Wednesday, 22 April 2015

தன்னை அறிதல் - 1

                                        தன்னை அறிதல் -1

"எல்லாம் அல்லது  எல்லா உயிரினமும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது" என்பது ஒரு இயற்கையின் நியதி.

இந்த நியதி மனிதனுக்கும் பொருந்தும். இதன் அடிப்படையில் தான் ஒவ்வருவரின் வாழ்க்கையும் வித்தியாசமாய்  அமைகிறது.

பார்ப்பதற்கு ஒன்று போல் தெரிந்தாலும் மனிதர்கள் அனைவரும்   ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகின்றனர். இந்த வித்தியாசங்கள் மனிதருள் பிளவை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே அனைவரும் வேற்றுமையிலும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக ஊர் பஞ்சாயத்து,  மதங்கள், மரியாதைகள், கட்டுப்பாடுகள் ஆரம்பித்தன. பிற்காலத்தில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை, நீதிமன்றம் போன்றவைகள் ஏற்பட்டன.

வித்தியாசங்கள் பல இருந்தாலும் உயர்வோ, தாழ்வோ கொள்ளாமல் உண்மையாகவே மனதை  சமநிலையில் வைத்திருந்தால் தான் அன்போடும், அறனோடும் வாழமுடியும். சமநிலை தவறினால் தவறு,  அல்லது  தாழ்வு மனப்பான்மை  குணம் தான் மனதை ஆட்சிசெய்யும் .

தாயின் வயிற்றில் குழந்தை ஜெனித்த நாளிலிருந்து குழந்தை தாயின் ஒரு அங்கமாக அல்லது உறுப்பாகத்தான் அக்குழந்தை வளர்ச்சியடைகிறது. குழந்தை வெளிவந்து மூச்சுக்காக திணறி அழும்போது முதல் மூச்சு உள்ளே செல்கிறது. அந்த முதல் மூச்சே குழந்தையின் உயிராகிறது. சதா துடித்துக் கொண்டிருக்கும் இதயத்திற்கும் மூச்சிற்கும் ஒரு ரிதம் ஏற்படுகிறது.. இதயத்துடிப்பிற்கும் மூச்சிற்கும் நேரடி தொடர்பு வந்து விடுகிறது. இதயத்துடிப்பு நின்றால்  மூச்சு நின்றுவிடும். மூச்சு நின்றால் இதயத்துடிப்பு நின்று விடும்.

குழந்தை வளர, வளர மூளை வளர்ச்சி அடைகிறது. மூளை வளர்ச்சியுடன் சேர்ந்து 'மனம்' உருவாகிறது. மனமானது மூச்சு மற்றும் இதய துடிப்பின் ஏற்ற, இறக்கத்திற்கு காரணமாகிறது. பதட்டம், மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி போன்ற மனநிலையில், மூச்சின் வேகத்தையும், சீரற்ற இதய துடிப்பையும் உணரலாம்.

மனத்தின் சோகம், மகிழ்ச்சி, பதட்டம், ஏக்கம், அதிர்ச்சி இவைகளுக்கேற்ப மூச்சும், இதய துடிப்பும் மாறுபாடடைகிறது, அல்லது சிலசமயம் நின்று விடுகிறது.

மனம் என்பது பழக்க்கத்தாலும் .நம்பிக்கையாலும் ஆனது. இதுவரை பார்த்த, கேட்ட, அனுபவித்த அனைத்தும் அங்கு பதிவாகி இருக்கும். ஆனால் மனமானது பற்றற்றது, கட்டுப்பாடற்றது. கவனிக்கவில்லையானால் எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடியது. மனதிற்கு உண்மை-பொய், சரி-தவறு, நல்லது-கெட்டது, பற்றிய கவலை இல்லை. ஏற்கனவே உள்ள பழக்கத்தை,  நம்பிக்கையை செய்யும் ஒரு வேலைக்காரன் போன்றது.

மனம் சிறிது உருவானதும் விருப்பு-வெறுப்பு என்கிற 'நான்' உருவாகிறது. இந்த 'நான்' விருப்பு, வெறுப்புகளை அனுபவிக்க தீர்க்க மாய் இருக்கும். அதன் படி  செய்யவேண்டியதை  தீர்மானித்து அந்த செயலை  மேற்பார்வையும் செய்யக்கூடியது.. வைராக்கியமானது. விரும்புவதை தீவிரமாய் விரும்பும். வெறுப்பதை தீவிரமாய் வெறுக்கும். அகங்காரமானது.

நான் என்பதற்கு தூக்கம் தேவையில்லை. 24 மணி நேரமும் விழித்துக் கொண்டிருக்கும். மனத்தின் மூலமே செயல்படும். தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மனம் செயல்படாது. அதனால் 'நான்' னும் செயல் படமுடியாமல் ஒரு சாட்சியாகவே மனத்துள்  விழித்துக்கொண்டிருக்கும்.

நான் என்பது   உருவான பிறகு 'புத்தி' என்பது ஏற்படுகிறது. புத்தி  என்பது தன்னுள் பதிவாயிருக்கும் சரி-தவறை சொல்லிக்கொண்டிருக்கும். காரணம் -பின்விளைவு களை சொல்லி எச்சரிக்கும். புத்தி என்பது சாதுவானது.

பொதுவாக மரத்தின் வேர்கள் பூமியினுள் மறைந்து இருந்து மரத்தின் வாழ்க்கைக்கு காரணமாய் இருக்கும். வேர்களில் முக்கியமாய் ஆணிவேர், பக்கவேர், கிளைவேர் என  காலா காலத்தில் வளர்ந்து, விரிந்து, பூமியினுள் ஆழமாய் புகுந்து அதனதன் பணிகளை செய்யும். மரத் தண்டிலிருந்து ஆணிவேரும்  அதிலிருந்து பக்கவேரும், அதிலிருந்து கிளைவேரும் உருவாகும். அதேபோல் மூளையிலிருந்து மனமும், அதிலிருந்து நான்-ம், அதிலிருந்து புத்தியும் உருவாகிறது. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

மூளை, இதயம், ஐம்புலன்கள், என்பன ஸ்தூலமனது, இவை மொத்தமும் உடல் சம்பந்தப்பட்டது.. மனம், புத்தி, ஆன்மா, நான் என்பன சூக்ஷமமானது, இவை மொத்தமும் மனம்  சம்பந்தப்பட்டது. .         .

உடலானது செயல்பட மூச்சு போதும். மனம், நான், புத்தி ஏதும் தேவை யில்லை. அதைத் தான் மயக்க நிலை என்கிறோம்..

மனமானது செயல்பட உடல், மூச்சு இரண்டும் வேண்டும். மனம் செயல்பட நான், புத்தி தேவையில்லை. ஆனால் அந்த மனதால் எந்த பலனும் இல்லை. அதைத் தான் மனநோயாளி என்கிறோம்.

நான் என்பது செயல்பட 'உடல், மூச்சு, மனம்'  மூன்றும் வேண்டும். புத்தி தேவையில்லை. இதில் தான் நம்மில்  பெரும்பாலும் அடங்குகிறோம். தவறு செய்பவர்கள் அனைவரும் இந்த நிலையிலிருந்து செயல்படுகிறவர்கள்  தாம். பற்றற்று வாழமுடியாமல் ஆசைக்கும், பாசத்திற்கும் வயப்பட்டு தவறு செய்கிறோம். தவறுக்குரிய பலனாய் தோல்வி, இழப்பை சந்தித்து பாதிநாள் நிம்மதி யற்று போய்விடுவதை அனுபவிக்கிறோம். பல நேரங்களில் புத்தி சொல்வதை கேட்டு அன்பு, நியாயம், கடமை, சகிப்புத்தன்மை என  நற்குண மாகவும் நடக்கிறோம். 

புத்தி என்பது செயல்பட 'உடல், மூச்சு, மனம், நான்' இந்த நான்கும் வேண்டும், புத்தியை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து  கட்டியவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆசா, பாசங்களை துறந்தவர்கள், சமீபத்திய ஸ்ரீ ரமணர், சுவாமி விவேகனந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி போன்ற வர்களும் முற்காலத்தில் அகத்தியர், திருமூலர், புத்தர், சித்தர்கள் பட்டினத்தார், ஆழ்வார்கள், நாயன்மார்கள். வியாசர்  போன்ற லக்ஷகணக்கானவர் களும் மனிதர்களே. அவர்களெல்லாம் தங்களது 'புத்தி' உணர்வை மட்டும் முன்னிறுத்தி வாழ்ந்தார்கள். தன்னுள் இருந்த பிரபஞ்ச சக்தியை ( ஆன்மாவை ) தரிசித்தார்கள்.

 நாம் அவர்கள் சொன்னதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டோம். சித்தர்கள் சொன்ன இயற்கை மருந்துக்கள் அனைத்தையும் விட ஆங்கில மருந்தே சிறந்தது என்று மாறினோம். படிப்பு- பணி- பணம்- புகழ் இருந்தால் போதும் என்று இரவு பகலாய் உழைக்கிறோம். ஆரோக்கியம் போகும்வரை   ஆரோக்கியம் பற்றியோ, சுற்றுப்புற ஆரோக்கியம் பற்றியோ, எண்ணுவதே இல்லாத நிலைக்கு வந்துவிட்டோம். நம் முன்னோர்கள் படித்த குருகுல கல்வியை கைவிட்டோம். இப்போது உயர் கல்வி படித்தவனும், உயர்பதவியில்  உள்ளவனும், உயர்ந்த பணக்காரனும் பொய் சொல்லுகிறான். ஒருவரை ஒருவர் ஏமாற்று வது தான் திறமை என்றாகிவிட்டது. எதை ப்பற்றியும்  மக்களும் கவலை ப்படவில்லை. படித்தவர்களை உடைய அரசாங்கமும் கவலைப்படவில்லை.

தனி மனிதனுக்கு பொய், திருட்டு, ஆதிக்கம் இவற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டும். மனிதனின் தேவை, உரிமைகள்  மதிக்கப்பட வேண்டும். தவறு செய்தால் கடுமையான தண்டனையும், தண்டனைபற்றிய பயமும் இருக்கவேண்டும். ஏனென்றால் மனம் தண்டனைக்கு பயந்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்.

உடல், மூச்சு, மனம், (நான்) அகங்காரம், புத்தி, ஆன்மா என்கிற ஸ்தூல மற்றும் சூக்ஷம இயக்கத்தில் தான் நாம் வாழ்கிறோம். இவை பற்றிய முழு விபரங்களையும் அறிந்து, உணர்ந்து சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமையும், பொறுப்புமாகும். இவை ஆரம்ப பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து பிரிவுக்கும்  பாடமாக இருக்க வேண்டிய ஒரு பொருளாகும். ஆனால் அவைகளை எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப் பட்டது என்று ஒதுக்கி விட்டோம்.
 
குருகுல கல்வியில் நன்னடத்தை, நியாயம், நன்மதிப்பு, உடல்வலிமை இவைகள் தான் முக்கியமாக போதிக்கப்பட்டது. இன்றைய சூழலில் இம்மாதிரி கல்வியை நாமாக, நம் மனதிற்கு கொடுத்தால் மட்டுமே உண்டு. தற்போது மேலை நாட்டு நாகரீகம் நம் நாட்டு நாகரீகத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைய நம் நாட்டு மக்கள் முக்கியமாக மது, காதல், திருமணபந்தம், பரஸ்பரம் மரியாதை போன்ற வற்றில் சரியான, உறுதியான முடிவெடுக்கும் தன்மையை இழந்து வருகிறார்கள். அதனால் சிறு வயதிலேயே தோல்வி, நோய், சிக்கல், பிரச்சனை என  வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

குருகுல கல்வி  பாடத்திட்டம் உடல், மூச்சு, மனம், நான், புத்தி இவைகளை மையமாக வைத்து இருந்தது. மனிதனை நியாயம் உள்ளவனாக வாழ உருவாக்கியது. தற்போதைய கல்வி பணம் சம்பாதிப்பதை மட்டுமே மையப்படுத்தி அநீதி வளர காரணமாய் இருக்கிறது.

முற்காலத்தில் குடும்ப பெரியவகள் தன்னலம் கருதாது நியாயத்தை மட்டுமே பேசி குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு சொன்னார்கள். ஊர் பெரியவர்களும் நியாயத்தை மட்டுமே பேசி ஊர் பிரச்சினைகளுக்கு  தீர்வு சொன்னார்கள். தேசியத் தலைவர்கள் சுயநலமின்றி நாட்டுப் பிரச்சினை களுக்காக உழைத்தார்கள். மதத்தலைவர்களும் சுயநலமற்று தனக்கு தோன்றும் உண்மைகளை மட்டுமே பேசி ஆன்மீக வ்ழி காட்டினார்கள். தற்காலத்தில் அது போன்ற பெரியவர்களுக்கு தட்டுப்பாடு உண்டாயிற்று.

நம் ஊரில் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் பலர் பயிற்சி நடத்துகிறார்கள் . மக்கள் அனைவரும் அம்மாதிரி பயிற்சிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டும்.  குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப, திரும்ப அப்பயிற்சிகளில் சேர்ந்து பலன் பெறவேண்டும். அதிலுள்ள ஈடுபாட்டை பொறுத்தே மாற்றங்கள் இருக்கும்.

பிரச்சினைகள் சிறியஅளவில் இருக்கும் போதே கவுன்சிலிங் கொடுப் பவர்களை  தேடிச்சென்று பிரச்சினைகளை மறைக்காமல் சொல்லி அறிவுரை பெறவேண்டும். அதை நம்பி கடைபிடிப்பதை பொறுத்தே மாற்றங்கள் இருக்கும்.

நம்ம ஊரில் வாழ்ந்த ஞானிகளும், தற்கால ஆன்மீக வாதிகளும் நமது பிரச்சினை களுக்கு சொல்லும் தீர்வு யோகப் பயிற்சியாகும்.    யோகப் பயிற்சியை  எட்டு பாடங்களாக பிரித்திருக்கிறார்கள். அதில் நமக்கு தேவையானதை நாம் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதிலுள்ள வைராக்கியம், ஈடுபாடு, பயிற்சி, அனுபவம் போன்றவற்றால் மட்டுமே மாற்றம் ஏற்படும்
.
1.இயமம் :- அறம் பற்றியது
2.நியமம்:-அறத்தை பயிற்சி செய்வது.
3.ஆசனம்:-பயிற்சியின் மூலம் உடலை ப்பேணுவது
4.பிராணயாமம் :-மூச்சுப்பயிற்சி
5.பிரத்யாகரம் :-தன்னை அறிதல்
6.தாரணை:-ஒரேசிந்தனையில் .இருப்பது
7.தியானம் :-எண்ணுவதை நிறுத்தி பேரமைதியில் இருப்பது.
8.சமாதி:-உடலையும்,மனதையும் மறந்து  சிந்தனைகளற்ற  பேரானந்த                     உணர்வில் இருப்பது.

இவ்விதக்கல்வியும்  வாழ்க்கையும்  இயற்கையை மாசுபடுத்தாது. பிற உயிர்களை அழிக்காது. மருத்துவம் எளிமையானதாக இருக்கும்.பிற உயிரினங்களைப்போல் பிறப்பு, வாழ்க்கை, முதுமை, மரணம் மிகச்சாதாரணமாக போய்க்கொண்டிருக்கும். இயற்கை பாதிக்காதவாறு வளர்ச்சியும், முனேற்றமும் இருந்திருக்கும்.

பாலில் தண்ணீர் எளிதில்  கலந்துவிடுவது போல், மனதில் தவறான உணர்வுகள் எளிதில் கலந்துவிடும். சமய, சந்தர்ப்பம்  கிடைக்கும் போது தனக்கு தெரியாமலே  அந்த தவறான உணர்வுகள் செயலாகி இருக்கும். ஆணவம், சுயநலம், பொறாமை, சாமர்த்திய பேச்சு  ஆகிய இந்த பெரும்பாலான   நான்கு தவறான உணர்வுகளும் மிக எளிதாக மனதுள் கலந்துவிடும். உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பிரிவுகள் ஏற்பட தவறான உணர்வுகளின் செயல்பாடே முக்கிய காரண மாக இருக்கிறது.

ஆணவம் :- நானே மேலானவன், நான் நினைப்பதே நடக்கவேண்டும்.(நியாயத்துக்கு இடம் கிடையாது)

சுயநலம் :- எனது காரியம், ஆசை, சுகம், சொகுசு, லாபம், புகழ், தான் முக்கியம். (நியாயத்துக்கு இடம் கிடையாது)

பொறாமை:-அடுத்தவன் என்னை மிஞ்சிவிடக்கூடாது, (நியாயத்துக்கு இடம் கிடையாது)

சாமர்த்திய பேச்சு:-முக்கிய மான சிலஉண்மைகளை மறைத்து,  தனக்கு சாதக மான சில உண்மைகளை மட்டும் பேசி வழக்காடுவது. (நியாயத்துக்கு இடம் கிடையாது)

இது மாதிரி தவறான குணங்கள் தன்னிடம் இருப்பதை உற்று கவனித்து அறிந்து கொள்வதே தன்னை அறிதல். அவைகளை தன்னிடமிருந்து களைவதே தன்னை சரிப்படுத்தல். சிலர் சிறிய வயதிலேயே தன்னை உற்று கவனித்து தன்னை சுத்தப்படுத்தி பிறருக்கு பயனாய் வாழ்ந்தார்கள். சிலர் பெரியவர் களாகியும், சிலர் முதுமையிலும் தன்னை அறிந்தார்கள். பலர் கடைசிவரை தன்னை அறியாமல் வாழ்ந்து  மறைகிறார்கள்.      


            -------------------------------------------------------------