Thursday 21 September 2017

                                           திருமூலரின் கடவுள் விளக்கம்-1

திருமூலர் ஒரு சிறந்த யோகி, ஞானி, ரிஷி, சித்தர், மருத்துவர்,விஞ்ஞானி, இறைவனை தன்னுள் கண்டவர்,பிற மனிதர்களுக்கு வழிகாட்டி என பலவாறு அவரைப்பற்றி உயர்வாகப் பேசலாம். அனைத்திற்கும் அவர் தகுதி உடையவர். அவர் வாழ்ந்த காலத்தை யாராலும் உறுதியாக கூறமுடிய வில்லை. ஆனால் அகத்தியர், பதஞ்சலி முனிவர் போன்றோர் வாழ்ந்த காலத்தில் திருமூலரும் வாழ்ந்தார் என்பதற்கு பல குறிப்புகள் உள்ளன. எனவே ஒரு 3000 வருடங்களுக்கு முற்பட்டவர் என எடுத்துக் கொள்ளலாம்.

கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பது பற்றி தலைமுறை, தலைமுறையாக விவாதங்கள் நடை பெற்று வருகின்றன.கருணையான, ஆச்சரியமான சம்பவங்கள் தனது வாழ்க்கையில், உலகில் நடக்கும் போது அதை தெய்வாதீனம் என்று கடவுள் இருப்பை உறுதி செய்கிறோம். கொடுமையான, அதிர்ச்சியான சம்பவங்கள் தனது வாழ்வில், உலகில் நடக்கும் போது தெய்வம் இருந்தால் இப்படியெல்லாம் நடப்பதை அனுமதிக்குமா என்று பேசுகிறோம்.

கடவுள் என்னும் ஒரு மறை பொருள் சக்தியின் செயல்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்கின்றனர் நமது ஞானிகள். அது அணுவுக்குள் அணுவாய்  இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருந்து தனது சட்ட திட்டங்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. உலகப் பொருட்கள் அனைத்தும் அதனுள் மூழ்கி கிடக்கின்றன. இறை சக்தியானது எங்கும் நிறைந்திருந்தும் தெரியாத மறை பொருளாய் இருக்கிறது.

இயற்கையில் காணும் உயிரினங்களில் மனித இனம் மிக உயர்ந்தது. மனித இனத்தால் விஞ்ஞான வழியில் வாழ்ந்து துன்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும், மெய்ஞ்ஞான வழியில் வாழ்ந்து துன்பத்தை குறைத்துக் கொள்ளவும் முடியும்.

அணுவுக்குள் அணுவாய் இருக்கும் கடவுளை திருமூலர் எளிய பாடல்கள் மூலம் விளக்கியிருக்
கிறார். எல்லோரும் கடவுளை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல உதாரணங்களால் விளக்கி இருக்கிறார்.அவருக்கு பின்னால் வந்த இறை ஞானிகளும் அந்த உதாரணத்தினை ஏற்று கடவுளை போற்றி வாழ்த்தி வழிபட்டு வந்திருக்கின்றனர். இன்று அந்த உதாரணங்கள் தான் கடவுள் என்று அரை குறையாய் நம்பி தேவைக்கேற்ப நாம்மில் பல பேர் உதாரணங்களை வழிபட்டு வருகிறோம். இன்னும் பலர் அந்த உதாரணங்களை ஏற்காமல் விவாதம், விமர்சனம் செய்து வருகின்றனர். கடவுளை பயன் படுத்திக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு திருமூலரின் இந்த பாடல்கள் அவர்களது கடவுள் நம்பிக்கையை மேலும் திடமாக்க உதவும்.உறுதியான நம்பிக்கை இல்லாத வரைஇறைவனை பயன்படுத்திக் கொள்ள முடியாது.
                                                                                                          ...............தொடரும் 2
                                         





கடவுள்




No comments:

Post a Comment