Wednesday 21 October 2015

நினைப்பும் உடல்நலமும்

                                         நினைப்பும் உடல்நலமும்

உடல் மனதின் வேலையாள். உடல் மனதிற்கு கீழ்படிந்து நடக்கிறது. சுற்றுப்புறம் உடல்நலத்தைப் பாதிப்பது போல் நினைப்புகளும் உடல் நலத்தைப்  பாதிக்கிறது. நியாயமற்ற நினப்புகளால் உடல் துரிதமான நோய்க்கும் அழிவிற்கும் காரணமாகிறது. உற்சாகமான நல்லெண்ணங்கள் உடலின் இளமையையும் ஆரோக்கியத்தையும் காக்கிறது.

நோயைப் பற்றிய மாறாத பயம் நோய்க்கு ஆட்படுத்துகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது. பரிதவிப்பான எண்ணம் உடல்முழுவதையும் கெடுத்து விடுகிறது. சுத்தமில்லாத நினைப்புகளை மனதில் அடைகாக்கும் பொழுது அது செயலாகாவிட்டாலும் நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறது.
உடலானது மிகவும் மென்மையான, மற்றும் சுருங்கு தசைகளாலானது. எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியது. எண்ணங்களின் தன்மைக்கேற்றபடி மாற்றமடையக்கூடியது. உறுதியான, சுத்தமான, மகிழ்ச்சியான எண்ணங்களால் தசைகள் சக்தியும், மென்மையும் பெறக்கூடியது. நல்லெண்ணங்களை உடையமனம் நல்ல இரத்தத்தையும், நல்ல வாழ்க்கையையும் அமைக்க முயற்சிக்கும். எண்ணங்களை மாற்றாமல் உணவுகளை மட்டும் மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.

மனதில் சுத்தாமான எண்ணங்களை உடையவர்கள் ஒருபோதும் அசுத்தமான உணவுகளுக்கு ஆசை படமாட்டார்கள். சுத்தமான எண்ணம் உடலை சுத்தமாக்கும். உற்சாகத்தை தரும் எண்ணங்கள் என்பவை ஒரு மருத்துவரைப் போன்று உடலை ஆரோக்கியப்படுத்தும்.

சந்தோசம், கவலை, கோபம், பயம் போன்ற எண்ணங்களை முகம் பிரதிபலிக்கிறது. கவலையால் நெற்றி சுருங்குகிறது. மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்கிறது. இவைகளை நாம் முகத்தில் நேரில் காண்கிறோம். உண்மையில் இந்த உணர்வுகளால் உடல் முழுவதும் தாக்கம் பெறுகிறது. எண்ணங்களின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு உறுப்பு களும் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கம் பெறு கின்றன.

எண்ணங்களை அதன் நோக்கத்துடன் தொடர்பு படுத்தி எண்ணப்பழக வேண்டும். தெளிவான நோக்கம் இல்லாமல் வாழ்பவர்கள் கவலை, பிரச்சினை, சுயபரிதாபம் போன்ற நிலைக்கு தள்ளப்படு கிறார்கள். நோக்கமில்லாமல் எண்ணுவதையும், பலவீனங்களையே எண்ணிக் கொண்டிருப் பதையும்   நிறுத்தப் பழகவேண்டும். எண்ணங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டும்.

பலசமயங்களில் நமக்குள்ளே நாம் பேசிக்கொள்கிறோம், விவாதிக்கிறோம், வழிகாண்கிறோம். யாருக்கும் பாதிப் பிருக்கக்கூடாது நியாயமாய் இருக்கவேண்டும் என்கிற நோக்கில் முடிவெடுத்தால் வெளியே  நியாயமாய் நடப்போம். தனக்குள்ளே பேசிக்கொள்ளும் போதே சுயநலத்தை முன்வைத்து முடிவெடுத்தால்  தவறாக நடந்து பிரச்சினைக்கு காரண மாவோம்.

நல்லதை விரும்புபவர் புகைபிடிப்பதில்லை, மது-போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை. உணவு, உடற்பயிற்சி, கடமை, நியாயம், கருணை, மரியாதை என்கிற மனோபாவம் அவரிடம் இருக்கும்.

ஒரு பிரச்சினையான சூழ் நிலையில் அனைவருக்கும் பயனான ஒரு முடிவை தேடுவதே நேர்மறை எண்ணம். கெட்டதை தவிர்த்து நல்வழியை காண்பது நேர்மறை எண்ணம்.

எதிர் மறை எண்ணங்கள் சில

ஒரு சூழ்நிலையிலுள்ள தவறுகளை மட்டுமே மிகைப்படுத்தி நல்லவற்றை கவனிக்காமல் விடுவது.

தனக்கு ஒரு நல்லது கிடைக்கும் போது அதனால் வரும் பாராட்டுக்களையும் பாராட்டுபவர்களையும் நினைத்துப்பார்க்காமல், எல்லாவற்றிற்கும் தனது திட்டம் தான் காரணம் என்ற நினைப்பில் இருப்பது.

தவறாக ஒன்று நடந்துவிட்டால் தன்மீது நொந்துகொள்வது.

தொடர்ந்து தவறுகளைமட்டுமே எதிர்பார்ப்பது. காலையில் ஒன்று தவறாகிவிட்டால் அன்று முழுவதும் தவறு தான் நடக்கும் என்கிற முடிவுடன் இருப்பது.

நல்லது அல்லது கெட்டதை ( Perfection or Failure ) மட்டுமே பார்ப்பது. மத்திய வழியை மறந்து விடுவது. இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களுக்கு சில உதாரணங்களாகும்.

தான் மாறவேண்டிய சில குணங்களை உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள திட்டமிடுவது நல்லது.

தன்னுடைய எண்ணங்கள் நேர்மறையா, எதிர்மறையா என கவனித்து அதனை சரிப்படுத்துவது நல்லது ,

தனது முடிவின் பின்விழைவுகளைப பற்றி யோசிக்காமல் ஆசையாலும், கோபத்தாலும்  உணர்ச்சி வயப்படுகிறோம் என்பதை உணருவது.

எந்த சூழலிலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருப்பது நல்லது  .

உடற்பயிற்சி, சரியான உணவு, மன அழுத்தத்தை மாற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது .

கவலைப் படுவதால் எதுவும் நடக்காது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து புதிய முயற்சியில் இறங்குவது நல்லது

நமது மகிழ்ச்சியிலும் வாழ்க்கையிலும் அக்கறையுள்ள அம்மா, மனைவி/கணவன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் நம்மீது குற்றம் காணும் போது அதை அலட்சியப் படுத்தாமல் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும்..

சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக வழிகாட்டி அதை கவனித்து கேட்டு தெரிந்துகொள்வது நல்லது .

தவறான எண்ணம் மனதில் ஏற்படும் போது இது தவறான எண்ணம் என உணர்ந்து அதற்கேற்ற சரியான நல்லெண்ணங்களை எண்ணுவது நல்லது .

பயிற்சிதான் தவறான எண்ணங்களிலிருந்து நல்லெண்ணங்களுக்கு மாற்றும். சுய விமர்சனங்களை குறைத்து விட்டு சுய ஏற்பினை அதிகப்படுத்தவேண்டும். கெட்டதை நினைத்து விட்டு நல்லதை செய்யமுடியாது. நல்ல, வலிமையான, வெற்றியானநினைப்புகள் ஆழ்மனதிற்குள் புகவேண்டும். ஏழையாக இருந்தாலும் ராஜாவாக ஆவேன் என்று கற்பனை செய்ய வேண்டும்.  

ஆழ்மனத்திலிருக்கும் சரியான எண்ணங்கள்  அதிசயிக்கும் வகையில் சக்தியையும்,வலிமையையும்,தைரியத்தையும்,தீர்மானத்தையும்  தருகிறது.
இன்று உணர்ச்சியுடன் நாம் எண்ணும்  ஒரு எண்ணம் சீக்கிரத்திலோ, தாமதமாகவோ  ஒருநாள் செயலுக்கு வருகிறது. நம் செயலுக்கேற்ப நம் வாழ்க்கை நடக்கிறது. நமது வாழ்கையை நமது எண்ணங்கள் காக்கிறது.

எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் வாழ்கையை ஒழுங்கு படுத்தலாம். அதற்கு வெற்றி-தோல்விகளைப்பற்றி ஆராய்ந்த தெளிவால் நெருக்கடிகளை கையாள  வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிகபெரிய சக்தி களில் ஒன்று நினைப்பு. என்ஜின் முன்னால் போவதும் பின்னால் போவதும் ஒரே சக்தியால் தான். அதேபோல் சரிக்கும்-தவறுக்கும் காரணம் எண்ண சக்திதான். உணவில்லாமல் பட்டினி கிடப்பவன் பயத்தால் செத்து விடுகிறான்.நோய் குணமாக வேண்டி பட்டினிவிரதம் என்றிருப்பவன் நோய் குணமடைந்து ஆரோக்கியம் பெறுகிறான். நம்பிக்கை எண்ணம் உடலுக்கு வலிமையைத் தருகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது.

சரியான உணவுகள், உடற்பயிற்சிகள் , நல்லவனாக, நன்மையாக இருப்பது போன்ற எண்ணங்களை    பெரும்பான்மையாக எண்ணும் போது அவை ஆழ்மனதுள்  சென்று உடனடியாகவோ தாமதமாகவோ நம்மை விருப்பத் துடன் செயல்பட வைக்கிறது. மனதை  நம்முடன் ஒத்துழைக்க வைக்க இதுவே வழி. நல்ல உடல் நலத்துடன் வாழ மனத்திலிருக்கும் நினைப்புகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருக்காமல் நல்ல எண்ணங்கள்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                           ------------------------------------------------------










































No comments:

Post a Comment