Wednesday 16 March 2016

வாழ்க்கைப் பயிற்சிகள்

                                          வாழ்க்கைப் பயிற்சிகள் 

மனித இனத்தைத் தவிர உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் சுற்றுபுறத்தில் எந்த மாற்றமும் செய்யாமல்  ஒரே மாதிரியான வாழ்கையை வாழ்ந்து மடி கின்றன. மனிதன் மட்டுமே விஞ்ஞானம், தொழில் நுட்பம், வளாச்சி, முன்னேற்றம்  என உலகப் பொருட்களில் மாற்றங்கள் செய்து உலகை மாசு படுத்தி தனக்கு தானே எதிரியாகி வருகிறான்.

மனித மனமானது பழக்கங்களுக்கு அடிமை. விஞ்ஞான கண்டுபிடிப் புகளுக்கு அடிமை. ஒன்றைத் தவறு என்று தெரிந்த பின்பும் அதை தொடர்ந்து செய்வதில்  அடிமை.

நமது பழக்கங்கள், கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் நமது ஆசைகளுக்குப் போடும்   தீனியாகவே இருக்கின்றன. ஆசைகள் மனத்தின் சுகத்தை மைய மாகக் கொண்டு வெளிப்படுவது. ஆசைக்கு அளவில்லை. இவற்றுக் கெல்லாம் பாலமாக இருப்பது பணம். இவ்வாறாக மனித வாழ்க்கை பணம் சம்பதிப்பதற் காகவே தன் ஒவ்வொருநாளையும் செலவு செய்து,  அதிலே வாழ் நாள் முழுவதும் முடிந்து போவதை நாம் அறிவோம். அதன் பரிணாமம் தற்காலத்தில் குழந்தையின் மூன்று வயதிலிருந்தே அதற்கு பயிற்சிகள் ஆரம்பமாகிறது. கடைசியில் பணம் சம்பாதித்தவன் நிம்மதியைத் தேடுகிறான், பணம் இல்லாதவன் துன்பப்படு கிறான். காரணம், மனிதன் தனது மனத்தின் குணத்தையும் பயிற்சி கொள்ள வில்லை, தன்னைக்கட்டுப்படுத்தும் இயற்கையின் நியதிக்கு  பணிவு கொள்ளவும் பயிற்சிக்க வில்லை. பயிற்சி என்பது நமக்கு வேண்டிய ஒன்றை நமதாக்கிக் கொள்வது. பயிற்சி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு தைத்தலும், தட்டச்சும், நீச்சலும், சைக்களும் கூட தெரியாமலிருப்பதை நாம் அறிவோம். பயிற்சி எடுத்துக்கொண்டவர் களுக்கு அவை மிக எளிதாக இருப்பதையும் அறிவோம். தற்காலத்தில் நமக்கு வேண்டிய சில அத்தியாவசிய பயிற்சிகளை பார்ப்போம்.  

கல்விப் பயிற்சி :- கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் என பாடங்களில் அதிகம் மதிப்பெண் வாங்குவதிலே பயிற்சியாய்  இருக்கும் நமது கல்வி, அன்றாட பிரச்சினைகளை, மன அழுத்தங்களை கையாளும் வழிகளை பயிற்சிக்கவிலை. நமது பழங்கால குருகுல கல்வி, பணிவையும், பணிவிடை யையும் சேர்த்தே பயிற்சியாக கற்றுக்கொடுத்தது. அதனால் மனத்தில் ஈகோ என்பது வளரவில்லை. அனைத்து பிரச்சனைகளுக்gகும் ஈகோவே முதல் காரணம். தற்கால கல்வி ஈகோவை களைய கற்றுக் கொடுக்க வில்லை.   
டாக்டர்,    வழக்குரைஞர்,    இஞ்சினியர்,  நிதி ஆலோசகர், விஞ்ஞானி, கல்வி யாளர், நிர்வாக அதிகாரி என எல்லா வல்லுனர்களுக்கும் ஒரே  குறிக்கோள்  பணம்  என்றாகி  விட்டதை    கண்கூடாக   பார்க்கிறோம். பிறரை  ஏமாற்றி  குறுகிய  காலத்தில்  பெரும்    பணக்காரராகுபவர்கள் அனைவரும்   திறமை சாலி என்றாகி விட்டது. மக்களை மக்களே ஏமாற்று கிறார்கள்.  நடத்தை, நேர்மை, ஒழுக்கம் போன்றவைகள் மனதில் நிற்கும் படியான   கட்டாய பயிற்சிகள்  தொழிலில்  இல்லாமற்  போய்  விட்டது. தற்காலத்தில்   பணிக்கு சேரும்  இடங்களில்  நேர்மை, ஒழுக்கங்களை இளைஞர்கள் நேரில் பார்த்து மனதில்  பயிற்சி கொள்ளும், பதிய வைக்கும்  உதாரணத் தலைவர்கள், அதிகாரிகள் இல்லை. சாமர்த்தியம் பேசி தவறு களிலிருந்து தப்பித்துக் கொள் வதுதான் தற்கால உதாரணங்கள்.   வீட்டில், தொழில், அல்லது பணி யிடத்தில் தனது கடமைகளை, அடுத்தவர் உரிமைகளை மதித்து நடக்கும்  பயிற்சிகள் உயர்ந்தவை.

கடமைப் பயிற்சி:-  நாம் பிறந்ததிலிருந்து நமக்கு கடமையும் கூடவே வந்து விடுகிறது. அந்த அந்த வயதிற் கேற்ப  கடைமைகள் புதிது, புதிதாக வந்து சேரு கின்றன. பள்ளிக்கூடம் போவது, வேலைக்குப்போவது, பெற்றோரைக் காப் பாற்றுவது, மனைவியை அங்கீகரிப்பது, குழந்தைகள் படிப்பு , உடன் பிறந்தோரின் படிப்பு, திருமணம் ,  போன்ற பல்வேறு கடமைகள் நிறைவேறுவதும், புதிதாக வருவதும் என வாழ்வின் கடைசி வரை தொடர்ந்து வரும் பொறுப்புக்களாகும். இத்தோடு, தனது ஆரோக்கியம், வருமானம், பிள்ளைகளின் வாழ்க்கை, முதுமை காலத்துக் குரிய  திட்டம்  இவைகளை நோககி முன்னேறுவது போன்றவை  மனிதனின் சவாலான கடமைகளாகும்.   

நிதிப்பயிற்சி:- ஒவ்வொருவருக்கும் கடமையும் இருக்கிறது, முதுமையும் இருக்கிறது. இரண்டிற்கும் தேவை  பணம். ஒன்று செலவு,  மற்றது சேமிப்பு. செலவாகட்டும், சேமிப்பாகட்டும் பல துளி பெரும் பணம். பணம் ஒழுகும் ஓட்டைகளை தெரிந்து அவைகளை அடைத்து முன்னேற்றம் பெற முழு கவனம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். மது, புகை, வட்டி, பிறரின் பாராட்டை விரும்பி, பிறரின் விமர்சனத்திற்கு பயந்து  போன்ற செலவுகளை சிந்தித்து அவைகளை தவிர்க்க வழிகாணுதல். சிறு சேமிப்பு என்பது கூடுதல் வருமானம். கைத்தொழில் நிரந்தர வருமானம். சிறுசேமிப்பை முதலீடாக்க வேண்டும். முதலீடு வளர்ச்சி பெறவேண்டும். காப்பீடு குடும்பத்துக்கு பாதுகாப்பு. நிதியை வளர்ப்பதை குடும்பத்திலுள்ள அனைவரும் தங்களது பொறுப்பாகவும், கடமையாகவும், சிரமமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  நிதி என்பதும் செயல் பட்டால் தான் பெருகும்.

நுகர்வுப்பயிற்சி:- கஞ்சத்தனமாய் நடப்பவர்கள் மீது குறைகள் விழும். சிக்கனமாய் நடப்பவர்களை பாராட்டவேண்டும். ஆடம்பரக்காரர்கள் மீதும், ஊதாரித்தனமாய்  நடப்பவர்கள் மீதும் குற்றம் சேரும். எதற்கு, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என ஆலோசித்து ஆடம்பரத்தை குறைத்து, தனது வருமானத்திற்கு எந்த, எந்த செலவுகள் எல்லாம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது  நுகர்வுப் பயிற்சி.

ஆன்மீகப் பயிற்சி:- கோயிலுக்கு செல்லுதல், வழிபாடு செய்தல், வேண்டுதல்களை நிறைவேற்றுதல், வீட்டிலும் பூஜை, பிரார்த்தனை செய்தல் போன்றவைகள் மட்டும். ஆன்மிகம் ஆகாது. நியாயமாய் நடத்தல், பிறர் உரிமையை மதித்தல், விடாமுயற்சி செய்தல், கடமைகளை செய்தல், எளிமையாய் வாழ்தல், பிற ஜீவன் களிடம் மனிதாபிமானமாய் நடத்தல் போன்ற நற்குணங்களை கடைபிடித்து ஒழுகுவதும் ஆன்மிகபயிற்சியாகும். "இந்த உலகமும், அதில் தோன்றி இருக்கும் அனைத்து படைப்புக்களும் இறைவனின் வெளிப்பாடேயாகும். தனிமனிதனது ஆணவமும், சுயநலமும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றே அனைத்து மதங்களும் போதிக்கின்றன".

உணவுப் பயிற்சி:- கடந்த நூறு வருடங்களில் மின்சாரம், இராசாயனம்  மற்றும்  இயந்திர வளர்ச்சி அசுரத்தன்மையை அடைத்திருப்பதை அறிவோம். இதன் தாக்கத்தால் நாம் உண்ணும் உணவும் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. சரியான உணவு எது, தவறான உணவு எது என்று தெரிந்து கொள்ளுவதற்கே பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு உணவு வியாபாரம் நம்மை ஈர்க்கிறது. மருத்துவ மனைகளும், நோய்களும் பெருகிவருவதன் காரணங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுவதே உணவுப் பயிற்சி.

மனப் பயிற்சி:- மனதிற்கு சரி - தவறு, உண்மை - பொய், நல்லது - கெட்டது பற்றிய கவலை இல்லை. நமது ஆசைகளை நிறைவேற்றி அதை அனுபவிப்பதிலே நோக்கமாய் இருக்கும். பின்விளைவுகளைப் பற்றி நாம் உறுதியாய் இருந்தால் தப்பிக்கலாம். ஆசை, சூழ்நிலை, மனநிலை மூன்றும் சேரும் போது அது யாருடைய மனதாக இருந்தாலும் ( நல்லது - கெட்டது ) கட்டாயமாக நடத்திக்காட்டும்.  நம்மை காப்பாற்றும் வார்த்தைகளை, நம்மை சரிப் படுத்தும் வார்த்தைகளை, நம்மை பயன் படுத்தும் வார்த்தைகளை, நம்மை ஆன்மீகப்படுத்தும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவைகளை மனதுள் சொல்லிக்கொண்டிருக்கும் மனப்பயிற்சியை செய்வது நல்லது.
       
மூச்சுப் பயிற்சி:- உடலுக்கு திட உணவு ( காய்,கனி போன்ற ), திரவ உணவு( தண்ணீர் ), வாயு உணவு( காற்று ) என மூன்று நிலை உணவுகள் தேவைப் படுவதை நாம் அறிவோம். நாம் சரியான முறையில் ஆழ்ந்து சுவாசித்தால் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளே செல்லும். இதனால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் நடக்கின்றன. உடலையும் உயிரையும் பிணைத்து வளர்த்தெடுப்பது சுவாசம். உடலில் உற்பத்தியாகும் 60-80% கழிவுகள் சுவாசத்தின் மூலமே வெளியேறுகிறது. உடலுக்கு ஆற்றல் தரமான இரத்தம். மனதுக்கு ஆற்றல் தரமான எண்ணங்கள். சுவாசம் இரத்தத்தை சுத்தப்படுத்துவதைப்போல், எண்ணங்களையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது என்று நமது ரிஷிகள் சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதும் முதல்படி. மூச்சு குதிரையைப் போன்றது. மனம் அதில் சவாரி செய்பவன். குதிரையை காட்டுப் படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனை கட்டுப்படுத்தலாம் என்கிறார் மனித வடிவில் வந்த இரமண மகரிஷி. சிறு, சிறு மூச்சுப்பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் பயிற்சிப்பது பயனுள்ளதாகும்.

உடற் பயிற்சி:- உடற் பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு தெம்பையும், உணர்சிகளுக்கு கட்டுப்பாட்டையும் தருகிறது. உடற்பயிற்சி நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயை கட்டுப் படுத்தவும் செய்கிறது. உடற்பயிற்சி இரத்தத்தில் கெட்ட கொழுப்பை எரித்து, நல்ல கொழுப்பை அதிக மாக்குகிறது. உடற்பயிற்சி உடலுக்கு வலிமையையும், வளைவுத் தன்மையை யும்,  நீண்டநேரம் தாங்கும் சக்தியையும் தருகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்பொழுதே உடற்பயிற்சியை மேற் கொண்டால், நோய்வரும் வாய்ப்புகள் இருக்காது. தினசரி உண்ணும் உணவுகள் எரிக்கப் படவேண்டும். அவை உடலில் சேமிப்பாக விடக்கூடாது. உடற்பயிற்சியை அலட்சியப் படுத்துபவர்கள் நோய்க்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி அதை செய்யாதவர்கள், இளம் வயதிலேயே முதுமைத் தன்மையை அடைகிறார்கள். வாழ்நாள் முழுவதையும்  நோய்க்காக ஒதுக்குகிறார்கள்.  தான் எவ்வளவு உறுதியாய் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி இல்லையானால் இனிப்பும்,  கொழுப்பும் இரத்தத்தில் அதிக மாகி உடலுள் சேமிக்கப்படுகிறது. வயறு பருமனாகிறது. என்ஸைம்கள் சுரப்பது குறைகிறது. HDL குறைகிறது. LDL & Triglycerides அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பது பலவீன மடைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உட்கார்ந்திருப்பதை நடை பயிற்சி மூலம் ஈடு செய்வதை விட வேறு வழி இல்லை.

ஒற்றுமைப் பயிற்சி:- கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பது முதியோர் வாக்கு. ஒற்றுமை என்பது பரஸ்பரம் மரியாதை, பரஸ்பரம் சகிப்புத்தன்மை. ஆனால்,  இன்று மனித மனத்தை  ஆணவம்,  சுயநலம், பொறாமை, பொய் போன்ற வை சூழ்ந்து கொண்டு விட்டன. தன்னுள் இவை இருப்பது தனக்கு தெரிவதில்லை. தனது தேவை, மனநிலை, சூழ்நிலைக்காகத்தான் உறவுகள் என்றாகிவிட்டது. ஆனால் நாம் ஒவ்வருவரும் ஒவ்வொரு வரையும் சதா மதிப்பீடு செய்து பரஸ்பரம் குறை, குற்றங்களை பதிவு செய்து கொள்கிறோம். சந்தர்ப்பம் வரும்போது  அவைகளை சொல்லி உறவுகளை உடைத்து விடுகிறோம். முதுமை,  இயலாமை வரும் போது ஆதரவுக்காக காத்திருக்கிறோம். உண்மை, உரிமை, நியாயம், சகிப்புத்தன்மை இவைகளை பரஸ்பரம் கடை பிடிக்கும் பயிற்சிதான் ஒற்றுமையை நீட்டிக்கும்.

முடிவுரை:- விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிகளை  நோக்க மாக கொண்டு மனித இனம் வாழும் வரை பணம் முக்கிய தேவையாகவே இருக்கும். அறம், பணிவு, நேர்மை, பரஸ்பரம் மரியாதை போன்றவை ஓரம் கட்டப் பட்டு விடும். இதனால் அன்றாட வாழ்க்கையில்  எல்லாம் இயந்திரமயமாகி எளிதாக இருக்கும். ஆனால், நோய், மன அழுத்தம், ஏமாற்று, பகை போன்றவைகளை கட்டுப் படுத்தமுடியாத படி மனிதன் வாழ்க்கை ஓடும். ஒரு சிலர் கோவில், யோகா, சுற்றுலா, மது என மாற்று வழியில் சிறிது நேரத்தை செலவிடுகிறார்கள்.

ரிஷிகளும், ஞானிகளும் லொளகீக வாழ்க்கையை விரும்பாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்கள். சூட்சம சக்திகளை சிந்தப்பதில் விருப்பம் கொண்டார்கள். பிரம்மம், பிரபஞ்ச சக்தி, ஆத்மா, பரமாத்தமா போன்ற சூட்சம ங்களை  உணர்ந்து விளக்கினார்கள். அதை புரிந்து கொள்வதும் கடினமானது என்றார்கள். விஞ்ஞானிகள் ஸ்தூல சக்திகளை ஆராய்ந்தார்கள். மின்சக்தி, மின்காந்த சக்தி, புவியீர்ப்பு சக்தி, அணுசக்தி போன்ற ஸ்தூல சக்திகள் போன்ற வைகள் புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் எளிதாக இருந்தன. சூட்சம சக்திகளால் உலகுக்கு எந்த கெடுதலும் ஏற்படவில்லை. ஸ்தூலசக்திகளின் பயன் பாட்டால் உலகம் மாசு படுவதற்கு அளவே இல்லாமல் இருக்கிறது. ரிஷிகள், ஞானிகள் சொன்ன இயற்கையை போற்றி வாழும் எளிமை வாழ்க்கையை வாழ நமக்கு சிரமமாய் இருக்கிறது என்று விஞ்ஞான வாழ்க்கையை பற்றிக்கொண்டோம். விஞ்ஞான வாழ்க்கையோ இந்த உலகை மாசுபடுத்தி நமது பிள்ளைகளும், நமது பிள்ளைகளின் பிள்ளைகளும் ஆரோக்கியமாய் வாழ தரமுடன் இருக்குமா என்கிற பயம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கல்வியோடு சேர்த்து வாழ்க்கைப் பயிற்சியையும் கற்றுக் கொண்டு கடை பிடித்தால் ஒழிய மனிதன் அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேறு வழியே இல்லை.

                                             ----------------------------------------------