Tuesday 1 May 2018



கடவுளை எங்கே காணவில்லை.?
மரத்தில் செய்த யானையைப் பார்த்து குழந்தை அம்மாவை கட்டிப் பிடித்துக் கொள்கிறது.
அம்மாவோ அது மரம் தானே பயப்படாதே என்கிறாள். குழந்தைக்கு யானை என்று  தெரிவது அம்மாவுக்கு சிந்தையால் மரம் என்று தெரிகிறது.
உலகப் ( காட்சிகளை)பொருட்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு அவற்றிற்கு காரணமான பரம்பொருள் ( இறைவன்) தெரிவதில்லை. சிந்தையால் இறைவனை உணர்ந்தவர்களுக்கு உலகப் பொருட்களால் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. உலகப் பொருள் மீதுள்ள ஈடுபாட்டை விடமுடியாமல்  இறைஉணர்வு அனுபவம் தேடி அலையும் நம்மால் இறைவனை காணமுடியாது. திரை விலகினால் காட்சி தெரியும் என்பது போல ஈடுபாடு விலகினால் இறைவன் தென்படுவான் என்கிறார் திருமூலர்.
இதற்கு புளியங்காயையும் புளியம் பழத்தையும் உதாரணமாகச் சொல்லுவார்கள்.புளியங்காயானது ஓட்டுடன் பிரிக்க முடியாதபடி ஒட்டி இருக்கும். அதுபோல் நாம் உலகப் பொருட்களுடன் ஒட்டி இருக்கிறோம்.
புளியம்பழமானது தோட்டுக்குள் இருந்தாலும் தோட்டில் ஒட்டாமல் இருக்கும். திருமுறை பாடிய ஞானிகள் புளியம் பழம் போல் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் கோடீஸ்வர காரைக்குடி செட்டியாரான  படடினத்தார் ஆவர். திடீரென துறவியாகி வீட்டை விட்டு வெளியேறினார்.
இறைசக்தி பெற்றார். இறைசக்தி பெற அவர்கூறும் வழி.

உடை கோவணம் உண்டு உறங்க புறந் திண்ணையுண்டு உணவிங்கு
அடைகாய் இலையுண்டு அருந்த தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த பேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.
                                        பட்டினத்தார்.

மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தின் மறைந்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
                                      திருமூலர்.

ஆடம்பரமாய் வாழ அனைவரும் விரும்புகிறோம். அதன் மூலம் சந்ததிகள் வாழ்வை கடினமாக்குகிறோம்.
நிலவளம், நீர் வளம்,தென்றல் வளம், குளர்ச்சி வளம் அனைத்தும் கெடுவதை உணர்கிறோம்.
ஞானிகள் கூறிச்சென்ற வழிகளை மறந்தோம்.

இந்த உலகம் செழிப்பாய் இருப்பதற்கும்  செழிப்பு அழிந்து போவதற்கும் மனிதகூட்டமே காரணம். இன்ப வாழ்விற்கும் துன்ப வாழ்விற்கும் மனித கூட்டமே காரணம். தெய்வம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கிறது. உலகம் செழிப்பாய் இருக்கவும் வறண்டுபோகவும் மனித கூட்டமே காரணம். இதைத்தான் திருமூலரும் உறுதியாய் சொல்கிறார். அன்பே சிவம் என்றார்.
            ______________________

No comments:

Post a Comment