Sunday 2 August 2015

உணவும் உடல்நலமும்

                                          உணவும் உடல்நலமும்

சத்துள்ள உணவுகளை மாற்றி, மாற்றி சரியானவிகிதத்தில் கலந்து சரியான அளவுக்குள் உண்பதை கட்டாயமாக்கிக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி  உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என எல்லா சத்துக்களும் கலந்திருக்க வேண்டும்.

இளமையில் துடிப்பாகவும், குடும்பத்தகராறு, நிதிப்பிரச்சினை, தொழில்ப்பிரச்சினை, போன்ற வைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்கவும், முதுமையில் வலிமையாக இருக்கவும் உதவுவது அவரவர் உணவுப்பழக்கங்களே முதல் காரணமாகும்.

நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நமது ஹார்மோன்கள் செயல் படுகிறது.கொழுப்பை உடலில் சேர்த்து வைக்கிறோமா அல்லது எரிக்கிறோமா என்பதை அந்த ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.

உண்ணும் உணவு ஜீரணமாகி, உடலுள் சுரக்கும் பல்வேறு திரவங்களுடன் சேர்ந்து உடைந்து, துகள்களாக சிதைந்து, திசுக்களில் சக்தியாக மாறுகிறது. என்சைம்கள் (Enzyme) இந்த இரசாயன மாற்றங்களை தூண்டும் கிரியா ஊக்கியாக (Catalyst) செயல்படுகிறது. நமது ஆரோக்கியத்திற்கு கார்பன், ஹைட்ரஜன் என 50 மூலகங்கள் (Elements)  தேவைப்படுகிறது.  இவை அனைத்தும் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு போன்ற சத்துக்களிலிருந்து வளர்சிதை மாற்றங்கள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

எந்த உணவுகள் நன்மை செய்யும், எந்த உணவுகளை உண்ணக்கூடாது என்பதை கற்றுக்கொள்வது நல்லது.

உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரோட்டீன் அதற்கு குறைவாகவும், கொழுப்பு அதைவிட குறைவாகவும், தினசரி உணவில் இருக்கவேண்டும். இவை 45 : 35 : 20 என்கிற சதவிகிதத்தில் இருக்கும் போது அதை சமசீர் உணவு என்கிறார்கள்.

சமசீர் உணவு உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. உடலை மெல்லியதாக வைத்து ஆரோக்கியமாக்குகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பு உடலில் சேருவதில்லை. உடல் தளர்ச்சி குறைகிறது. பசியை அளவோடு வைக்கிறது.

உண்ணும் உணவுகளில் அனைத்தையும் உடலானது பயன் படுத்திக்கொள்ளவோ, தேவை இல்லாததை, அதிகமானதை வெளியேற்றவோ செய்யும்படி கண்காணித்துக் கொள்ளவேண்டும். உணவுகளிலுள்ள ஏதாவது பாகம் இரத்தத்திலோ, திசுக்களிலோ தேவைக்கு அதிகமாக சேருமானால் அதுவே நோயாகி விடுகிறது. இதனை மூன்று வழிகளில் செயல் படுத்த முடியும். ஒன்று, ஒழுங்கான மருத்துவ சோதனை. இரண்டு, ஒழுங்கான உடற்பயிற்சி. மூன்று, ஒழுங்கான உணவுக்கட்டுப்பாடு. இதில் ஏதாவது ஒன்றில் அலட்சியம் ஏற்படுமானால் கூட நோய் தவிர்க்க முடியாத தாகிவிடும்.

 உப்பு, இனிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் உணவில் அதிக மாகவும், கெடுதல் செய்யும் வகைகளாகவும் இருக்கிறது. உணவகங்களில் உண்ணும் போதும், குளிர்பானங்கள் மூலமும் நமக்கு தெரியாமலே, இவைகளை தேவைக்கு அதிகமாக உண்கிறோம்.

தற்போதைய உணவுப்பொருள் சந்தையில் ஆர்கானிக் உணவுப்பொருள் இன்னார்கானிக் உணவுப்பொருள் என இரண்டு வகைகளில் தாவர உணவுப்பொருட்களும், மாமிச உணவுப்பொருட்களும் அடையாளம் கூறி விற்கப்படுகின்றன.

ஆர்கானிக் உணவுப்பொருள் :-  இவ்வகை உணவுப்பொருட்களை விளைவிக்க விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே நிலத்திற்கும், பயிர்களுக்கும் உபயோகிக்கிறார்கள். பயிர்களை தாக்கும் புழுக்களை அழிக்க அவைகளை தின்னும் பூச்சி களையும், பறவைகளையும் வளர்க்கிறார்கள். நோய்களை தடுக்க இயற்கையான மருந்துகளை உபயோகிக்கிறார்கள். களைகள் வராமலிருக்க பயிர் சுழற்சிமுறைகளை கையாளு கிறார்கள்.  எந்த வகையிலும் பயிர்களுக்கு இரசாயனங்களை உபயோகிப்பதில்லை. மனிதர்கள் உண்ணும் உயிரினங்களை வளர்க்க ஆர்கானிக் பயிர் உணவுகளையே கொடுத்து வளர்த்து சந்தையில் விற்கிறார்கள்.

இன்னார்கானிக் உணவுப்பொருள் :- இவ்வகை உணவுப்பொருட்களை விளைவிக்க விவசாயிகள் ரசாயன உரங்களையும், சின்தட்டிக் கலவைகளை பூச்சி கொல்லியாக மற்றும் நோய்க்கெதிராக பயன் படுத்துகிறார்கள். களைகள் வளராமலிருக்க சின்தட்டிக் ஹெர்பிசைட் உபயோகிக்கிறார்கள். தாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு ஆன்டிபயாடிக் மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஹார்மோன்களை கொடுத்து
வளர்க்கிறார்கள்.

மனிதனின் பலவிதமான நோய்களுக்கு இன்னார்கானிக் உணவுப்பொருட்களும் காரணம் என இப்போது அனைத்து தரப்பினரும் கூறி வருகிறார்கள். ஆர்கானிக் உணவுப்பொருட்களே ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள்.

ஆரோக்கியம் இருக்கும்போதே உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல்நலத்தையும், இளமையையும் தக்கவைத்துக் கொள்ள பொதுவாக யாரும்  விரும்புவதில்லை. கண்கெட்ட பிறகே தினமும் சூரியனை பார்க்க ஆசைபடுபவர்களாக இருக்கிறோம்.

தினசரி நாம் உண்ணும் உணவில் 45 சதம் கார்போஹைட் ரேட் டும் , 35 சதம் புரோட்டீனும், 20 சதம் கொழுப்பும் இருக்கவேண்டும். ஆனால் தமிழ் நாட்டு உணவில் 70 சதம் கார்போஹைட்ரேட்டும் எஞ்சிய 30 சதம் புரோட்டீனும், கொழுப்பும் இருக்கிறது.

அதிக கார்போஹைட்ரேட் உணவுப் பழக்கத்தால் பலவிதமான நோய்கள் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. அதற்கென சாப்பிடும் மாத்திரை, மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் களால் மேலும் ஆரோக்கியம் குறைகிறது. மண் வளக் குறை பாட்டாலும், உணவுப்பொருட்களை சுத்திகரிப்பதாலும், அதிகம் குழைய வேக வைப்பதாலும் சத்துக்கள் குறைந்து போகின்றன.

விவசாயிகள் நேரடியாக விற்கும் உள்ளூர் தெருவோர கடைக் காய் கறிகளே சிறந்தது. வெளியூர் காய்கறிகள்  அதிக நாள் பாதுகாக்கப் படுவதால் அவை இயற்கை தன்மையை இழந்திருக்க கூடும்.

முழுத்தானியம், காய், கனி,  கீரை, மூலிகைகள், நட்ஸ், சீட்ஸ் போன்றவை களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.

இயற்கை உணவுகளை மனிதன் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கும் போது பல சத்துக்கள் பிரிந்து போய் விடுகின்றன. தவிடு நீக்கிய வெள்ளை அரிசி, மைதா மற்றும் (Refined) உப்பு, சீனி, எண்ணெய்  போன்ற கெடுதல் உணவுகள், காய், கனிகள் மீது பூச்சிக் கொல்லி இரசாயனம், காய், கனிகள் கெட்டுப் போகாமலிருக்க கதிர்வீச்சு, நீண்ட நாள் கெடா மலிருக்க இரசாயனம் சேர்த்த தயார் உணவுகள் மற்றும் பானங்கள் தாராளமாய் கிடைக்கின்றன. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
    
நாம் எதை உண்கிறோம். உடலுள் அது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். ருசி என்றோ,  இருக்கிறது என்பதற்காகவோ, நிர்பந்த படுத்தினார்கள் என்றோ, வீணாகி விடும் என்றோ   கேடு விளைவிக்கும் உணவுகளை உண்ணக்கூடாது. 

கடந்த நூறு ஆண்டுகளில் உலகம் இயந்திர மயமாகி உணவு, உடை, உறைவிடம் என அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டது. மனிதன் இயற்கை உணவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட உணவு, பாதுகாக்கப்பட்ட உணவு, தயார் நிலை உணவு, துரித உணவு, என பல்வேறு உணவுகளை பயன்படுத்துகிறான். இயற்கை உணவை மாற்றம் செய்யாமல் உண்டு வாழ்ந்த மனிதனின் மூளை வளர்ச்சி பெறாமல் இருந்தது எனவும், நெருப்பை கையாளத்தெரிந்த மனிதன் வேகவைத்த உணவுகளை உண்ண ஆரம்பித்ததிலிருந்து மூளை வளர்ச்சி யடைந்து, இப்போது கலோரி அதிகமுள்ள உணவுகளால் மூளை வளர்ச்சி இரண்டு மடங்காகி வருவதாக கூறுகிறார்கள். மனிதனின் அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை ஆனால், ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு 50 சதம் இயற்கை உணவும், 50 சதம் லேசாக வேக வைத்த உணவும் நல்லது என்கிறார்கள். பொரித்த, வறுத்த, கருகிய உணவுகள் ஆரோக்கியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

உணவை வீட்டில் செய்து உண்பது நல்லது. அதுவே, உடல் எடை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சுகர் மற்றும் பொது நலத்துக்கு நல்லது. உணவக உணவுகள் அதிக கலோரி உடையது. வீட்டில் மூன்று வேளை உணவிலுள்ள கலோரி, ஓட்டலில் ஒரு வேளை  உணவில் இருக்கிறது. ஓட்டல் உணவுகள் சுவையாக இருப்பதினால் கலோரி பற்றி கவலைப்படாமல் அதிகம் சாப்பிட்டு விடுகிறோம்.

ஒவ்வொருவர் உடலிலும் ஏதாவது ஒரு உறுப்பு பலவீனமாக இருக்கும். தவறான உணவுகள் அந்த உறுப்பை மேலும் பலவீனப்படுத்தி நோயாளி ஆக்கி விடும்.

மது கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. உடலில் கால்சியத்தை குறைக்கிறது. மதுவில் சத்துக்கள் எதுவும் இல்லை, கலோரி அதிக மாக இருக்கிறது.

சுத்திகரிக்கப் பட்ட உணவுகள் கணையத்தை பலவீனப்படுத்தி இன்சுலின் பிரச்சினையை தருகிறது. இளைஞர் களுக்கு உடலில் கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கிறது.

எண்ணையில் வறுத்த உணவுகள் இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி இரத்தக்குழாய் களில் துகள்களாக வலம் வந்து இதயம், மூளை, பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை பிரச்சினையாக்கு கிறது.

உப்பு உணவுக்கு ருசியை தருகிறது.  அதே உப்பு உணவில் அதிக மாகும் பொழுது இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்து கிறது. இதனால் இதயம், சிறுநீரகம், மூளை பலவீன மடை கிறது.

இருபது வயது களில் உடல் முழுவளர்ச்சியை அடைந்து விடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு பத்து வயது கூடும் போதும் உணவின் அளவையும் குறைக்கவேண்டும்.  உணவில் கட்டுப்பாடாய் இருக்க வில்லையானால் நாற்பது வயதுகளில் மாத்திரை,  மருந்து என்பது கட்டாயமாகிவிடுகிறது.  

உடல் எடையை அதிகமாக்கும் உணவுகள், உயர் இரத்த அழுத்தத்தை தரும் உணவுகள், சுகர் நோயை தரும் உணவுகள், இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் உணவுகள், சிறுநீரகம், கல்லீரல்  மற்றும் இதயத்தை பலவீனப்படுத்தும் உணவுகள் போன்றவற்றை இளம் வயதிலேயே தெரிந்து  உணவுப்பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கிய  குறைவிற்கு உடற்பயிற்சி இன்மையும், பிறவிக்  குறை பாடுகளும், பரம்பரையும், சுற்றுப்புற சூழலும், அவரவர் விதியும் பிற காரணங்களாகும்.

எல்லா உணவுகளையும் மாற்றி, மாற்றி உண்பது நல்லது. சரியான உணவு எது, தவறான உணவு எது என தெரிந்து உண்பது நல்லது. பசுமையாக, புதியதாக செய்து உண்பது நல்லது. உள்ளூர் காய், கனி களை உண்பது நல்லது.உடல் எடை கூடாதவாறு அளவோடு உண்பது நல்லது.

                           -------------------------------------------------


No comments:

Post a Comment