Wednesday, 14 October 2026

அறம் - பொருள் - இன்பம் - வீடு

 அறம் - பொருள் - இன்பம் - வீடு




நாம் ஏற்றுக்கொண்டாலும்,ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மனித வாழ்க்கையானது அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நான்கினையும் மையமாக கொண்டே நடைபெறுகிறது.


மனிதர்கள் அனைவரும் இன்பமான சுகவாழ்வையே நோக்கமாக கொள்கின்றர்.


இன்பமான சுகவாழ்விற்கு பொருட்கள் வேண்டும்.


சுகவாழ்வு நிலைக்கவும், அதற்கான பொருட்களை கையாளவும் சரியான வழிகளை அதாவது, ஒருவரால் பிற ஒருவர் பாதிக்க கூடாது என்பதற்காக இயற்கையின் நியதி ஏற்படுத்தி இருக்கும் கட்டுப்பாடு தான் அறம். இயற்கையின் அறம் பாரபட்சம் பார்க்காமல் நன்மையும் செய்யும், தண்டிக்கவும் செய்யும், விதிவிலக்கும் அளிக்கும்.


அறம் என்பது நியாயம், நீதி, தர்மம் போன்ற கட்டுப்பாடுகள்.


பொருள் என்பது உடல் ஆரோக்கியம், மனித உறவுகள், செல்வம்(பணம்) போன்ற பேண வேண்டியவைகள். 


இன்பம் என்பது பொருள், பாராட்டு, நிறைவு போன்ற வற்றால் ஏற்படும் மகிழ்ச்சிகள். 


வீடுபேறு என்பது இறப்பிற்கு பிறகு பக்குவபட்ட ஆன்மாக்கள் பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவது. அதை முக்தி, இறைவன் திருவடி, அவ்வுலகம் என்றும் கூறுவர்.


மனித வாழ்க்கையில் இறைவன் அருளும், ஊழின் தாக்கமும், அறம்வழி குணமும் பலருக்கும் பல விகிதத்தில் பொருள், இன்பம், மற்றும் வீடுபேறு அடைவதற்கு பயனாகவும், தடையாகவும் இருக்கின்றன. குறள் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து, 4. அறன் வலியுறுத்தல்.38 ஊழ். அவற்றின் வலிமையை விவரிக்கின்றன. 



அறம்,பொருள்,இன்பம்,வீடு என்கிற நான்கினையும் மையமாகக் கொண்டே வேதங்கள், சாஸ்திரங்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டு நூல்கள் தோன்றின.


மனித உடலிலிருந்து உயிர் பிரிந்ததும், ஆன்மாவும் பிரிந்து விடுகிறது. அந்த ஆன்மாவின் பக்குவத்திற்கேற்ப இறைவன் செயலால் அந்த ஆன்மாவிற்கு பிறவாத்தன்மை கிடைக்கிறது, அல்லது வேறொரு உடலுள் புகுத்தப்படுகிறது. இதை மாணிக்கவாசகர் திருவாசகத்திலும்,

திருவள்ளுவர் திருக்குறளிலும் குறிப்பிடுகிறார்கள்.


திருவாசகம்.


நாயின் கடை ஆம் நாயேனை 

நயந்து நீயே ஆட்கொண்டாய்;

மாயப் பிறவி உன் வசமே 

வைத்திட்டு இருக்கும் அது அன்றி,

ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?

“காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்” கண் நுதலே!


( எனக்கென்ன அதிகாரம், இன்னொரு உடலில்(காயத்து) இடுவாய்,அல்லது உனது திருவடிக்கீழ் வைப்பாய், முக்கண் உடையவனே)


குறள் 38


வாழ்நாள் படா அமை நன்று ஆற்றின் அத்துடன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.


(மனிதன் எல்லா நேரமும், இடைவிடாது எல்லா செயலிலும் அறத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் பிறவா நிலை கிடைக்கும் ) 


திருவள்ளுவர் வாழ்க்கைக்கு இறைவன் அருள் கட்டாயம் வேண்டும் என்கிறார்.


குறள்


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


(இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்கள் மட்டுமே பிறவியாகிய பெரிய கடலைக் கடந்து சேர வேண்டிய இடத்தை அடைவார்கள்; அதனைச் சேராதவர்கள் அந்தக் கடலைக் கடக்க முடியாது.)


அறத்திற்கு உட்பட்டு பொருளையும், இன்பத்தையும் அடைய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.


குறள்


அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். 


(பொருள் சேர்க்கும் திறமைகளை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் நல்வழியில் சேர்க்கப்பட்ட பொருளானது ஒருவருக்கு அறத்தையும் தரும், இன்பத்தையும், நல்ல பொருளையும் தரும்)



 மாணிக்க வாசகர், எனக்கு எதுவும் வேண்டாம் பிறவாத்தன்மை தந்தால் பொதும் என்று இறைவனிடம் கெஞ்சுகிறார். 


"வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும், விண்ணும்; வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறை தாள் பூண்டேன்; புறம் போகேன்; இனி, புறம்போகல் ஒட்டேனே!”


உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே

கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே.


தனக்கு வேண்டியது என மாணிக்கவாசகர் உருகி கேட்பது,


"பாருரு வாய பிறப்பற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;

சீர் உரு ஆய சிவபெருமானே, செங்கமல மலர் போல்

ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, 

உன் அடியவர் தொகை நடுவே,

ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.


முழுமுதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும்

   என்தனக்கும்

வழிமுதலே நின் பழ அடி யார் 

  திரள் வான் குழுமிக்

கெழுமுதலே “அருள் தந்து இருக்க

இரங்கும் கொல்லோ என்று

அழும் அதுவே அன்றி மற்று 

என்செய்கேன்”பொன்னம் பலத்தரைசே.


உண்மையில் மனித மனம் ஒரு நிலையில் இல்லாமல், ஆணவம்,சுயநலம்,பேராசை,கோபம், பொறாமை, பயம், கவலை, மற்றும் உண்மை, நன்மை, நியாயம், பணிவு, இரக்கம்,நன்றி,உதவி என அவரவர் சூழ்நிலை, உடல்நிலை, இறையருள், ஊழ்நிலைக் கேற்ப அவரவர் மனதில் எண்ணங்களாக ஓடிக் கொண்டிருக்கும். அதுவே பேச்சிலும்,செயலிலும் வெளி வரும்.


ஆக, நல்லதும்,தவறும் செய்வது மனித குணம். அதை கூறும் குறள் 504.


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 

மிகைநாடி மிக்க கொளல்.     


நான் தவறுகள் செய்யக்கூடியவன், அவற்றை பொறுத்தருளி எனக்கு மீண்டும் பிறவாமை வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.


திருவாசகம்


வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை 

நின் பெருமையினால் பொறுப்பவனே அராப்பூண்பவனே

பொங்கு கங்கைசடைச் 

செறுப்பவனே நின்திருவருளால் 

என் பிறவியைவேர்அறுப்பவனே 

 உடை யாய்

அடியேன்உன் அடைக்கலமே.



 சமயம் கிடைக்கும் போதெல்லாம் குழுவாக சேர்ந்து திருக்குறள் மற்றும் திருவாசகம் புரிந்து படிப்பது, படிக்க வேண்டிய கட்டாயத்தை தரும். அதனால், மறந்து போன அல்லது தெரியாத உண்மைகளை நினைவு படுத்தும். மனதை மென்மை படுத்தும், ஆறுதல் அடையச்செய்யும்.


இந்த இரண்டு நூல்கள் போன்ற பிற நூல்கள் உலகில் வேறெங்கும் கிடையாது என்கிறார்கள்.


இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் , தமிழ் நாட்டில் கிருத்தவ மதத்தை பரப்ப இங்கிலாந்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்த G U போப் என்கிற பாதிரியார் இங்கிருந்த போது தமிழ் கற்று இங்குள்ள திருக்குறள், திருவாசகம் படித்தார். உருகிப்போனார் பரவசமடைந்தார். அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார் என்பது வரலாறு.


கற்றல் நன்று. கற்பித்தல் நன்று. கேட்டல் நன்று.


சிவமயம்.

Friday, 30 August 2019





உயிர்.     உலகு.        இறைவன்.

மனிதனின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. வெளி உலகை பயன்படுத்தியும், அக உலகை பயன்படுத்தாமலும் வாழ்ந்து மடிவது.
2. மனநிலை, சூழ்நிலை போன போக்கில் வாழ்வது.
3. செயலையும், பின்விளைவையும் அனுபவிப்பது.

இயற்கையின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. சக்தி, நியதி, பொருட்களால் பாரபட்சம் பாராமல் மாற்றம் அடைந்து கொண்டே இருப்பது.
2.ஒழுங்கற்ற ஒழுங்கில் இரட்டைகள் நடைபெறும் மேடையாய் இருப்பது.( நியாயம்- சுயநலம்,  அறிவு- அறியாமை, கருணை- கொடுமை).
3. சுழற்சியால் அனைத்தையும் பராமரித்துக் காப்பாற்றும் அறிவைத் தருவது( காற்று, தண்ணீர், உணவு, என்பன. )

இறைவனின் முக்கியமான மூன்று பகுதிகள்.
1 சர்வசக்திகளாலும் ஆனவன்.
2. சர்வநியதிகளாலும் ஆனவன்.
3. சர்வபெருட்களாலும் ஆனவன்.

ஆன்மாவின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. ஆன்மா  தியானத்தின் எல்கையில் இருப்பது.
2. உயிர்சக்தியுடன் ஒன்றி இருப்பது.
3. மனத்தின் மையக்கருவாக இருப்பது.

இதிலிருந்து மனிதன் அறியவேண்டிய மூன்று முக்கிய முடிவுகள்.
1. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பாதிப்படையச் செய்வதால் வரப்போகும்  பின்விளைவி லிருந்து தப்பிக்க முடியாது.
2. ஒருவருடைய உரிமையை ஒருவர் மதிக்காமல் பாதிக்கச்செய்வது ஏதோ ஒரு வகை தண்டனை வரப்போகும் குற்றமாகும்.
3. "நானே மேலானவன்" என்று செய்கிற செயல்கள் தண்டனை பெறுவதற்கான தகுதிகளை பெற்றுத் தரும்.
( இவையே கர்ம வினையாக அதாவது பின்விளைவாக பற்றித் தொடர்கிறது. )

Wednesday, 17 July 2019

இந்து மதம்

தத்துவ ஞானம் என்றால் என்ன பொருள்

தத்துவம் = எக்காலத்திலும்,  எவ்விடத்திலும், எதனாலும் அழியாமல் நிற்கும் பொருள். உண்மைப் பொருள். அது  எது? அதன் இயல்பு என்ன?
ஞானம் = உள்ளதை உள்ளபடி அறிதல்

இந்திய தத்துவம் இன்ன காலத்தில் இன்னாரால் தொடங்கப்பட்டது என்று சொல்லமுடியாத அளவிற்கு மிகப்பழைமையானது. இந்திய தத்துவ ஞானத்தில் புற உலகு முக்கியமில்லை. ஆன்மா தான் ஆராய்ச்சிப் பொருள். ஆன்மாவைத் தெளிவாக ஆராயத்தான் புற உலகு ஆராயப்பட்டது. தத்துவ ஆராய்ச்சிக்கு அடிப்படையாக மனிதனின் துன்பம் பற்றியும், துன்பத்திற்கான காரணங்கள் பற்றியும், துன்பம் போக்கும் வழிகள் பற்றியும் ஆராயப் பட்டன. இந்திய தத்துவ ஞானமும் மனித வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. இந்திய தத்துவ ஞானம் சிந்திப்பதற்கு மட்டுமல்ல முறையாக வாழ்வதற்கும் வழிகாட்டுகிறது.
இந்திய தத்துவ ஞானிகள் தங்கள் அறிவு அனுபவத்துடன் ஒத்துப் பார்த்த பிறகு தான் வேத வாக்குகளை ஒப்புக்கொண்டார்கள்.
தத்துவஞான முடிவுகள் வேதம், உபநிடதம், ஆகமம் என்னும் வடமொழி நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இவை மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல என்ற ஒரு கருத்தும் உண்டு.
இதை ஒப்புக்கொள்வோர் வைதிகர் என்றும் ஒப்புக் கொள்ளாதோர் அவைதிகர் என்றும் அழைக்கப்படலாயினர். வேதாந்தம் தொடர்பாக 12 உட்பிரிவுகள் ஏற்படலாயிற்று.
உலகாயுதம், சமணம், பௌத்தம் என 3ம் அவைதிகர் பிரிவாகவும்,
சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை என 5ம் வைதிகர் பிரிவாகவும்,
அத்துவைத வேதாந்தம் ( சங்கரர் ), இராமனுஜ வேதாந்தம், மத்துவ வேதாந்தம் என வேதத்திற்கு வெவ்வேறு விளக்கம் கொடுத்த 3 பிரிவும்,
வேதாந்தத்தைவிட ஆகமத்தையே கைகொண்ட சைவசிந்தாந்தம் 1 பிரிவாகவும்
ஆக 12 பிரிவுகள் ஏற்படலாயின.
இன்றைய இந்து மதம் சம கோட்பாடுகளை உடைய பல பிரிவுகளை உள்வாங்கி உயர்ந்து பரந்து நிற்கிறது.
.
 
இந்திய தத்துவஞான ஆராய்ச்சியில் விருப்ப முள்ளவர்கள் ஆங்கில நூல் களைத் தான் நாடிப் போகவேண்டிய நிலையில் இருக்கிறோம். தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்  தனக்கு ஏற்பட்ட இந்திய தத்துவ ஞான தாகத்தை தீர்த்துக்கொள்ள பல ஆங்கில புத்தகங்களைத் தான்  மேற்கோள் காட்டி இருக்கிறார்.
மனித வர்க்கத்தின் மிகப் பழமையான கலாச்சாரம் பாரத மக்களின் கலாச்சாரம்.
இந்த கலாச்சாரத்துக் குரிய வித்து இங்கு உருவான வேதங்கள். வேதம் உருவான காலம் தெரியாது. வருடம் தெரியாது. மொழி சமஸ்கிருதம். வடிவம் கவிதை வடிவம். பாதுகாத்தவழி வாய்வழி, செவிவழி.
புத்தகமாக அச்சடிக்கப்பட்ட காலம் 1850 வாக்கில். இந்த தத்துவத்தின் ஆழத்தையும் ஆச்சரியத்தையும் அறிந்த ஐரோப்பியர்கள் மிகுந்த சிரமப்பட்டு சமஸ்கிருதம் கற்று இந்திய வேத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பல புத்தகங்களாக அச்சிட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு விரும்பிய மொழியை கற்பதில் அரசியல். விரும்பிய கலாச்சாரத்தை பேணுவதில் அரசியல். விரும்பிய தெய்வத்தை வழிபடுவதில் அரசியல். ஆனால் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் வேதம். வேதத்தை ஏற்பவர்கள், வேதத்தை எதிர்ப்பவர்கள் என்கிற இரு வகையினர். இன்று பாரதம் முழுவதும் உள்ள கலாச்சாரத்தின் வித்தாக இருப்பதும், ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் அனைவர்  இரத்தத்தில் கலந்திருப்பதும் வேதத்தின் சாரம் தான்.  மேலை நாடுகள் இந்திய கலாச்சாரமே சிறந்தது என்று பேசுகிறார்கள். அரசியல் சூழலால் நாம் நமது கலாச்சாரங்களை இழந்து வருகிறோம்.          –--------------------------------


Thursday, 15 November 2018

திருமூலர் காண்பித்த கடவுள்

திருமூலர் மிகப்பழமையான ஒரு தமிழ் நாட்டு ஞானி. அவர்  வாழந்த காலம் சரியாகத் தெரியாது. 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள். திருமூலர் தான் கண்டு அனுபவித்த கடவுளை பற்றி தனது பாடல்களில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

 அணுவை ஆயிரம் கூறாக உடைத்து அந்த துகள்களுக்குள் நடக்கும் இயக்கத்தை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அணுத்துகள்களை தான் சிவம் என்று உணருகிறார். அந்த துகள்களுக்குள்  நடக்கும் இயக்கத்தை சிவசக்தி என்று தெளிவடைகிறார்.

கீழ் வரும் அவரது பாடல்களை படியுங்கள்.

அணுவின் அணுவினை ஆதிபிரானை
அணுவின் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவிலார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே.

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
காணுவற நின்று கலப்பது உணரார்
இணையிலி யீசன் அவனெங்குமாகி
தணியற  நின்றான் சராசரமாமே.

எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.

ஆதிபடைத்தனன் ஐம்பெரும்பூதம்
ஆதிபடைத்தனன் ஆசில் பல்ஊழி
ஆதிபடைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதிபடைத்தவை  தங்கி நின்றானே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின்  மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.

சிந்தையது என்ன சிவன் என்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய, தெளிய வல்லார்க்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லாத இடமில்லை- காணுங்கால்
கண்காணியாக கலந்தெங்கும் நின்றானை
கண்காணி கண்டார்  களவொளிந்தாரே.

நெறியைப் படைத்தான்  நெறிஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெறிஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்குவார்க்கு
நெறியில் நெறிஞ்சில் முள் பாய்கிலாவே.

நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும்  இல்லை
நடுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின்றார் வழி நானும் நின்றேனே.

நிற்கின்ற போதே நிலையுடன் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றி தொழுமின் தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்காமே.

பெறுதற்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறிழந்தாரே.

ஆர்க்கும் இடுமின் அவர்இவர் என்னென்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காகம் கரைந்துண்ணும் காலம் அறிமினே.

மேலுள்ள பாடல்கள்  நன்கு புரியும் போது மனம் கடவுளை தீர்மானிக்கும்.

சிதம்பரத்தில் இப்போதிருக்கும் கோவிலை பதஞ்சலி முனிவர் வடிவமைத்துக் கொடுத்தார். சிதம்பரம் கோவிலி லிருக்கும் நடராஜர் சிலையை திருமூலர் வார்த்துக்கொடுத்தார்.

ஸ்விட்சர்லாந்து CERN நிறுவனத்தில் 2000 உலக விஞ்ஞானிகள் ஒன்று கூடி அணுவை உடைத்து துகள்களாக்கி  அதனுள் இருக்கும் சக்தியை ஆராய பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த துகள்களுக்கு கடவுள் துகள் ( GOD's Particle ) என்று பெயருட்டிருக்கிறார்கள்.அந்த ஆராய்ச்சி கூடத்தில் திருமூலரின் 6 ஆடி நடராஜர் சிலையை நிறுவி இருக்கிறார்கள். அணுத்துகள் களினுள் நடக்கும் இயக்கமும் திருமூலரின் நடராஜ நடன தத்துவமும் ஒரேமாதிரி யாக இருப்பதாக உலக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலகில் எல்லாப்பொருளுக்கும் சக்தி இருக்கிறது. பொருள் கண்ணனுக்கு தெரிகிறது. சக்தி கண்ணுக்கு தெரிவதில்லை. இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருள்களும் அணுத்துகள் களினால் ஆனது. சூரியன், சந்திரன், மண், நீர், நெருப்பு, காற்று,ஆகாயம்  என சகலதும் அணு துகள்களால் நிறைந்தது.

அணுத்துகளின் உள்   நடக்கும் இயக்கம் தான்  கடவுள். பிரபஞ்சத்தில் அணுத்துகள் இல்லாத இடமேயில்லை. அதாவது கடவுள் இல்லாதே இடமே இல்லை. அதை எப்படி எல்லோரும் புரிந்து கொள்வது. அதற்குத்தான் நடராஜர் வடிவத்தை திருமூலர்  வடிவமைத்து கொடுத்தார். திருமூலரைப்போல்  தமிழ் நாட்டில் பல ஞானிகள் கண்ணனுக்கு தெரியாத இறைவனை தெளிவாக உணர்ந்து சாதாரண மக்களுக்கு போதித்து வந்திருக்கிறார்கள்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
 அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.
எல்லாம் சிவமயம்

மனிதன் கூறும் இயற்கையின் நியதிகள், நம்பிக்கை, பிரார்த்தனை, சாபம், பாவம், புண்ணியம், சரண், அருள் என்பதற்கும்  அணுத்துகள் களின் இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே திருமூலர் பாடல்கள் கூறுகின்றன.

கடவுளை இல்லை என்று மறுப்பதும் கடவுள் துகள்களே. இரவு-பகல், வெப்பம்-குளிர்  போல. அவரவர் கொள்கையில் உண்மையாய்  இருந்தால் போதும். ஒருவரை ஒருவர் கட்டாயப்  படுத்தாமலும், விமர்சனம் செய்யாமலும் இருந்தாலும்  போதும். உலகம் அமைதியாய் போய்க்கொண்டிருக்கும்.

கடவுளை பயன் படுத்திக்கொள்வதே சிறந்தது. 

ஓம் நமசிவாய ! ஓம் சிவாய நம !   






Thursday, 3 May 2018

சைவசித்தாந்தம்

என்னை நினை. என்னை நம்பு.
என்னை சரணடை. என்னை சார்ந்து விடு.
நானே காரணம் . நானே பின் விளைவு.
நானே செயல். நானே பலன்.
நான் என்பது தூய்மை, எளிமை, கருணை, நியாயம்.
நான் அல்லாதவை ஆணவம், சுயநலம், பொறாமை, பொய்.
நான் இருப்பதும் மனத்துள். நான் அல்லாதவை இருப்பதும் மனத்துள்.
நான் அநாதி. நான் அல்லாதவையும் அநாதி.
செடிக்குக்காரணம் வித்து. வித்துக்குக்
காரணம் செடி.
நான் அல்லாதவைக்குக் காரணம் நான்.
நான்-க்குக் காரணம் நான் அல்லாதவை.
நான் நிலைத்த சக்தியானவன். நான் அல்லாதவை நிலையாத சக்தியானவன்.
நான் விரிந்து பரந்து கலந்து கிடக்கும் இறைவன். நான் அல்லாதவை கவர்ச்சி போதை சொகுசால் நிறைந்திருக்கும் மாயை.
நான் பற்றைத்தருவதில்லை. நான் அல்லாதவை நிறைவைத் தருவதில்லை.
என்னை கற்றுக் கொள். என்னை  கற்றுக் கொடு.
அதுதான் இட்ட வாழ்க்கை. அதுதான் முடிவான முடிவு.

" ஆடம்பரம் ஆணவம் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போல திரி." பட்டினத்தார்.
                            –––
நேரம் ஒதுக்குங்கள்

இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். பகவானை வழிபடாத நாளெல்லாம் பட்டினி கிடந்த நாளாகும் என்றார் ஒரு பெரியவர். எவ்வளவுதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பகவானை நினைக்கவில்லை என்றால் அவன் பட்டினி கிடந்தவனுக்கு ஒப்பாவான்.

மனிதன் தன்னுடைய 20 ஆண்டு காலத்தை ஓடுவதும், ஆடுவதுமாக பொறுப்பின்றி கடந்து விடுகிறான். அடுத்து 20 ஆண்டுகளுக்கு குடும்பம், பிள்ளை குட்டி என்று பாடுபடுகிறான், பணம், பொருள் சேர்க்கிறான். அதன் பிறகு தான் தன்னைப் பற்றி நினைக்கிறான்.

அடடா! நமக்கு வயதாகி விட்டதே! இதுவரையில் ஆத்ம பலத்துக்கு என்ன செய்தோம்! ஒரு கோவிலுக்குப் போனோமா! காசிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போனோமா! வீடு வீடென்றே அலைந்து நாட்களைக் கழித்து விட்டோமே! இனி, உடம்பிலும் தெம்பு இல்லையே! தனியே துணையில்லாமல் ஒரு இடத்துக்குப் போய் வரமுடியுமா? என்றெல்லாம் ஏங்குவார். இது காலம் கடந்த ஞானோதயம்.

இன்னும் கொஞ்சம் வயதானால் இன்னும் உபத்ரவம் தான்! கண் பார்வை மங்கி விடும்: காது மந்தமாகி விடும் எழுந்து நடக்க முடியாது. இருமலோ, அஸ்துமாவோ, சர்க்கரை வியாதியோ ஏதோ ஒன்று இவனை ஆட்கொண்டு விடும். இவனை சதா காலமும் யார் கவனித்து பணிவிடை செய்து கொண்டு இருப்பர்!

சில இடங்களில் இப்படிப்பட்ட வயோதிகரை ஒரு மனிதராகக் கூட மதிக்க மாட்டார்கள். இவர் பாடுபட்டு உழைத்தது, பணம், பொருள் சம்பாதித்து வைத்தது எல்லாவற்றையும் மறந்து விடுவர்: இவரை ஒரு சுமையாகவே நினைப்பர்.

சிலர் இவரது ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து ஆயுள் பலம் எப்படி இருக்கிறது என்று கேட்பர் இப்படிப்பட்ட வாழ்வு வேண்டாம் என்றனர் பெரியோர்.

ஒரு சுலோகம் உண்டு. அதன் பொருள் பரமேஸ்வரா! எனக்கு துன்பமில்லாத மரணம் வேண்டும்! பிறருக்கு கை கட்டி சேவகம் செய்யாத வாழ்வு வேண்டும்: படுத்த படுக்கையில் நீண்ட காலம் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், சிரமமில்லாத மரணத்தைக் கொடு!

எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கிறது? அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! வாழ்நாளில் ஒரு பாதியை தெய்வ வழிபாட்டுக்கு ஒதுக்கி விட வேண்டும். சினிமா பார்க்கவும், சீட்டாடவும் நேரம் ஒதுக்கவில்லையா? உலகில் காண்பதும், அனுபவிப்பதும் நிரந்தரமானதல்ல; மாயை தான்! இதை நாம் உணரவேண்டும். இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்
இம்மையில் மட்டுமல்ல மறுமைக்கும் சேர்த்து மகிழச்சியைத் தேடுங்கள். பணத்தையும் புகழையும் அறவழியில் தேடுங்கள். லாபம் குறைவாக இருக்கும் ஆனால் நிமிர்ந்த நடையைத் தரும். இறைவனை கற்றுக் கொள்ளுங்கள். இறைவனை குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.

Tuesday, 1 May 2018



கடவுளை எங்கே காணவில்லை.?
மரத்தில் செய்த யானையைப் பார்த்து குழந்தை அம்மாவை கட்டிப் பிடித்துக் கொள்கிறது.
அம்மாவோ அது மரம் தானே பயப்படாதே என்கிறாள். குழந்தைக்கு யானை என்று  தெரிவது அம்மாவுக்கு சிந்தையால் மரம் என்று தெரிகிறது.
உலகப் ( காட்சிகளை)பொருட்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு அவற்றிற்கு காரணமான பரம்பொருள் ( இறைவன்) தெரிவதில்லை. சிந்தையால் இறைவனை உணர்ந்தவர்களுக்கு உலகப் பொருட்களால் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. உலகப் பொருள் மீதுள்ள ஈடுபாட்டை விடமுடியாமல்  இறைஉணர்வு அனுபவம் தேடி அலையும் நம்மால் இறைவனை காணமுடியாது. திரை விலகினால் காட்சி தெரியும் என்பது போல ஈடுபாடு விலகினால் இறைவன் தென்படுவான் என்கிறார் திருமூலர்.
இதற்கு புளியங்காயையும் புளியம் பழத்தையும் உதாரணமாகச் சொல்லுவார்கள்.புளியங்காயானது ஓட்டுடன் பிரிக்க முடியாதபடி ஒட்டி இருக்கும். அதுபோல் நாம் உலகப் பொருட்களுடன் ஒட்டி இருக்கிறோம்.
புளியம்பழமானது தோட்டுக்குள் இருந்தாலும் தோட்டில் ஒட்டாமல் இருக்கும். திருமுறை பாடிய ஞானிகள் புளியம் பழம் போல் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் கோடீஸ்வர காரைக்குடி செட்டியாரான  படடினத்தார் ஆவர். திடீரென துறவியாகி வீட்டை விட்டு வெளியேறினார்.
இறைசக்தி பெற்றார். இறைசக்தி பெற அவர்கூறும் வழி.

உடை கோவணம் உண்டு உறங்க புறந் திண்ணையுண்டு உணவிங்கு
அடைகாய் இலையுண்டு அருந்த தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த பேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.
                                        பட்டினத்தார்.

மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தின் மறைந்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
                                      திருமூலர்.

ஆடம்பரமாய் வாழ அனைவரும் விரும்புகிறோம். அதன் மூலம் சந்ததிகள் வாழ்வை கடினமாக்குகிறோம்.
நிலவளம், நீர் வளம்,தென்றல் வளம், குளர்ச்சி வளம் அனைத்தும் கெடுவதை உணர்கிறோம்.
ஞானிகள் கூறிச்சென்ற வழிகளை மறந்தோம்.

இந்த உலகம் செழிப்பாய் இருப்பதற்கும்  செழிப்பு அழிந்து போவதற்கும் மனிதகூட்டமே காரணம். இன்ப வாழ்விற்கும் துன்ப வாழ்விற்கும் மனித கூட்டமே காரணம். தெய்வம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கிறது. உலகம் செழிப்பாய் இருக்கவும் வறண்டுபோகவும் மனித கூட்டமே காரணம். இதைத்தான் திருமூலரும் உறுதியாய் சொல்கிறார். அன்பே சிவம் என்றார்.
            ______________________