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும், மனசாட்சிக்கும், அரசு சட்டங்களுக்கும், இயற்கை நியதி ( தெய்வ நீதி ) களுக்கும் பயந்து வாழ்பவர்கள் அரிதாகி வருகிறார்கள். அதனால், மறுபுறம்  குற்றங்களும், பாதிப்பு களும் அதிக மாகி வருவதை காண்கிறோம். 2.தனக்கு உதவும் இயற்கை பொருட்களை பேணாமல் வளர்ச்சி, முன்னேற்றம் என எல்லா வளங்களும் மாசுபடுவதற்கும், அழிந்து போவதற்கும் அவை நமக்கு உதவாமல் போவதற்கும்  நாமே காரணமாய் இருக்கிறோம். 3.நாம் உறவாடும் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது. நமது வலிமையின் ஆணவத்தால் பிறரின் சுயமரியாதையை அலட்சியப்படுத்தி நடக்கும்  போது நாளடைவில் அந்த உறவு முறிந்து போய் விடுகிறது. 4.தனது ஆசைகள், காரியங்கள் தான் முக்கியம் என சுயநலமாய் நடக்கும் போக்கினால் பின்னால் வரப்போகும் நல்ல தருணங்களை இழந்து விடுகிறோம். நம் கண்முன் இருக்கும் சக மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் என அனைத்தும் மனிதனால் பேணவேண்டிய இயற்கையாகும்.ஆனால், நமக்கு அதுமாதிரி கல்வி தரப்படவில்லை. இது போன்று இயற்கையை பேணுவதை கைவிட்டதினால், வீட்டிலும், நாட்டிலும், உலகிலும் நியாயமற்ற போக்குகள் ஏற்பட்டு தீராத பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே போவதை காண்கிறோம். தனக்கு தேவையான வெளியே காணும் பிற அனைத்தும் இயற்கையை சார்ந்தது. அவற்றை மதித்து, பேணிக் கொள்ளவேண்டியது அவரவர்களின் பொறுப்பாகும் .

உடல் பேணு 
1.வாழ்க்கைக்கு ஆதாரம் உடல். அந்த உடல் இயங்கும் விதத்தை அறிந்து வைத்திருப்பது அனைவர்க்கும் நல்லது. 2.உடலில் முக்கிய மானது ஐம்பொறிகள். அந்த ஐம்பொறிகளையும் ஆட்டிப்படைப்பது மனம். அந்த மனதிற்கு நாம் தான் கல்வி கொடுக்கவேண்டும் ( Educate the Mind ). ஏனென்றால் மனதிற்கு நல்லது-கெட்டது, சரி-தவறு தெரியாது. மனம் ஆசைப்படுவதை எப்படியாவது அடைந்து விட நினைக்கும் ஒரு சக்தி. 3.உடலுக்கு உழைப்பு வேண்டும். உடல் உட்கார்ந்தே இருப்பதற்காக படைக்கப்பட்டது அல்ல. விவசாயம் ஒன்றே மனிதனுக்கும் இயற்கைக்கும் உகந்த ஒரே தொழில். மற்றெல்லாம்  பின்விளைவு உள்ள தொழிலாகும். 4.நாம் உண்ணும் உணவு உடலுக்கு சத்தாகவும், மருந்தாகவும் இருக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு உணவுவகைகளை சொல்லிக்கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் நாம் ருசிக்காகவும், மேலைநாட்டு உணவே சிறந்தது என்றும் உணவே மருந்து என்னும் நல்ல பழக்கத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். அதன் பின்விளைவாக மருத்துவமனைகளும், செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போவதையம் காண்கிறோம். அவரவர் உடலைப் பேணுவது அவரவர்களின் முக்கிய கடமையாகும்.

எளிமை பேணு 

1.தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித இனத்திற்கு நன்மை செய்கிறது என்கிற நோக்கத்தில் மனிதன் விஞ்ஞான - தொழில்நுட்பத்தை எந்த பின்விளைவு களையும் பொருட்படுத்தாமல் வளர்த்துக்கொண்டு போகிறான். ஆனால், இந்த உலகம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மனித சக்தி மட்டுமே உயர்ந்ததும் அல்ல. அதற்கும் மேலே, இயற்கையின் நியதிகள் இருக்கிறது. இயற்கையின் சுழற்சிகள் இருக்கிறது. இயற்கையின் புதிரான மாற்றங்கள் இருக்கிறது. இயற்கையில் பல்வேறு ஜீவராசிகள் இருக்கிறது, மேலும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிதாய் பல்வேறு ஜீவராசிகள் உற்பத்தியாக இருக்கிறது. இவையெல்லாம் மனித சக்திக்கு உட்பட்டதல்ல. மனிதனுக்கு சவால்விடுவதாக கூட இருக்கலாம். அதனால், அளவிற்கு மீறி இயற்கையின் சுகாதாரம் பாதிக்கும் படியான விஞ்ஞான - தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதல்ல. 2. மனித இனம் ஆடம்பரங்களை அனுபவிக்க இயற்கையின் வளங்களை அழித்து இயற்கையின் சமநிலையை சீர்குலையும் படி செய்கிறது. இதை மனித இனம் மட்டுமே செய்கிறது. 3.மனிதனின் சொகுசுக்கு அளவே இல்லை. உணவாகட்டும், படுக்கையாகட்டும், பொருட் களாகட்டும் சொகுசையே நோக்கமாக கொண்டு வியாபாரிகள் புதுப்புது வகைகளை விற்பனைக்கு கொண்டுவருகிறார்கள். அதன் பின்விளைவாக மனிதன் வலிமை இழந்து சிறுவயதிலேயே மருத்துவத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுவதை காண்கிறோம். மனிதனுக்கு மட்டுமே மருத்துவ மனைகள் பெருகிக்கொண்டு போவதே இதற்கு சான்று. 4.கட்டுப்பாடாய் வாழ்வதும் கஷ்டம். மாசடைந்த சுற்றுப்புறத்தில் வாழ்வதும் கஷ்டம். கட்டுப்பாடாய் வாழும்போது மனதில் வலிமையையும், உடலில் தெம்பும் நிறையவே இருக்கும். ஆனால், நாகரீக வாழ்க்கையின் பின்விளைவான பலவீனம், நோய், விலைவாசி, தாழ்வுமனப் பான்மை போன்றவைகள்  வாழ்க்கையை நிம்மதி யில்லாமல் ஆக்கி விடுகிறது.  

மனிதன் பேணவேடியதை பேணாமல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் பல அதிசயங்களை கைக்குள் கொண்டு வருவதால் இந்த இயற்கை இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுமா, மனித பிரச்சினைகள் தீருமா, எல்லா உயிர்களுக்கும் அமைதியான சூழ்நிலை கிடைக்குமா. விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்குநாடு ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. மனிதருக்கு மனிதர் ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. இதனால் இயலாமையும், பொறாமையும், வெறுப்பும் பலவாறாக வெளிப்படுகிறது.

 மனிதன் முதலில் கட்டுப்பாடுகளை பேணவேண்டும். அதாவது, மனிதனது கண்டுபுடிப்புகள் அனைத்தும் இயற்கை சுழற்சி போன்று முழுமை பெற்றதாக இருக்கவேண்டும். அது முடியுமா, நாம் வெகுதூரம் வந்து விட்டோம்.

                          -------------------------------------------------------------