Friday 29 September 2017

திருமூலரின் கடவுள் விளக்கம்-5
( அன்றும் இன்றும் )

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள CERN என்னும் அணு ஆராய்ச்சிக் கூடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் சிலை போன்று ஆறு அடி உயரத்தில் ஒரு நடராஜர் சிலையை 
நிறுவி இருக்கிறார்கள் இன்றைய விஞ்ஞானிகள். அதை கடவுள் சிலை என்பதற்காகவோ, அழகாக இருக்கிறது என்பதற்காகவோ அவர்கள் நிறுவ வில்லை. அவர்கள் கண்டுபிடித்த அணுவின் இயக்கமும் சிதம்பரம் நடராஜ தத்துவமும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதனால் மாத்திரமே நிறுவி இருக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற இயக்கங்கள் சதாநேரமும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அணுத்துகள்கள் தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக, அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதுதான், நடராஜ தத்துவம். நடராஜ தத்துவம் இன்றைய பௌதீகவியலுடன் ஒத்துப் போவது தான் விஞ்ஞானிகளின் ஆச்சரியம்.

இப் போதிருக்கும் சிதம்பரம் கோவில், பதஞ்சலி முனிவர் சொன்ன வடிவத்தின் படி அவரது காலத்தில்  புனரமைக்கப் பட்டது. கோயில் தோன்றிய காலம் பற்றி தகவல்கள் இல்லை. கோயிலில் இருக்கும் நடராஜர் சிலை அப்போதைய மன்னன் கேட்டுக்  கொண்டதற்கிணங்க திருமூலரால் வார்த்துக் கொடுக்கப் பட்டதாக தகவல்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் சிலையின் கால் பெரிய விரல் ஊன்றி இருக்குமிடம் பூமியின் காந்தசக்தியின் மையப்பகுதி என்கிறார்கள்.

திருமூலர் கூறிய கடவுள், அணுக்குள் அணுவாய் சிவனும் சக்தியுமாய் சேர்ந்து இருக்கும் ஒரு வடிவம். அதன் பரிணாமம் தான் இன்றைய பஞ்சபூதங்களும், உயிரினங்களும் ஆகும். அணுவுக்குள் அணுவாய் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் இருக்கிறான், அவனின்றி பிரபஞ்சத்தில் ஓர் அணுவும் அசையாது என்றார்.

சிதம்பரம் கோவிலில் அணுவுக்குள் அணுவாய் இருக்கும் சிவசக்தியை, அதாவது கண்ணுக்குத் தெரியாத அருவத்திற்கும் ( வெட்ட வெளி ) அணுவின் பரிணாம வளர்ச்சி பெற்ற ஐம்பெரும் பூதங்கள் போன்ற அருஉருவத்திற்கும் ( சிவலிங்கம் ), ஐம்பெரும் பூதங்களின் பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த உருவமான மனித உருவத்திற்கும் ( நடராஜர் ) வழிபாடுகள் இன்றளவும் நடை பெற்று வருகின்றன.

இறையருள் பெற்ற 27 ஞானிகள் பாடிய பாடல்களை "பன்னிரு திருமுறை" எனப் போற்றி பெருமை படுத்தப் பட்டுவருகின்றது. இதில் திருமூலர் பாடிய பாடல்கள் "திருமந்திரம்" என்கிற தலைப்பில் பத்தாவது திருமுறையாக இருக்கிறது. இறையருள் பெற்ற பல ஞானிகளின் பாடல்களில் சிதம்பரம் கோவில் இடம் பெற்றிருக்கிறது.இந்த பன்னிரு திருமுறையை நமக்கு கிடைக்கச் செய்த பெருமை மன்னன் இராஜ ராஜ சோழனைச் சாரும். அதனை அனைவருக்கும் கொண்டு சென்றவர் சேக்கிழார் ஆவர்.

அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது. அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் அது தான் அணு. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் கடவுள் அணு என்ற ஒன்று இருக்கிறது என்றால், அணு எந்த அளவுக்கு சூட்சமமானது.

சிவனும், சக்தியும் சேர்ந்தே இருக்கும், அவை பிரிந்திருக்காது என்று ஞானிகள் கூறியதை, விஞ்ஞானம் இன்று அணுவைப் பற்றி கூறும் போது, அணுவின் மையப்பகுதியை proton என்றும், அதை ஒட்டி சுழலும் இயக்கத்தை electron என்றும் அவ் விரண்டும் சேர்ந்தே இருக்கும் பிரிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். அணுத்துகள் களின் சுழற்சியின் சுற்றாத மையப்புள்ளியே " சிவம்" என்கிற static energy ( நிலைச்சக்தி ) அது செயல் இல்லாமல் இருக்கிறது. அதை சுற்றியுள்ள சுழற்சியே " பராசக்தி" என்கிற kinetic energy (செயல்சக்தி)  இதன் சுழற்சியினால் ஏற்படுபவை gravitational force ( ஈர்ப்பு ஆற்றல் ), மற்றும் repulsive force ( தள்ளும் ஆற்றல் ) ஆகும். இவற்றின் விளைவுகளாக ஏற்படும் மற்றோர் ஆற்றல் தான் electro magnetic force ( மின் காந்த சக்தி) ஆகும்.  இந்த இயக்கங்களை உள்ளடக்கிய உதாரணம் தான் சிவலிங்க ( சோமாஸகந்தர் ) வடிவம். விண் வெளியில் காணப்படும் Black Holes சிவலிங்க வடிவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்க விஞ்ஞானி கார்ல் சகன் (1934- 1996) என்பவர் பிரபஞ்சத்தைப் பற்றி 13 எபிசோடுகள் தயாரித்தார். அதில் 10 வது எபிசோடான The edge for ever என்பது சிதம்பரம் நடராஜ தத்துவம் பற்றியது.

அமெரிக்க பௌதீக விஞ்ஞானியான Dr. பிரிட்ஜாப் காப்ரா என்பவர் 1972ல் The Dance of Shiva: The Hindu View of Matter in the light of Modern Physics என்று ஒரு கட்டுரை எழுதினார். அதைப் படித்து பயனடைந்தவர்கள் அனைவரும் அவரது கட்டுரையை பாராட்டினார்கள். 1975ல் சிதம்பரம் நடராஜர் நடன த்துவத்தை விளக்கி The Tao of Physics என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் 23 மொழிகளில் 43 பதிப்புகளுக்குமேல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு கோவில்களை காண்பதற்கென்றே காப்ரா குடும்பத்துடன் இந்தியா வந்து சென்றார். அணுத்துகள் விஞ்ஞானம் கற்போர் நடராஜ நடனத்தை முதலில் கற்று அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் காப்ரா.

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவின் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் உலக விஞ்ஞானிகள் அனைவரும் அதிசயத்து வியக்கின்றனர்.

ரஷிய விஞ்ஞானி Dr. விளாதிமீர் என்பவர் இதே வகையான ஆராய்ச்சியில் ஈடுபடும் போது சிவலிங்க உருவம் வழிபாட்டிற்கு எப்படி வந்தது என ஆராய்ந்தார். சிவலிங்க உருவம் உலகின் எல்லா இடத்திலும், பூமிக்கு அடியிலும் இருக்கிறது என்கிறார். பூமியிலிருந்து கிடைத்த சுயம்பு ( தானாக கிடைத்த ) சிவலிங்கங் களை வழிபட ஆரம்பித்தனர் ஆதிவாசிகள் என்கிறார். சிவலிங்கத்தினுள் இருக்கும் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் அதனை வழிபடுபவர்கள் இப்பொழுதும் முழுமையாக அறிய வில்லை என்கிறார் விளாதிமீர்.

அன்று பாதிரியாரான ஜி.யு. போப் பைபிளை பரப்புவதற்கு தமிழ்நாடு வந்தார். அதற்காக தமிழ் கற்றார். தமிழர்களின் பக்தி பற்றி அறிய  திருக்குறள், திருவாசகம் வாசித்தார். அவர் ஊருக்கு போகும் போது திருவாசகத்தையும் எடுத்துப் போனார். திருவாசகம் என் எலும்பையெல்லாம் உருகச் செய்கிறது என்று நண்பர்களிடம் அடிக்கடி கூறி பரவசப் பட்டார். பிறகு, நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று தனது எண்பதாவது வயதில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நமது ஞானிகளின் மெய்ஞானத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

சிவன் கொண்டிருக்கும் புலித்தோல், உடுக்கை, கங்கை, பிறை, பாம்பு,சாம்பல் பூச்சு, நெருப்பு அனைத்தும் அர்த்தங்களைக் கொண்டது. தத்துவங்களால் ஆனது. அதனை ஆராய்ந்தவர் களுக்கும் பயனபடுத்தி கொண்டவர்களுக்கும் தான் அவை ஏற்படுத்தும் தாக்கம் புரியும். எதிர் மதத்தினராலும், கடவுள் எதிர்ப் பாளர்களாலும் முழு உண்மையும் தெரியாமல் இது தான் கடவுளா என்று கேலியும், அனர்த்தம் செய்தும் நையாண்டி செய்தார்கள், கோவில் சொத்துக்களை களை எல்லாம் கொள்ளையடித்துப் போனார்கள். அதே சிவனின் நடராஜ உருவம் இன்றைய CERN விஞ்ஞானிகளுக்கு உதராணமாகி இருக்கிறது என்பது நமது ஞானிகளின் விஞ்ஞானத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரம். அணுவுக்குள் இருக்கும் அணுவைத்தான் CERN ஆராய்ச்சிக்கூடம் ஆராய்ந்து தேடிக்கொண்டிருக்கிறது.20000 கோடிக்கு மேல் பணச்செலவில், பல ஆயிரக்கணக்கான உலக விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.


அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகருக்கு
புறம் அறியார் பலர் பொய் மொழிகேட்டு
மறம் அறிவார் பகை கேட்டு மன்னி நின்றாரே
........திருமூலர்.

தமிழ் ஞானிகளின் பெருமைகள் வாழ்க
ஞானிகளின் தமிழ்ப்   பாடல்கள் வாழ்க
ஞானப்  பாடல்களின்  பயன்கள்  வாழ்க
ஓம்      நமசிவாய     வாழ்க.
                                   ----------------------------

No comments:

Post a Comment