Wednesday 17 July 2019

இந்து மதம்

தத்துவ ஞானம் என்றால் என்ன பொருள்

தத்துவம் = எக்காலத்திலும்,  எவ்விடத்திலும், எதனாலும் அழியாமல் நிற்கும் பொருள். உண்மைப் பொருள். அது  எது? அதன் இயல்பு என்ன?
ஞானம் = உள்ளதை உள்ளபடி அறிதல்

இந்திய தத்துவம் இன்ன காலத்தில் இன்னாரால் தொடங்கப்பட்டது என்று சொல்லமுடியாத அளவிற்கு மிகப்பழைமையானது. இந்திய தத்துவ ஞானத்தில் புற உலகு முக்கியமில்லை. ஆன்மா தான் ஆராய்ச்சிப் பொருள். ஆன்மாவைத் தெளிவாக ஆராயத்தான் புற உலகு ஆராயப்பட்டது. தத்துவ ஆராய்ச்சிக்கு அடிப்படையாக மனிதனின் துன்பம் பற்றியும், துன்பத்திற்கான காரணங்கள் பற்றியும், துன்பம் போக்கும் வழிகள் பற்றியும் ஆராயப் பட்டன. இந்திய தத்துவ ஞானமும் மனித வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. இந்திய தத்துவ ஞானம் சிந்திப்பதற்கு மட்டுமல்ல முறையாக வாழ்வதற்கும் வழிகாட்டுகிறது.
இந்திய தத்துவ ஞானிகள் தங்கள் அறிவு அனுபவத்துடன் ஒத்துப் பார்த்த பிறகு தான் வேத வாக்குகளை ஒப்புக்கொண்டார்கள்.
தத்துவஞான முடிவுகள் வேதம், உபநிடதம், ஆகமம் என்னும் வடமொழி நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இவை மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல என்ற ஒரு கருத்தும் உண்டு.
இதை ஒப்புக்கொள்வோர் வைதிகர் என்றும் ஒப்புக் கொள்ளாதோர் அவைதிகர் என்றும் அழைக்கப்படலாயினர். வேதாந்தம் தொடர்பாக 12 உட்பிரிவுகள் ஏற்படலாயிற்று.
உலகாயுதம், சமணம், பௌத்தம் என 3ம் அவைதிகர் பிரிவாகவும்,
சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை என 5ம் வைதிகர் பிரிவாகவும்,
அத்துவைத வேதாந்தம் ( சங்கரர் ), இராமனுஜ வேதாந்தம், மத்துவ வேதாந்தம் என வேதத்திற்கு வெவ்வேறு விளக்கம் கொடுத்த 3 பிரிவும்,
வேதாந்தத்தைவிட ஆகமத்தையே கைகொண்ட சைவசிந்தாந்தம் 1 பிரிவாகவும்
ஆக 12 பிரிவுகள் ஏற்படலாயின.
இன்றைய இந்து மதம் சம கோட்பாடுகளை உடைய பல பிரிவுகளை உள்வாங்கி உயர்ந்து பரந்து நிற்கிறது.
.
 
இந்திய தத்துவஞான ஆராய்ச்சியில் விருப்ப முள்ளவர்கள் ஆங்கில நூல் களைத் தான் நாடிப் போகவேண்டிய நிலையில் இருக்கிறோம். தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்  தனக்கு ஏற்பட்ட இந்திய தத்துவ ஞான தாகத்தை தீர்த்துக்கொள்ள பல ஆங்கில புத்தகங்களைத் தான்  மேற்கோள் காட்டி இருக்கிறார்.
மனித வர்க்கத்தின் மிகப் பழமையான கலாச்சாரம் பாரத மக்களின் கலாச்சாரம்.
இந்த கலாச்சாரத்துக் குரிய வித்து இங்கு உருவான வேதங்கள். வேதம் உருவான காலம் தெரியாது. வருடம் தெரியாது. மொழி சமஸ்கிருதம். வடிவம் கவிதை வடிவம். பாதுகாத்தவழி வாய்வழி, செவிவழி.
புத்தகமாக அச்சடிக்கப்பட்ட காலம் 1850 வாக்கில். இந்த தத்துவத்தின் ஆழத்தையும் ஆச்சரியத்தையும் அறிந்த ஐரோப்பியர்கள் மிகுந்த சிரமப்பட்டு சமஸ்கிருதம் கற்று இந்திய வேத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பல புத்தகங்களாக அச்சிட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு விரும்பிய மொழியை கற்பதில் அரசியல். விரும்பிய கலாச்சாரத்தை பேணுவதில் அரசியல். விரும்பிய தெய்வத்தை வழிபடுவதில் அரசியல். ஆனால் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் வேதம். வேதத்தை ஏற்பவர்கள், வேதத்தை எதிர்ப்பவர்கள் என்கிற இரு வகையினர். இன்று பாரதம் முழுவதும் உள்ள கலாச்சாரத்தின் வித்தாக இருப்பதும், ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் அனைவர்  இரத்தத்தில் கலந்திருப்பதும் வேதத்தின் சாரம் தான்.  மேலை நாடுகள் இந்திய கலாச்சாரமே சிறந்தது என்று பேசுகிறார்கள். அரசியல் சூழலால் நாம் நமது கலாச்சாரங்களை இழந்து வருகிறோம்.          –--------------------------------