Wednesday 5 August 2015

ஆணவம்-கர்மா-மாயை

                                        ஆணவம்-கர்மா-மாயை 


இந்த பிரபஞ்சமானது பரம்பொருள், மாற்றங்கள், உயிர்கள்  போன்றவற்றால் ஆனது.

பரம்பொருள் என்பது அறிவு மட்டுமே உடையது.
மாற்றங்கள் என்பது அறியாமை மட்டுமே உடையது.
உயிர்கள் என்பது அறிவும், அறியாமையும் உடையது.

பரம் பொருள் என்பது இறைவன். மாற்றங்கள் என்பது நியதி. உயிர் என்பது இறைவனும் நியதியும் கலந்த உணர்ச்சி.

உயிர்கள் பரம்பொருளை அடையவே விரும்புகின்றன. ஆனால்,
உயிர்கள் பரம்பொருளை அடையமுடியாமல் மாற்றங்களில் ஆசைப்பட்டு வாழ்ந்து மடிகின்றன. வெளியுலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் ஆணவம், கர்மா, மாயை என்கிற தடை களில் சிக்கி வாழ்ந்து மடிகிறான். உள் உலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் பரம்பொருளைக்கண்டு பேரானந்த வாழ்க்கை வாழ்வதாக வாழ்ந்து மடிகிறான். விளையாட்டு வீரர்கள் சொற்பம். பார்வையாளர்களோ பல லட்சம் என்பது போல், உள்  உலக சிந்தனையில் ஈடுபட்ட  சித்தர்கள் சொற்பம். வெளி உலக சிந்தனையில் இருந்து சித்தர்களை பாராட்டி, விமர்சனம் செய்பவர்கள் பல லட்சம்.

பரம்பொருளைக்காண தடையாய்  இருப்பது,    ஆணவம், கர்மா, மாயை.
ஆன்மாவானது உடலெடுத்ததும் ஆணவம், கர்மா,  மாயை இம்மூன்றும் அதை சூழ்ந்து கொள்கிறது.
 
ஆணவம்

நான் ஆன்மா அல்ல, உடல் என்பது ஆணவம். உடல் சார்ந்த  தேக பலம், பண பலம், ஆட்பலம், அதிகார பலம், திறமையின் பலம் போன்ற தனது எல்லா உடைமை களைப்பற்றியும் நினைத்துக்கொண்டு பிறரை அணுகுவதும், எதிர்பார்ப்பதும் ஆணவமாகும். தன்னை சுற்றி இருக்கும் இயற்கை சூழலுக்கும், ஜீவராசிகளுக்கும் எந்த வித இடையூறும் கொடுக்காமல் வாழ்வதே ஆணவமற்ற வாழ்க்கை.  நான், எனது, என்னுடைய என்று வரும்போது உணர்ச்சி வயப்பட்டு விடுகிறோம். பாசம்-பகைக்கு ஆளாகி விடுகிறோம். 

கர்மா

வினை என்பதன் மற்றொரு பெயர் கர்மா. ஆணவத்தால் ஏற்படுவது கர்மா. பரம்பொருளையும், ஆன்மாவையும் மறக்கவைத்து உடலால் அனுபவிக்கும் இன்பமே முக்கிய மானது என்று நடப்பதால் அதனால் கர்மா ஏற்படும் படியாகி விடுகிறது.  எண்ணம்.சொல்.செயல் ஆகிய மூன்றாலும் உயிர்களுக்கு நிகழ்கின்ற வினைகளே இன்ப, துன்பங்களுக்கும்  காரணமாகிறது. இன்ப-துன்பங்களை அனுபவிக்கும் காலத்தில் புது வினைகள் ஏற்படுகின்றன. காரணம்-காரியம்-பின்விளைவு  என்னும் சுழற்சியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்றோ, நாளையோ அதற்குரிய பலன் தேடிவரும். அல்லது அதற்குரிய விலையை கொடுத்தே ஆகவேண்டும். மனிதன் விருப்பு வெறுப்பினால் செயல்படக்கூடியவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருக்கிறது. பின்விளைவும் இருக்கிறது. ஆணவத்தின்  விளைவே கர்மா. ஆசை, பொறாமை, நியாயம், கடமை போன்ற செயல்களுக்கேற்ற பின்விளைவே கர்மா. விருப்பம் போல் நடக்கலாம் அது அடுத்தவரை பாதிக்ககூடாது. வெறுப்பைக்காட்டிக் கொள்ளலாம், அதில் நியாயம் இருக்கவேண்டும். தவறை உணர்ந்து குற்றஉணர்வு ஏற்படும்போது வருத்தம், பரிகாரம், மன்னிப்பு போன்ற வழிகள் தெரியவரும். மனித சட்டமாகட்டும், இயற்கையின் சட்டமாகட்டும் தெரியாது என்று மீறுவதால் மன்னிப்பு கிடைப்பதில்லை. தவறை ஒப்புக்கொண்டு வருந்துவதால் மன்னிப்புக் கிடைக்கலாம். 

மாயை

இன்பம் முக்கியமானது, நிலையானது என்கிற எண்ணமே மாயை.  ஆசை, உடைமைகள், உயர்வு, தாழ்வு, உணர்ச்சிகள், சூழ்நிலைகள், இளமை, வாழ்க்கை என எதுவுமே நிலையானது அல்ல. எல்லாம் நேரம் வந்தவுடன் சொல்லாமல், கொள்ளாமல் மாறிவிடும். ஆனால், இவைகளை உயிர்கள் நிலையானது, உண்மையானது என்று நம்பி வாழ்கின்றன. நிலையில்லாததை நிலையானது என்று நினைப்பது மாயை. இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது மாயை. உள்ளதை மறைப்பது மாயை. இல்லாததை தோற்றுவிப்பது மாயை. இதனால், மனத்தின் ஆசைக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கு எல்லையில்லை.

பாம்பு என்று நினைக்கிறவரை வரை பயம் ( நிஜம்). கயறு என்று தெரிந்ததும் அது பொய். ஞானம் என்பது உள்ளதை உள்ளபடி அறிவது. ஞானிகள் வாழ்க்கையை எல்லோராலும் வாழமுடியாது. ஞானிகளின் உபதேசங்கள் நம்மை எச்சரிக்கை செய்யும். நமக்கு வழிகாட்டும்.

பயன் கருதாமல் வினை செய்யும் போது பழைய மற்றும் புதிய வினைகள் அனைத்தும் அழிந்து போகின்றன என்று திருமூலர் சுவாமிகள் கூறுகிறார்.

ஆணவம்  என்பதை ஆங்கிலத்தில் EGO   எனலாம். அதை நானே மேலானவன் (அகந்தை) என்று அர்த்தம் கொள்ளலாம். ஆணவ  எண்ணம் மனதிலிருந்து பல பல வார்த்தைகளாக வெளிப்பட்டு மனிதர்களுக்குள் பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மிகச்சிறு பிரச்சினையை ஆணவம் குடும்பத்தை இரண்டாக்கி விடுகிறது.

கர்மா என்பது செயல். செயல்களில் பலவகையுண்டு. அதில் ஆதிக்கம் அல்லது DOMINATION என்று  ஒரு செயல் பிறரை துன்புறுத்தும் செயலாகும். பிற உயிர்களின் உரிமையை மதிக்காமல் அவற்றை ஆதிக்கம், பலவந்தம் என்னும் செயலால் நம் விருப்பத்தை திணிக்கும் போது அங்கெ பாவம் நிகழ்கிறது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், அதிகாரி-உதவியாளர், வலியவர்- எளியவர் என்னும் உறவுகளுள் நியாயமில்லாத பிரச்சினைகள் ஆதிக்க மனோபாவத்தால் ஏற்படுவதை காண்கிறோம்.

மாயை என்பது கவர்ச்சி, உந்துதல், ஈர்ப்பு, சுகம், சொகுசு, போதை,திருப்திதராத போன்ற வற்றைத்தரும் ஆசை DESIRE, LUST எனலாம்  இந்த உலகிலுள்ள அனைத்தும் பரிணாமம் என்னும் செயலால் மற்றம் அடையக்கூடியது. ஆனால் மனிதமனம் அவைகளை உண்மையென்று நம்பி சிக்கி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறது.

ஆணவம், கர்மா, மாயை என்பவற்றை, நானே மேலானவன், ஆதிக்கம், ஆசை போன்ற எண்ணங்கள் என நினைவில் கொள்ளலாம்.

நானேமேலானவன்  எண்ணம் நீக்கும்   பரஸ்பரம் மரியாதை   பழகு.
ஆசைகளை  குறைக்கும்      விரதங்கள்     பழகு.
எண்ணுவதை  நிறுத்தும்    தியானம்    பழகு.
சுயநலத்தை  அகற்றும்   சமஉரிமை   பழகு.
பொறாமையை  நீக்கும்   பிரார்த்தனை   பழகு.
லாபத்திற்காக ஏமாற்றாத   நேர்மை   பழகு.
இயற்கையை  விரும்பும்   எளிமை   பழகு.
வழிபாட்டிற்கும்  மேலான   கடமை   பழகு.
பாதித்தவனை  மதிக்கும்     நியாயம்    பழகு.
தன்  குற்றத்தை  உணரும்  சுயவிசாரணை   பழகு.

                       ---------------------------------------------



No comments:

Post a Comment