Friday 2 October 2015

காற்றும் உடல்நலமும்

                                              காற்றும்   உடல்நலமும்

உயிர்கள் வாழ பிராணவாயு அவசியம். உயிர்கள் காற்றிலிருந்து பிராண வாயுவை எடுத்துக்கொள்கிறது. மூச்சு விடுதலில் இரண்டு வகை. ஒன்று  மேல்மூச்சு. இரண்டாவது ஆழமான மூச்சு.

பொதுவாக நாம் அனைவரும் மேல்மூச்சு விடுபவர்களாக இருக்கிறோம். ஆழமான மூச்சு விடுபவர்களாக இல்லை.

மேல் மூச்சு விடுவதால் நுரையீரலின் முழுத் திறனையும் நாம் பயன் படுத்திக்கொள்வதில்லை.

நாம் ஆழமான மூச்சுவிடும் போது நுரையீரலின் கீழ் உள்ள டயபரமானது அதிக பட்சமாய் விரிவடைகிறது. அப்போது  வயிறானது ஒரு பலூனைப் போன்று உள்ளே போவதும் வெளியே  வருவதுமாக இருக்கிறது.  இதனால் நுரையீரலின்    முழுத்திறனையும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நமது மன நிலை சுவாசத்தை பாதிக்கிறது. கோபம், பரிதவிப்பு, கவலை போன்ற மனநிலைமைகளில் நாம் இருக்கும் போது நமது சுவாசமானது மிகவும் குறைந்த பட்சமாகி விடுகிறது. உடலில் பிராணவாயு குறைவு ஏற்பட்டு உடல் சோர்வு, பசியின்மை, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளே இழுத்து  வெளியே விடும்போது நமது இதயத் துடிப்பு (Heart Beat), நாடியின் அளவு (Pulse Rate ) இரத்த ஓட்டம் முதலியன ஒரே சீராக  இயங்கு கின்றன. அப்போது உடல் ஆசுவாசம் பெறுகிறது. அதனால் மனமும் ஆசுவாசம் அடைகிறது. தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதால் நாடித்துடிப்பு  சீராகி மனம் ஆசுவாசம் அடைந்து, உயர் இரத்த அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவையும், சுவாசிக்கும் பிராணவாயுவையும் சேர்த்து செல்கள் உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றிக்கொள்கின்றன. உடலுக்கு பிராணவாயு குறைவு ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அல்லது உடலிலுள்ள பலவீனமான பாகங்களில் வலி ஏற்படுவதை  தவிர்க்க முடியாது.

நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் அதன் அளவிற்கேற்ப சக்தி பயன் படுத்தப் படுகிறது.மேல் மூச்சைவிட ஆழமான மூச்சுவிட அதற்கேற்ப சக்தி அதிகம் தேவைப்படுகிறது.ஆழமான மூச்சு அதிக கலோரியை பயன்படுத்து கிறது. அதனால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கப்படுகிறது.

மூச்சுப்பயிற்சி மனக்கொந்தளிப்பையும், மன அழுத்தத்தையும் குறைத்து மனதை சமநிலையில் வைக்கிறது.

காற்றில் 21% பிராணவாயும்,78% நைட்ரஜன் வாயும்,மீதி ஈரப்பதம் போன்ற பிற பொருட்களும் உள்ளன. காற்றிலிருந்து பிராணவாயுவை மட்டும் பிரித்து இரத்தத்துடன் சேர்க்கும் வேலையை நுரையீரல் செய்கிறது. இரத்தத்திலுள்ள கரிமல வாயு போன்ற அசுத்தங்களை பிரித்து வெளியேற்றும் வேலையையும் நுரையீரல் செய்கிறது.

வாகனப்புகையாலும், தொழிற்சாலை புகையாலும் காற்று மாசு படுகிறது. அந்த மாதிரி காற்றையும் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில்  நாம் இருக்கிறோம்.  மாசடைந்த காற்றினால்  தலைவலி, சுவாசக்கோளாறு மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன.

காற்றிலுள்ள தூசு, புகை, மணம், குளிர்ச்சி போன்றவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சுவாசப்பிரசசினை  யை தருகிறது.

கைகளை கழுகு வதும், மருத்துவம் கூறும் துணியினை மூக்கில் கட்டிக்கொள்வதும் பயன்தரும்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்வது காலப்போக்கில்  பழக்கமாகிவிடும்.மூச்சுப் பயிற்சி ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                 ---------------------------------------------

No comments:

Post a Comment