Thursday 21 September 2017

                              திருமூலரின் கடவுள் விளக்கம்-2

1.அணுவின் அணுவினை ஆதிபிரானை 
  அணுவின் அணுவினை ஆயிரம் கூறிட்டு
  அணுவின் அணுவினை அணுகவிலார்க்கு
  அணுவின் அணுவினை அணுகலுமாமே.

(அணுக்குள் அணுவாய் இருப்பவன் இறைவன்.
இறைவனை பார்க்கவேண்டும் என்பவர்கள்
அணுவை ஆயிரம் கூறுபடுத்தினால் வரும் உப அணுவை 
பார்த்தால் இறைவனை காண்பார்கள்.)

2.உருவின்றியே நின்று ருவம் புணர்க்கும்
   கருவின்றியே நின்று தான் கருவாகும்
   அருவின்றியே நின்ற மாயப் பிரானைக்
   குருவின்றி யாவர்க்கும் கூடவொண்ணாதே.

( இறைவன் அருவமாய் இருந்தாலும் சகலவடிவங்களிலும் கலந்திருக்கக்கூடியவன்.
  தனக்கு எதுவும் மூலமாய் இல்லாமல், தான் பிற எல்லாவற்றிர்க்கும் மூலமாய் இருப்பவன்.
அருவமாய் இருந்தாலும் பிற உருவங்கள் மூலம் செயல்பட்டு மாயமாகிறவன்.
சிலருக்கு, சிலவழியில் குருவாய் இருந்து அருள்பவன்.)

3.அந்த மிலானுக்கு அகலிடந்தான் இல்லை
   அந்த மிலானை அளப்பவர் தாம் இல்லை
   அந்த மிலானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
   அந்த மிலானை அறிந்துகொள் பத்தே.

   ( முடிவற்ற சக்தியை உடைய இறைவனுக்கு குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இல்லை.
      எவரும் அவன் அளவை அளந்து சொல்லவும் முடியாது. அவனை விளக்கும் சரியான சொற்களும் இல்லை.அவனை அனுபவத்தால் அறிந்து கொள்ளுங்கள்.)

4.கரந்தும் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் 
    பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
    அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
    விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

   (அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன். கண்ணுக்குத் தெரியாதவன்.
   பரந்த சடையும், பசும் பொன் நிறமும் உடையவன்.அவனை நினைக் காதவர்களிடம்         நெருங்க மாட்டான்.எளிதாக பார்த்தால் வெண்ணிலவைப் போன்றிருப்பான்.)

5.ஆதிபடைத்தன ன் ஐம்பெரும் பூதம்
    ஆதிபடைத்தன ன் ஆசில் பல் ஊழி
    ஆதிபடைத்தன ன் எண்ணிலி தேவரை
    ஆதிபடைத்தவை தாங்கி நின்றானே.

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என ஐம்பெரும் பூதங்கள்தோன்ற காரணமாய் இருந்துஅவற்றோடுகலந்திருக்கிறான்.காலநேரம்ஏற்படகாரணமானான்.உயிர்களும்,
உயர்ந்தவர்களும் தோன்றக் காரணமானான். உலக படைப்புகளை கண்காணித்து வருகிறான்.)

6.உடலாய் உயிராய்உலகம் அது ஆகி
    கடலாய்க் கார்முகில் நீர்பொழிவான் ஆய்
    இடயாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி
    அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

( உடலாகவும், உயிராகவும், உலகமாகவும்,கடலாகவும்,இருண்ட மேகமாகவும்,
 மழைநீராய் கொட்டுபவனாகவும் இவைகளுக்கெல்லாம் இடைப்பட்ட வனாகவும்
அழியாதவனாயும், எங்கும் நிறைந்திருப்பவனாயும்,பிற வழிகளாகவும் இறைவன் நிற்கிறான்)

7.எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
  எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
  எங்கும் சிவமாய் இருத்தாலால் எங்கெங்கும் 
  தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.

( அணுவுக்கு அணுவான உடலுடன், சக்தி பூர்வமாய், சிதம்பர இரகசியமாய், ஐந்தொழில் புரிபவனாய், இறைவனாய் பிரபஞ்சம் முழுவதும் தன் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அணுவின் மையத்தில் புரோட்டனாக இருப்பதை சிவம் எனவும், புரோட்டானை ஒட்டினாற் போல் சுற்றும் எலக்டிரானை சக்தியாகவும், ஆக இறைவனை உணரலாம்)

8.ஒன்று கண்டீர் உலகுக் கொரு தெய்வமும்
    ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
    நன்று கண்டீர் இனி நமசிவாயப் பழந்
    தின்று கண்டேற்கிது தித்தித்த வாறே.

(அணுவுக்குள் அணுவான தெய்வம் ஒருவன் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருப்பதை உணரலாம்.அவனே இந்த உலக இயக்கத்துக்கு உயிராக இருப்பதையும் உணரலாம். சரியாக உணர்ந்தவர்கள் ஒரு கனியின் சுவை போன்று இறைவனை உணர்வார்கள்.கனி தித்திப்தைப் போல நமசிவாய இறைவனையும் உணரும் போது பெரு மகிழ்ச்சி அடைவார்கள்.)

9.மரத்தை மறைத்தது மாமத யானை
   மரத்தின் மறைந்தது மாமத யானை
   பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
   பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.

( மரத்தில் செய்யப்பட்ட தத்ரூபமான யானையை பார்க்கும் போது யானை செய்யப் பட்ட மரம் நினைவிற்கு வருவதில்லை. அந்த மரத்தை மட்டும் நினைக்கும் போது யானை நினைவுக்கு வருவதில்லை. இந்த உலகப் பொருட்களையும்,உயிரினங்களையும் பார்க்கும் போது பொருட்களும், உயிரினங்களும் உருவாக்க் காரணமான அணுவுக்கும் அணுவான அந்த பரம்பொருள் நினைவிற்கு வருவதில்லை. பரம் பொருளை ஊன்றி நினைத்தால் உலகத்தில் கண்ட எதுவும் நினைவிற்கு வருவதில்லை.)

10.தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
     வானுக்குள் ஈசனைத்தேடும் மதியிலீர்
     தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தால் போல்
     ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

( தேனின் சுவைக்கு உருவம் கிடையாது. பேரின்ப தெய்வமான ஈசனுக்கும் உருவம் கிடையாது.சொரூபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறிவின்மையாகும். தேனுள் சுவை சேர்ந்திருப்பது போல் உடலுள் ஈசன் உள்ளான்.)

11.தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு
    தாயினும் நல்லன் தாழ் சடையோனே.

இறைவன் தீயைவிட வெப்பமானவன். தண்ணீரைவிட குளிர்ச்சியானவன்
                            (கடுமையானவன்- கருணையானவன்)
குழந்தையை போன்று, தாய்மையை போன்று நல்லவன். நல்ல அடியார்களுக்கு நெருக்கமானவன்.)

12.கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
     கண்காணி இல்லாத இட மில்லை. காணுங்கால்
     கண்காணியாக க்கலந்தெங்கும் நின்றானைக்
    கண் காணி கண்டார் களவொழிந்தாரே.

( தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று பல திருட்டுத் தனங்களைச் செய்பவர்கள்உண்டு.
இறைவனின் கண்காணிப்பு இல்லாத இடமே இல்லை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து விட்டவர்கள் திருட்டுத் தனமாக கூட எந்த தப்பையும் செய்யமாட்டார்கள்.)

13.உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை 
     உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
     உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
     உள்ளம் அவனை உருவறி யாதே.

(ஜோதி வடிவாகவும் உள்ளத்தில் தோன்ற க்கூடிய இறைவன் உள்ளத்திலேயே இருந்தும் உள்ளத்தில் வேறு வகையான வேட்கைகள் நிரம்பி இருக்கும் வரை உள்ளம்  இறைவனை உணர்வதில்லை)

14.சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
    அவனோடு ஒப்பார் இங்கே யாவரும் இல்லை
    புவனம் கடந்தன்று  பொன்னொளி மின்னும்
    தவனச் சடைமுடி தாமரையானே.

( அணுவுக்குள் அணுவான பொன்னிற மான இறைவனுக்கு சிவன் என்று பெயர் சூட்டினார்கள். அந்த சிவனுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. அவன் பிரபஞ்சம் முழுவதும் ,அண்டம் கடந்தும் பொன் போன்று பிரகாசித்து நிற்பவன். அவன் அன்பர்களின் நெஞ்சத்தாமரையிலும் உறைகிறவன்)

15.ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
     நின்றன ன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
     வென்றன ன் ஆறு விரிந்தன ன் எழும்பர்ச்
    சென்றன ன் தானிருந்தான் உணர்ந்தெட்டே.

    (இறைவன் ஒருவனே. அறம்,மறம் என இருவழிகளில் இறைவன் உயிர்களுக்கு அருள் கிறான்.பதி, பசு, பாசம் என மூன்றாகி நின்றான். நான்கு வேதங்களாலும் உணர்த்தப் படுகிறான்.ஐம்புலன்களின் தாக்கம் அவனிடம் கிடையாது. உயிர்களுக்கு ஆறு அறிவைக் கொடுத்து சரி-தவறை கண்காணிக்கிறான். மனிதனின் ஏழாவது சக்கர ஸ்தானத்தில் மனிதனின் உய்வை வைத்தான்.ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,நிலம், சூரியன்,சந்திரன்,ஆன்மா ஆகிய எட்டையும் உணர்ந்து ,போற்றி, கேடு ஏற்படாமல் பயன் படுத்தி மனிதன் வாழவேண்டும் என்பது அவன் கட்டளை.) பாடல் களுக்கு்பல விதமான விளக்கங்கள் உள்ளன.
                                                                                  ....................தொடரும்.3

   




No comments:

Post a Comment