Saturday 23 September 2017

                                 திருமூலரின் கடவுள் விளக்கம்-4
                                         ( வழிகாட்டுப் பாடல்கள்)


31.தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
     தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
     தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
     தன்னையே அர்ச்சிக்க தானிருந்தானே.

( மனிதர்கள் "நான் யார்" என்று தனக்குள்ளே விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம் ஞானிகள் கூறுகிறார்கள். நான் என்பது உடலையோ, மனதையோ, உயிரையோ குறிப்பதில்லை . உடலிலுள் இருக்கும் ஜீவாத்மாவைத்தான் "நான்" என்று அனைவரும் கூறுகிறோம். தன்னை யார் என்று அறிந்து கொண்டால் தன்னையே வணங்க ஆரம்பித்து விடுவோம்.)

32.அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
     பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
     உண்டி சுருங்கில் உபாயம் பல உள
     கண்டங்கறுத்த கபாலியுமாமே.

(உடல் சுருங்க,சுருங்க ஆரோக்கியமாகும்.குறைவாக உண்பதால் பல நன்மைகளை பெறலாம்.நீல நிற முடைய கழுத்தும், கையில் மண்டை ஓடும் சுமந்திருக்கும் சிவன் போல் ஆகலாம்.)

33.காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
      மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
      கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
      கோலை வீசி குலாவி நடப்பானே.

(காலையில் முதல் உணவாக இஞ்சியும், மதிய உணவிற்கு முன் சுக்கும், இரவில் கடைசி உணவாக கடுக்காயும்  ஒரு மண்டல நாட்கள் சாப்பிடுபவரகள் இளமையுடன் வாழ்வார்கள்.)

34.சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
      சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா
      சூரியன் சந்நதியில் சுடுமாறு போல
      ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே.

(சூரிய காந்த கல்லுடன் பஞ்சினை சுற்றி வைத்தால் பஞ்சு வைத்தபடியே இருக்கும். அதனையே சூரிய வெய்யிலில் வைத்தால் சூரிய காந்தக்  கல் நெருப்பு கனலாகி பஞ்சினை எரித்து சாம்பலாக்கி விடும். அதேபோல் இறைவனையே எண்ணி வாழ்பவர்களுக்கு இறைவன் அருள் கிடைத்தால் ஆணவம்,சுயநலம்,பேராசை, நெறிதவறி நடத்தல் போன்ற அனைத்து மலங்களும் தானே நீங்கி விடும்.)

35.அஞ்சும் அடக்கு அடக்கென்பர் அறிவிலார்
     அஞ்சும் அடக்கும் அமர ரும் அங்கில்லை
     அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
     அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே.

(ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் என்பார்கள். அப்படி யாராலும் அடக்கி வாழ முடியாது. அப்படி அடக்குவதும் ஆபத்தானதாகும்.ஐந்தையும் அடக்காமல் வாழும் அறிவை நான் அறிந்திருந்தேன். ஐம்புலனுக்கும் தலைவனான மனம் செயல்படும் விதத்தை அவர் அறிந்திருந்தார். மனத்தை கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகளை பழகினார்.அதனால் ஐம்புலன்களும் ஆன்மீக நெறியினை கடைபிடிக்க அவருக்கு உதவியாய் இருந்தன.)

36.படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
      நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
      நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
      படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

(கடவுளுக்கு படைக்கும் உணவானது பசியுள்ள ஒரு உயிரின் பசியை தீர்த்து வைக்காது.
 உயிர்களுக்கு (ஆபத்திற்கு,அவசரத்திற்கு) செய்யும் எந்த உதவியானாலும், உணவானாலும் அது கடவுளைச் சென்று அடைந்துவிடும்)

37.ஆர்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்
      பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
     வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
     காகம் கரைந்துண்ணும் காலம் அறிமின்.

(அவர் இவர் என்று பாராமல் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். பசித்துப யாராவது வருகிறார்களா என பார்த்து உண்ணுங்கள். மீதி இருப்பது நாளைக்கு ஆகும் என்று பசித்தவர்களுக்கு கொடுக்காமல் பாதுகாத்து வைக்காதீர்கள். சாப்பாட்டு பிரியர்கள் சீக்கிரமாகவே அத்தனையும் சாப்பிட்டு விடாதீர்கள். காகத்தைப் போல் கொடுத்து உண்ணுங்கள்.)

38.யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
     யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
     யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
     யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தனே.

(எல்லோரும் ஒரு பச்சிலை அர்ச்சித்து இறைவனை வணங்குங்கள். பசு போன்று ஒரு ஜீவராசிக்கு ஒரு வாய் உணவளியுங்கள். பசித்த ஏழைக்கு உணவு கொடுங்கள். யாரிடம் பேசினாலும் நன்மையான வற்றை பேசுங்கள்.)

39.நடுவுநின்றார்க் கன்றி ஞானமும் இல்லை
      நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை
      நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
      நடுவுநின்றார் வழி நானும் நின்றேனே.

( அநியாயம் செய்யாமல் ஒதுங்கி இருங்கள். நியாயமாய் இருங்கள். அது இல்லாமல் ஞானம் என்பது வராது. நியாயமாய் நடப்பவர்களுக்கு துன்பம் வராது.நியாயமாய் நடப்பவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். நியாயமாய் நடப்பவர்கள் வழியில் நானும் வாழ்ந்தேன்.)

40.பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும்
     பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
     பெறுதற்கு அரிய பிராணிகளெல்லாம்
     பெறுதற்கு அரிய தோர் பேறிழந்தாரே.

( மானுடப் பிறவி மிகவும் அரிதான ஒன்று. மானுடப் பிறவியில் இறைவனைப் போற்றி வணங்குவது அரிதான ஒன்று. மிகவும் அரிதான இறைவனை வாழ்த்தி வணங்கும் பேறினை இழந்தவர்கள், அரிய வகையான பிராணிகளைப் போன்றவர்கள்.)


41.ஓங்கார ஜபமே மூலாதாரம்
     ஓங்கார ஜபமே ஜீவாதாரம்
     ஓங்கார ஜபமே சர்வாதாரம்
     ஓங்கார ஜபமே ஓம் ஓம் ஓம்.

( இப் பிரபஞ்சம் முழுமையும் நிறைந்திருக்கும் ஒரு ஒலி ஓம். விண்வெளியில் இந்த ஒலி ஒலித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி செய்கிறார்கள். இந்த ஒலியை ஜெபித்துக் கொண்டிருப் பவர்களின் உடல் ஆரோக்கியம் பெறும், மனம் அமைதி அடையும் என்பது ஞானிகளின் வழி காட்டுதல்.)


42.கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
     கல்லா அரசனின் காலன் மிக நல்லான்
    கல்லா அரசன் அறமும் ஓரான் கொல் என்பான்
    நல்லாரை காலன் நணுகி நின்றானே.

( நீதி நேர்மையுடன் ஆட்சி செய்வதை கற்றுத் தெளியாமல் ஆட்சிக்கு வரும் அரசனும், காலனும் ஒரு வகையினர். இருப்பினும் கல்லா அரசனைவிட காலன் நல்லவன்.கல்லாத அரசன் அறத்தை கடைபிடிக்க மாட்டான், மக்களை கொடுமைகளுக்கு ஆளாக்குவான். ஆனால், நல்லவர்களை காலன் துன்புறுத்த மாட்டான்.)

43.குருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்
      குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
      குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
      குருடும் குருடும் குழி விழுமாறே.

( தனது தவறுகளை சுட்டிக் காட்டி, சரியான வழிகளை எடுத்துச் சொல்லும் பெரியவர்களை துணையாக கொள்ள வேண்டும்.அப்படி துணை கொள்ள வில்லை என்றால் தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களும், குணங்களும், ஆசைகளுமே தனது வாழ்க்கையாக இருக்கும். அதன் பின் விளைவான அத்தனை துன்பங்களும் வந்து சேரும்.)

44.ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
     தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
      வாசவன் பீடமும மாமன்னர் பீடமும்
     நாசமது ஆகுமே நம் நந்தி ஆணையே.

(கோவில்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்று பக்தர்கள் இதயம் வேதனை அடைந்தால் நாடும் அதன் சிறப்புகளும் அழிந்து போகும்.ஆட்சி செய்பவர்களும், அதிகாரிகளும் நாசமாய்  போவார்கள். இது சிவனின் ஆணை.)

45.ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு
     பேரை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
     சூறையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
     நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.

( சிறியவர்-முதியவர், ஆண்-பெண்,ஏழை-பணக்கார ர் என எந்த வித்தியாசமும் பாராமல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருவது மரணம். மரணம் நிகழ்ந்த மறு நிமிடமே அது வரை இருந்த பெயரை நீக்கி விட்டு பிணம் என்று கூற ஆரம்பித்து விடுவார்கள். முதல் ஒரு மணி நேரம் தான் இறந்து போன அதிர்ச்சியும், அழுகையும் இருக்கும். பிறகு உறவினர்கள் கூடி எப்போது எடுக்கலாம் என்று முடிவெடுத்து ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் கொண்டு போய் எரித்து விடுவார்கள்.வரும் வழியிலே குளித்து விட்டு அப்போதிருந்தே மறக்க ஆரம்பித்து விடுவார்கள். இது தான் வாழ்க்கையின் உண்மை நிலை.)

                               -------------------------------------


No comments:

Post a Comment